Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 3, 2016

ஜன்னலை உடைத்து துணிகரம்: சென்னை தொழில் அதிபர் வீட்டில் ரூ.1 கோடி நகைகள் கொள்ளை


சென்னை சைதாப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் ஜன்னலை உடைத்து ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுவிட்டனர்.

அமித் கண்ணா
சென்னை சைதாப்பேட்டை போலீஸ் சரகம் நந்தனம் 2–வது விரிவாக்கம் 1–வது மெயின் ரோட்டில் வசிப்பவர் அமித் கண்ணா (வயது 45). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், சென்னையில் நீண்ட நாட்களுக்கு முன்பு குடியேறிவிட்டார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவரது தாய், தந்தையும் இவருடனேயே வசிக்கிறார்கள்.

தாய், தந்தையின் அறை வீட்டில் தனியாக உள்ளது. அமித் கண்ணா துணி ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். கதீட்ரல் சாலையில் துணிக்கடையும் வைத்துள்ளார்.

தொழில் அதிபரான இவர் பெரும் பணக்காரர். கடந்த 30–ந் தேதியன்று இவர் டெல்லிக்கு சென்றுவிட்டார். இவரது மனைவியும், மகன்களும் ஆந்திர மாநிலம் ஐதராபாத் போய்விட்டனர். இவரது பெற்றோர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா போயிருந்தார்கள். அமித் கண்ணா கடந்த 31–ந் தேதியே சென்னை திரும்பி விட்டார்.

ஜன்னல் உடைப்பு
நேற்று முன்தினம் இரவு இவரது மனைவியும், மகன்களும் ஐதராபாத்திலிருந்து வீடு திரும்பினார்கள். வீடு திரும்பிய இவரது மனைவி வீட்டிற்குள் பின்பக்க ஜன்னலை உடைத்து கொள்ளையர்கள் புகுந்திருப்பதை கண்டுபிடித்தார். கொள்ளையர்கள் அமித் கண்ணாவின் பெற்றோரின் அறைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

பீரோ உடைக்கப்பட்டு அலங்கோலமாக கிடந்தது. பீரோவுக்குள் இருந்த ரூ.6½ லட்சம் ரொக்கப்பணம், 40 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை கொள்ளையர்கள் மூட்டை கட்டி சுருட்டி சென்றிருப்பது தெரியவந்தது.

வைர நகைகளில் வைர நெக்லஸ், வைர கைச்சங்கிலி, வைர டாலர் சங்கிலி, மற்றும் வைர கம்மல்கள் கொள்ளை பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கொள்ளை போன நகைகள் அனைத்தும் அமித் கண்ணா தாயாரின் நகைகள் ஆகும்.

ரூ.1 கோடி மதிப்பு
கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமித் கண்ணா நேற்று அதிகாலையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தனது வீட்டில் கொள்ளை போயிருப்பதாக தகவல் கொடுத்தார். உடனடியாக கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் அன்பு, உதவிக்கமிஷனர் தங்கராஜ், இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், மோகன்தாஸ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அமித் கண்ணாவின் வீட்டில் டிரைவராக வேலை பார்த்தவரையும், நேபாள காவலாளியையும் போலீசார் நேற்று மாலை பிடித்து விசாரித்தனர்.

கார் டிரைவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளதாகவும், விரைவில் அவர்களை பிடித்து விடுவோம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோடை விடுமுறையையொட்டி வெளியூர் செல்பவர்கள் வீட்டை பூட்டிவிட்டு சென்றால் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு போகவேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.