Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2016

21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவியைக் காப்பாற்றும் புதிய சட்ட மசோதாவில் கையெழுத்திட பிரணாப் மறுப்பு


டெல்லியில் 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் பதவியைக் காப்பாற்ற வகை செய்யும் புதிய சட்ட மசோதாவில் கையெழுத்திட குடியரசுத் தலைவர் மறுத்துவிட்டார். இதையடுத்து பிரதமர் மோடி மீது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் புகார் கூறியுள்ளார்.

முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, கடந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை சட்டப்பேரவை செயலாளர்களாக நியமித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக குடியரசுத்தலைவரிடம் பாஜகவினர் புகார் செய்தனர். “எம்எல்ஏக்கள் ஆதாயம் தரும் 2 பதவிகளை வகிப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல். எனவே, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என புகாரில் கூறியிருந்தனர்.

இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட் எம்எல்ஏக்களிடம் ஆணையம் விளக்கம் கேட்டது.

இதனிடையே, பேரவை செயலாளர்களாக நியமிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தடுக்க, டெல்லி எம்எல்ஏக்கள் (தகுதி நீக்கம்) சட்டம் 1997-ல் திருத்தம் கொண்டுவர டெல்லி அரசு முடிவு செய்தது. இதன்படி, ஆதாயம் தரும் 2 பதவிகளை வகிக்க தடை செய்யும் சட்டத்திலிருந்து 21 எம்எல்ஏக்களுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் மசோதாவை இயற்றி அதை முன்கூட்டியே நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டது.

இந்த மசோதா ஆளுநர் நஜிப் ஜங் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தனது பரிந்துரையுடன் மத்திய அரசு இந்த மசோதாவை ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதைப் பரிசீலித்த பிரணாப், மசோதாவில் கையெழுத்திட மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம்கூறியதாவது:

எங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உள்ளோம். ஆனால் அவர்கள் இதற்காக கூடுதல் வசதியைப் பெறாமல் இலவசமாக பணியாற்றுகிறார்கள். இந்த பதவிக்காக எந்தவித ஊதியமோ, வசதியோ அரசிடமிருந்து பெற முடியாது என அறிவிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அவர்கள் இலவசமாக பணியாற்றுவதால் இவர்களுக்கு என்ன பிரச்சினை?

ஹரியாணா, பஞ்சாப், குஜராத், மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பேரவை செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பஞ்சாபில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மாதம் ரூ.1 லட்சம் பெறுவதுடன், கார், பங்களா வசதியும் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களை தகுதி நீக்கம் செய்யாத மத்திய அரசு, டெல்லி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய துடிப்பது ஏன்?

ஏனென்றால் ஆம் ஆத்மியைக் கண்டு அவர் (பிரதமர் மோடி) பயப்படுகிறார். டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியை பிரதமர் மோடியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் அரசியல் பழிவாங்கும் போக்குடன் எங்களை செயல்பட விடாமல் தடுக்க முயற்சிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் குடியரசுத்தலைவர் முடிவு எடுக்கவில்லை. இந்த கோப்புகள் அவருக்கு அனுப்பி வைக்கப்படவே இல்லை. மத்திய அரசும் உள்துறை அமைச்சகமும்தான் இந்த முடிவை எடுத்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நம்பகத்தன்மை சந்தேகிக்க வேண்டாம்

பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா கூறும்போது, “21 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது குடியரசுத்தலைவரும் தேர்தல் ஆணையமும்தான். இதில் பிரதமருக்கு பாஜகவுக்கோ தொடர்பு இல்லை. குடியரசுத்தலைவர் அலுவலகம் சுதந்திரமான அமைப்பு. அதன் முடிவை அரசியலாக்காதீர்கள். அதன் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வேண்டாம்” என்றார்.

தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: காங்கிரஸ்

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பி.எல்.புனியா கூறும்போது, “டெல்லி எம்எல்ஏக்கள் சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத்தலைவர் மறுத்துவிட்டதால், 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தவறான தகவலை தெரிவித்த முதல்வர் கேஜ்ரிவாலும் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.