Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2016

பிரியும் பெற்றோர்.. பிரச்சினையில் குழந்தைகள்..


– பெற்றோரான உங்கள் மீது அதிக அக்கறை காட்டாமல் குழந்தை மற்றவர் மீது பிரியமாக உள்ளதா?

– குழந்தைகள் நிறைய நேரத்தை தனிமையில் கழிக்கிறார்களா?

– பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்கிறீர்களா?

– துணைவரின் பிரிவால் குழந்தையை வளர்க்க சிரமப்படுகிறீர்களா?

இப்படிப்பட்ட பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று இருந்தால்கூட, தொடர்ந்து படியுங்கள். இது உங்களுக்கான விஷயம்தான்!

பெற்றோரின் விவாகரத்து பிரிவால் தாயால் மட்டும் வளர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துக்கொண்டிருக் கிறது. அவர்கள் தனிமைப்படும் சூழ்நிலை உருவாகிறது. தனிமையானது குழந்தைகளின் மனோநிலையில் விபரீத மாற்றங்களை உருவாக்குகிறது.

‘தாங்கள் சம்பாதிப்பதே குழந்தைகளுக்குத்தான்’ என்று ஓய்வின்றி உழைக்கும் பெற்றோர்கள் இன்று பெருகிவிட்டார்கள். உழைப்பதில் பெரும்  பகுதியை குழந்தைகளுக்காக சேமித்து வைக்கிறார்கள். அப்படி சேமிப்பில் செலுத்தும் கவனத்தை குழந்தைகள் மீது செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. அதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. கணவன்– மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் பிள்ளைகள் தனிமையில் தவிக்கவிடப்படலாம். மற்றொரு வகையில் பெற்றோர் விவாகரத்து பெறுவதால் தாய் அல்லது தந்தை யாராவது ஒருவரது கண்காணிப்பில் குழந்தைகள் வளர்வதாலும் குழந்தைகள் தனிமைக்கு தள்ளப்படலாம்.

இவை தவிர, புதிய பள்ளிக்கு மாற்றுதல், வீடு மற்றும் இடம் மாறுவதால் ஏற்படும் உறவு இழப்புகள் கூட குழந்தைகளை தனிமைப்படுத்தும். குழந்தைகளுக்கு பிடித்த செல்லப்பிராணிகள் அல்லது உறவுகளின் பிரிவு–மரணம், பொருட் களை இழத்தல் ஆகியவற்றாலும் அவர்கள் மனதளவில் தனிமைப்படுவார்கள். வெட்கம், கவலை, தன்னம்பிக்கைக் குறைவு போன்றவைகளால் மற்றவர்களால் புறக்கணிக்கப்படும்
போதும் தனிமை விரும்பிகளாய் மாறலாம்.

வாழ்வின் யதார்த்தங்களை புரிந்து கொள்ளத் தெரியாத சின்னஞ்சிறு குழந்தைகள் தனிமையில் தவிக்க விடப்படும்போது எதிர்கொள்ளும் இன்னல்கள் பல. அதை அவர்களால் சொல்ல முடியாது. தனிமையின் தாக்கம் ஏற்படுத்தும் சோகங்களும், விளைவுகளும் கொடியவை. அது அவர்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும்.

கொடிய தனிமையை கண்டுபிடிக்கவும், சரி செய்யவும் வழிகள் உண்டு!

கண்டுபிடிக்கும் வழிகள்:

* குழந்தைகள் ஒருசில மணி நேரமே தூங்கினாலும் அல்லது நீண்ட நேரமாக தூங்கிக்கொண்டே இருந்தாலும் அவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

* மற்ற குழந்தைகள் மீது எரிந்து விழுவது, உறவினர்களிடம் இருந்து ஒதுங்குவது, எளிதில் கோபப்படுவது போன்றவையும் தனிமை பாதிப்பின் அறிகுறி கள்தான்.

* சோர்வு, கவலை, பயம், பாதுகாப்பற்ற தன்மை போன்றவை அதிகம் ஏற்படுவதும் தனிமையின் பாதிப்பால் உருவாகலாம்.

* சுற்றுப்புறத்தில் நிகழும் விளையாட்டுகள், பொழுதுபோக்குகள், விழாக்கள் போன்ற எதிலும் நாட்டமின்றி இருத்தல், மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் இருப்பது போன்றவைகளும் தனிமை அறிகுறிகளாகும்.

* ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்ட சமூக பண்புகள் குறைவாக இருப்பவர்களும் தனிமையால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.

குழந்தைகளை மீட்டெடுப்பது எப்படி?

* குழந்தைகளின் உடல்நலம், மனநலம், குணாதிசயங்கள், விளையாட்டு, கல்வி, மற்றவர்களோடு அவர்கள் பழகும் விதம், பழக்க வழக்கங்கள், ஆழ்மனதின் சிந்தனைகள், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் இவைகளையெல்லாம் பெற்றோர் உற்றுக்கவனிப்பது மிக அவசியம்.

* தனிமை விரும்பிகளாகவும், மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாகவும் அறியப்படும் குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும் தனிக்கவனம் செலுத்தி வழிநடத்த வேண்டும்.

* தனிமையை விரும்புகிறார்கள் என்று தனியே விளையாட அனுமதித்தால் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். முரட்டுத்தனம், பொறாமை, பிடிவாதம் போன்றவை அவர்களிடம் அதிகம் இருக்கும். சமூகத்தோடும் அவர்கள் நெருங்கி வரமாட்டார்கள்.

* குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலம் தனிமைத் துயரில் இருந்து மீட்டெடுக்க முடியும். சுற்றுலா செல்லுதல், செல்லப்பிராணிகளை வளர்த்தல், பொது இடங்களுக்கு சென்றுவருதல், விளையாட்டுகளில் பங்கெடுக்க வைத்தல், நண்பர்களுடன் குழுவாக இருக்கப் பழக்குதல் ஆகியவற்றின் மூலம் குழந்தைகளை வாட்டும் தனிமையை விரட்டலாம்.

* நேர்மறை எண்ணங்களை ஊக்குவித்தல், சமூக உறவுகளின் அவசியத்தை உணர்த்துதல் மூலம் தனிமையைபோக்கலாம்.

* ‘மற்றவர்களுக்கெல்லாம் அம்மா, அப்பா என்று இருவர் இருக்கும்போது எனக்கு மட்டும் ஒருவர்தானே இருக்கிறார்!’ என்று பெற்றோரில் ஒருவரை இழக்கும் குழந்தை எண்ணலாம். குழந்தைகளுக்கு அந்த இழப்பு தெரியாமல் இருக்க, குழந்தைகளின் விஷயத்திற்காக மட்டுமாவது பெற்றோர் சேர்ந்து முடிவெடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவேண்டும்.

தனிமை தரும் சோகங்கள்!

* தனிமை மன அழுத்தத்தை உருவாக்கும். அதனால் குழந்தைகளின் மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படும்.

* குழந்தைகளின் கற்கும் ஆற்றலும், நினைவுத்திறனும் குறையும்.

* முடிவெடுக்கும் திறன் குறைந்தவர்களாக மாறுவார்கள்.

* சமூக விரோத பண்புகள் அதிகரிக்கும். எதிலும் முரண்பட்டு நிற்பார்கள்.

* மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் சூழ்நிலை அதிகம்.

* தனிமை பாதிப்புகள் தீவிரமாகும்போது இதய கோளாறுகளும், பக்கவாதமும் ஏற்படலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.