Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

அணுசக்தி வழங்கும் குழுமத்தில் சேரும் பிரச்சினை இந்தியாவுக்கு எதிராக சீனா முட்டுக்கட்டை


அணு சக்தி வழங்கும் குழுமத்தில் இந்தியா சேருவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் சீனாவின் முட்டுக்கட்டையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அணுசக்தி வழங்கும் குழுமம் 

உலகளவில் அணு ஆயுதப்பரவலுக்கு எதிரான என்.எஸ்.ஜி. என்னும் அணுசக்தி வழங்கும் குழுமத்தில் உறுப்பு நாடாக சேர வேண்டும் என்பது இந்தியாவின் கனவு. இதற்கான விண்ணப்பத்தை இந்தியா அளித்துள்ளது.

48 நாடுகளை கொண்டுள்ள இந்த அமைப்பில் இந்தியா சேருவதற்கு, அமெரிக்கா தனது உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளது. எதிர்ப்பு குரல் கொடுத்து வந்த மெக்சிகோ, சுவிட்சர்லாந்து நாடுகளும் கூட இந்தியாவின் பக்கம் சாய்ந்து உள்ளன.

சீனா முட்டுக்கட்டை 

ஆனாலும் இந்தியா சேருவதில் முட்டுக்கட்டை போட்டு, தனது எதிர்ப்பு நிலையில் சீனா உறுதியாக இருப்பதாக வியன்னாவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விண்ணப்பங்கள் குறித்து நேற்று வியன்னாவில் மூடிய அரங்கில் நடந்த ஆலோசனையின்போது இந்தியாவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை சீனா மேலும் இறுக்கிக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பல நாடுகள் எதிர்ப்பு 

சீனாவுடன் நியூசிலாந்து, அயர்லாந்து, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளும் இந்தியா உறுப்பினர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக வியன்னாவில் இருந்து வரும் தகவல்கள் மேலும் கூறுகின்றன.

என்.எஸ்.ஜி. அமைப்பின் பேரவை கூட்டம் வரும் 20–ந்தேதி வியன்னாவில் நடக்கிறது. அப்போதுதான் இந்தியாவின் விண்ணப்பம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஆனாலும் இந்தியா இதில் உறுப்பினர் ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரியவில்லை.

48 நாடுகளும் ஆதரிக்க வேண்டும் 

ஏனென்றால் இந்தியா மட்டுமல்ல, எந்த ஒரு நாடும் இந்த அமைப்பில் உறுப்பு நாடு ஆக வேண்டுமென்றாலும், தற்போதைய உறுப்பினர்களான 48 நாடுகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. அதாவது 48 நாடுகளுக்கும் மறுப்பு ஓட்டு அதிகாரம் உள்ளது. ஒரு நாடு மறுத்து விட்டாலும், உறுப்பினர் ஆக முடியாது.

எனவே சீனா உள்ளிட்ட நாடுகள் இறங்கி வந்து ஆதரவு தெரிவித்தால் மட்டுமே, என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினர் ஆக முடியும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.