சென்னை,
பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் 50 ஆக உயர்ந்துள்ளது. 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தும் கிடைத்துள்ளது.
அ.தி.மு.க. 37 இடங்களில் வெற்றி
தமிழகத்தில் 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது. பா.ஜ.க., பா.ம.க. ஆகியவை தலா ஒரு இடத்தை பிடித்தது. தற்போது, பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேர் இருக்கின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மாநில சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் பாராளுமன்ற மேல்-சபைக்கு எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 33 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது.
6 பேர் போட்டியின்றி தேர்வு
இதற்கிடையே, பாராளுமன்ற மேல்-சபையில் உள்ள 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் 28-ந் தேதியுடன் முடிவடைகிறது. புதிதாக 6 மேல்-சபை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 11-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கு 4 மேல்-சபை எம்.பி.யை தேர்வு செய்ய பலம் கிடைத்தது. இந்த பதவிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், விஜயகுமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு மனுதாக்கல் செய்தனர். 4 பேரும் போட்டியின்றி மேல்-சபை எம்.பி.க்களாக தேர்வும் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
3-வது பெரிய கட்சி
இதன் மூலம் டெல்லி மேல்-சபையில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் 13 ஆனது. அதாவது, தமிழகத்தில் இருந்து வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், எஸ்.முத்துக்கருப்பன், எல்.சசிகலா புஷ்பா, டாக்டர் ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல், டாக்டர் வா.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், ஏ.கே.செல்வராஜ், விஜிலா சத்தியானந்த், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகிய 12 பேரும், புதுச்சேரியில் இருந்து என்.கோகுலகிருஷ்ணனும் எம்.பி.க்களாக உள்ளனர்.
எனவே, பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் 50 ஆக உயர்ந்துள்ளது. 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தும் அ.தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது. பாராளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவையை சேர்த்து, பா.ஜ.க.வுக்கு 331 எம்.பி.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்.பி.க்களும் உள்ளனர். 3-வது இடத்தை அ.தி.மு.க. பிடித்துள்ளது. 4-வது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது. அந்த கட்சிக்கு 46 எம்.பி.க்கள் உள்ளனர்.
எம்.பி.க்கள் பலத்தில் 3-வது இடத்தை அ.தி.மு.க. பிடித்துள்ளதால், பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற அ.தி.மு.க.வின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.