சென்னை,
சென்னை நகரில் போலீஸ் நிலையங்களில் தினமும் ஒரு மணி நேரம் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனை
சென்னை நகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், நேற்று கூடுதல் கமிஷனர்கள் சேஷசாயி, சங்கர், அபய்குமார்சிங், வரதராஜு ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் மனுக்கள் கொடுக்க வரும் பொதுமக்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது நிறைய புகார்களை தெரிவிக்கிறார்கள். போலீஸ் நிலையங்களுக்கு மனு கொடுக்க செல்லும் பொதுமக்களிடம் இன்ஸ்பெக் டர்கள் முறையாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்காமல் விரட்டி அடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை கமிஷனர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தெரிவிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் கூடுதல் கமிஷனர்களிடம் ஆலோசனையில் கருத்துக் களை கேட்டறிந்தார். மேலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொதுமக்களுக்கு நன்மை செய்யும் ஏராளமான திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்படாமல் இருப்பதும் போலீஸ் கமிஷனருடைய கவனத்திற்கு தெரியவந்தது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் கமிஷனர், கூடுதல் கமிஷனர்களிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அந்த உத்தரவுகளை கூடுதல் கமிஷனர்கள் உடனடியாக நிறைவேற்றவும் அவர் ஆணையிட்டார். அவர் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள் வருமாறு:-
மக்களை சந்திக்க வேண்டும்
* சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை, ஒரு மணி நேரம் இன்ஸ்பெக்டர்கள் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை வாங்கி உடனடியாக சி.எஸ்.ஆர். ரசீது கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்ஸ்பெக்டர்கள் முக்கியமான பணிக்கு சென்றிருந்தால் பொதுமக்களை சந்திப்பதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இன்ஸ்பெக்டர்கள் இந்த பணியை சிறப்பாக செய்கிறார்களா? என்பதை கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும்.
முதியோர்கள் பிரச்சினை
* சென்னை நகரில் வசிக்கும் முதியோர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் தங்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை பதிவு செய்துகொண்டு தங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் போலீஸ் நிலையங்களை அணுகினால் முதியோர்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்ற திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அந்த திட்டம் தற்போது சரிவர செயல்படாமல் இருப்பதாக புகார்கள் வந்தன. முதியோர்களுக்கு உதவி செய்யும் இந்த திட்டத்தை மீண்டும் சிறப்பாக செயல்படுத்தவும் போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேற்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
* சென்னை நகர போலீஸ் நிலையங்களின் எல்லைகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிற்கும் 24 மணி நேரமும் ரோந்து செல்ல ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டனர். அவர்கள் ரோந்து செல்வதற்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்த திட்டமும் தற்போது சரிவர செயல்படாமல் இருப்பதாக புகார்கள் வந்தன. பொதுமக்களின் நலன் கருதி இந்த திட்டத்தையும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று கமிஷனர் ஆணை பிறப்பித்தார்.
விழிப்புணர்வு பிரசாரம்
* ரோட்டில் சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. மேலும் ரூபாய் நோட்டுகளை ரோட்டில் வீசி கவனத்தை திசை திருப்பி பொதுமக்களிடம் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் சென்னையில் நிறைய நடக்கிறது.
இதுபோன்ற சம்பவங்களில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரசார குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு சினிமா தியேட்டர்களில் திரையிட்டும், தொலைக்காட்சிகளில் வெளியிட்டும் பிரசாரம் செய்யும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. அந்த திட்டமும் தற்போது செயல்பாட்டில் இல்லை. இந்த திட்டத்தையும் தீவிரப்படுத்தகமிஷனர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.