Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 18, 2016

குஜராத் மாநில கலவரம் 69 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை சாகும்வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு


குஜராத் மாநிலம் குல்பர்க் சொசைட்டி யில் 69 பேர் உயிரோடு எரித்துக்கொல்லப் பட்ட வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம், கோத்ராவில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நடத்தப்பட்ட ரெயில் எரிப்பு சம்பவத்தில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து திரும்பிய 58 இந்து கரசேவகர்கள் கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினருக்கு எதிராக கலவரம் வெடித்தது.

69 பேர் எரித்துக்கொலை

மறுநாளான 28-ந்தேதி தலைநகர் ஆமதாபாத் நகரின் மையப்பகுதியான சமன்புராவில் உள்ள ‘குல்பர்க் சொசைட்டி’ குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 400 பேர் அங்கிருந்த முஸ்லிம்களை கடுமையாக தாக்கினர். பலருடைய வீடுகளை தீ வைத்தும் கொளுத்தினர்.

இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி உள்பட 69 பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டனர். ஏராளமானோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவங்களின்போது மாநில முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார்.

24 குற்றவாளிகள்

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்துக்கு பின்பு குஜராத்தில் நடந்த 9 கொடூர தாக்குதலில் குல்பர்க் சொசைட்டி சம்பவமும் ஒன்றாகும். இந்த படுகொலையை சுப்ரீம் கோர்ட்டு நியமித்த சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வந்தது.

இந்த படுகொலைகள் தொடர்பாக விசுவ இந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான அதுல் வைத்யா உள்பட 66 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஆமதாபாத் தனிக்கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு நடந்த காலகட்டத்தில் 5 பேர் இறந்துவிட்டனர். ஒருவர் காணாமல் போய்விட்டார்.

கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 2-ந்தேதி நீதிபதி பி.பி. தேசாய் 24 பேர் குற்றவாளிகள் எனவும், அவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அறிவித்தார். 36 பேரை கோர்ட்டு விடுதலை செய்தது.

சிறப்பு விசாரணை குழுவின் வக்கீல் ஆர்.சி.கோடேகர் இறுதி வாதத்தின்போது, குற்றவாளிகள் 24 பேருக்கும் மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

11 பேருக்கு ஆயுள்தண்டனை

குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 24 பேருக்கும் நேற்று தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார்.

அதன்படி கைலாஷ் தோபி, யோகேந்திர செகாவத், ஜெயேஷ் ஜின்கார், கிருஷ்ணா கலால், ஜெயேஷ் பார்மர், ராஜூ திவாரி, பாரத் ராஜ்புத், தினேஷ் சர்மா, நாராயண் தாங்க், லக்கன் சிங் சூடசாமா, பாரத் தைலி ஆகிய 11 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

மங்கள் ஜெயின் என்பவருக்கு 10 ஆண்டு தண்டனையும், அதுல் வைத்யா உள்ளிட்ட மற்ற 12 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிபதி பி.பி. தேசாய் தனது தீர்ப்பில் கூறியதாவது:-

சாகும்வரை...

குல்பர்க் படுகொலை சம்பவம், நாகரிக சமுதாய வரலாற்றில் மிகப்பெரிய கருப்பு தினம் ஆகும். இந்த கொடிய குற்றத்தில் ஈடுபட்ட 11 குற்றவாளிகளுக்கும் காலவரையின்றி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் மிகவும் கொடிய குற்றச்செயலில் ஈடுபட்டு உள்ளனர். எனவே, சாகும்வரை அவர்கள் சிறையிலேயே தண்டனையை அனுபவிக்கவேண்டும். இந்திய தண்டனைச் சட்டத்தில் 14 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. அதை பறிக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால் இதில் கோர்ட்டு உத்தரவு மாநில அரசை கட்டுப்படுத்தாது.

அதேநேரம் மாநில அரசு இவர்களை மன்னிக்க விரும்பும் அதிகாரத்தை பயன்படுத்த விரும்பவில்லை என்றால் குற்றவாளிகள் அனைவரும் சாகும்வரை சிறையிலேயே தண்டனையை அனுபவிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேல்முறையீடு

தனிக்கோர்ட்டில் தீர்ப்பு பற்றி சிறப்பு விசாரணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஆர்.கே. ராகவன் கூறுகையில், இது வரவேற்கத்தக்க தீர்ப்பு என்று குறிப்பிட்டார்.

படுகொலை செய்யப்பட்ட இஷான் ஜாப்ரியின் மனைவி ஜக்ரியா, குற்றவாளிகள் அனைவருக்குமே நீதிபதி ஆயுள்தண்டனை வழங்கி இருக்கவேண்டும் என்றார்.

அவருடைய மகன் தன்வி ஜாப்ரி, “தீர்ப்பில் சில உணர்வுகளுக்கு முடிவு கட்டுப்பட்டு உள்ளது. எனினும், இந்த வழக்கில் பலரை கோர்ட்டு விடுவித்துவிட்டது. அவர்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்“ என்றார்.

சிறப்பு விசாரணைக்குழு அதிருப்தி

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கருணை காட்டப்பட்டு உள்ளது என்று சிறப்பு விசாரணைக் குழுவின் சார்பில் வழக்கில் ஆஜராகி வாதாடிய வக்கீல் ஆர்.சி.கோடேகர் அதிருப்தி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

தீர்ப்புக்கு முன்பாக குற்றவாளிகள் 24 பேருக்கும் மரண தண்டனை அல்லது சாகும்வரை ஆயுள்தண்டனையை அனுபவிக்குமாறு தீர்ப்பளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தோம். ஆனால் சாகும்வரை தண்டனை என்ற முழுமையான பிரிவு இதில் சேர்க்கப்படவில்லை. தவிர, 12 பேருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. இது மிகவும் குறைவானது. இவர்களுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகளாவது தண்டனை வழங்கப்பட்டு இருக்கவேண்டும். இந்த தீர்ப்பில் நாங்கள் சமாதானம் அடையவில்லை. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.