Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2016

ஆண்போல் டிப்–டாப் உடையணிந்து திருமண மண்டபத்தில் திருடிய இளம்பெண் கைது


புதுவையில் திருமண மண்டபத்தில் ஆண்போல் உடையணிந்து புகுந்து திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருமண மண்டபத்தில் திருட்டு
புதுவை பெருமாள்கோவில் வீதியை சேர்ந்த கார்த்திகேயன் மகள் திருமணம் சித்தன்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 8–ந்தேதி நடந்தது. அப்போது மண்டபத்திற்குள் புகுந்த மர்ம நபர் யாரோ அங்குள்ள அறைக்குள் புகுந்து ரூ.75 ஆயிரம் ரொக்க பணம், 2 செல்போன்கள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திருமண மண்டபத்தில் உள்ள பதிவான கேமிரா காட்சிகள் மூலம் திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அதுமட்டுமில்லாமல் திருட்டுபோன செல்போன் மூலமும் திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் திருமண மண்டபத்திற்குள் புகுந்து திருடியவர்கள் மீண்டும் கைவரிசை காட்டலாம் என்ற எண்ணத்தில் புதுவை நகரப்பகுதியில் உள்ள முக்கியமான திருமண மண்டபங்களில் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

பெண் மீது சந்தேகம்
இந்தநிலையில் திருட்டுப்போன செல்போனில் வேறு ஒரு சிம்கார்டை பொருத்தி பயன்படுத்துவது போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த செல்போன் சிக்னலை வைத்து துப்பறிந்தனர். அப்போது அந்த செல்போன் சிக்னல் அடிக்கடி குண்டுபாளையம் பகுதியை காட்டியது.

இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் செல்போன் சிக்னல் காட்டிய பகுதிக்கு சென்று அங்கிருந்த இளம்பெண் ஒருவரிடம் விசாரித்தனர். அப்போது அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கைது
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான் அந்த பெண் கடந்த 8–ந்தேதி திருமண மண்டபத்தில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் விசாரித்தபோது அந்த பெண் புதுவையை அடுத்த தமிழக பகுதியான இடையஞ்சாவடி மாரியம்மன்கோவில் கோவில் தெருவை சேர்ந்த சீனுவாசன் மகள் மீனா என்ற தமிழ் (26) என்பது தெரியவந்தது. மீனாவை கைது செய்த போலீசார் ரூ.70 ஆயிரத்து 250 ரொக்கப்பணம், மற்றும் 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

ஆண்கள்போல்...
கைது செய்யப்பட்ட மீனா என்ற தமிழ் திருமண மண்டபங்களில் டெக்கரேசன் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவ்வாறு திருமண மண்டபங்களில் பணி செய்த அவர் அவ்வப்போது தனது கைவரிசையை காட்டி வந்துள்ளார். மேலும் இவர் ஆண்கள் போன்று ஜீன்ஸ் பேண்ட், டீ–சர்ட் அணிந்தே எப்போதும் காணப்பட்டார்.

திருமண மண்டபங்களிலும் இவர் ஆண்கள் போன்றே உடையணிந்து வலம் வந்துள்ளார். முகூர்த்த நேரங்களில் இவர் திருமண வீட்டார் தங்கியிருக்கும் அறைக்கு சென்று கைவரிசையை காட்டுவாராம். இவர் மீது ஏற்கனவே கோரிமேடு காவல்நிலையத்தில் மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

திருமண மண்டபத்தில் திருடிய பெண்ணை கைது செய்த போலீசாரை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினார்கள். கைதான மீனா நேற்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.