Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

சென்னை பெண் குளிக்கும்போது ஆபாசமாக படம் எடுத்து ‘பேஸ்புக்’கில் வெளியிட்டவர் கடத்தி கொலை; பெண்ணின் கணவர் உள்பட 2 பேர் கைது


சென்னையில் பெண் குளிப்பதை ஆபாசமாக படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபரை கடத்தி கொலை செய்தனர். இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுவை வாலிபர்

புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகன் கவாஸ்கர் (வயது 29). இவருடைய தாய் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் கவாஸ்கர் சென்னை ராயபுரத்தில் உள்ள பாட்டி பட்டு வீட்டில் வளர்ந்து வந்தார். கல்லூரியில் சேர்ந்த அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.

பக்கத்து வீட்டில் அன்பு (43) என்பவர் வசித்துவந்தார். இவர் கப்பல் வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை அனுப்பும் முகவராக வேலைபார்த்து வந்தார். அவரது மனைவி நந்தினி. கவாஸ்கர் அன்பு மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் மிகவும் நெருங்கி பழகிவந்தார்.

குளிக்கும்போது படம் எடுத்தார்

அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் பழக்கம் உள்ள கவாஸ்கர், ஒரு நாள் அன்புவின் மனைவி நந்தினி குளிக்கும்போது அதை செல்போனில் படம் எடுத்து, அவரிடம் காண்பித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி நந்தினி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் கவாஸ்கரை எச்சரித்து அங்கிருந்து விரட்டிவிட்டனர். பின்னர் புதுச்சேரி வந்த கவாஸ்கர், பிள்ளையார்குப்பத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு ஊழியர்களுக்கான குடியிருப்பில் தங்கியிருந்து, வேலைக்கு சென்று வந்தார். அங்கிருந்தபடியே நந்தினி பெயரில் போலியாக பேஸ்புக் முகவரியை தொடங்கினார். அதில் நந்தினி படங்களை ஆபாசமாக உருமாற்றம் செய்து வெளியிட்டார். மேலும் அந்த பேஸ்புக் முகவரியில் இணைந்த நண்பர்களிடம் நந்தினியின் ஆபாச படத்தை ஷேர் செய்துள்ளார்.

காரில் கடத்தல்

நந்தினியின் உறவினர்கள் சிலர் நந்தினியின் ஆபாச படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து அன்புவிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அன்பு, கவாஸ்கரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். கடந்த 25-ந்தேதி அதிகாலை அன்பு, அவருடைய மனைவி நந்தினி, ராயபுரத்தை சேர்ந்த மீன் வியாபாரி கார்த்திக் (25) மற்றும் புகழேந்தி ஆகிய நான்கு பேரும் ஒரு காரில் கிருமாம்பாக்கம் சென்றனர்.

அங்கு கவாஸ்கரை சமாதானம் செய்து காரில் சென்னைக்கு அழைத்துச்சென்றனர். வழியிலேயே அன்பு மற்றும் அவருடன் வந்தவர்கள் கவாஸ்கரை சரமாரியாக தாக்கினர். அவருடைய கை, கால்களை கட்டி, மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு புதர் பகுதிக்கு கவாஸ்கரை இழுத்துச் சென்றனர்.

தூக்கில் தொங்கவிட்டு கொலை

அங்கு அவரது கழுத்தில் கயிறால் சுருக்கு போட்டு, உயிருடன் ஒரு மரத்தில் தொங்கவிட்டனர். சிறிது நேரத்திலேயே கவாஸ்கர் கழுத்து இறுக்கி துடிதுடித்து செத்தார். பின்னர் அன்பு மற்றும் அவருடன் வந்தவர்கள் சென்றுவிட்டனர்.இந்நிலையில் கவாஸ்கரின் குடும்பத்தினர் அவரை தொடர்பு கொண்டபோது அவருடைய ‘செல்போன் சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கவாஸ்கரின் உறவினர் மதிவாணன் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பெண்ணின் கணவர் கைது

விசாரணையில், சென்னை ராயபுரத்தை சேர்ந்த அன்பு (43), அவரது மனைவி நந்தினி உள்ளிட்ட 4 பேர், கவாஸ்கரை காரில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து 2 தனிப்படை அமைத்து கவாஸ்கரை தேடி வந்தனர். வீராம்பட்டினம் பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அன்புவை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார்.அன்பு கொடுத்த தகவலின் பேரில், போலீசார் மீன் வியாபாரி கார்த்திக்கையும் கைது செய்தனர். போலீசார் பட்டிபுலம் பகுதிக்கு சென்று தூக்கில் தொங்கிய கவாஸ்கர் உடலை கைப்பற்றினர். கொலை நடந்து 14 நாட்கள் ஆகிவிட்டதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

தலைமறைவாக உள்ள நந்தினி, புகழேந்தி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.