Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2016

அட்டாக் பாண்டி உயிருக்கு ஆபத்தா?...சிறைத்துறையிடம் விளக்கம் கேட்க வைத்த திகில் கடிதம்!


தன் உயிருக்கு சிறைக்குள் ஆபத்து என்றும் இன்னும் பல விவகாரங்களையும்  கூறி அட்டாக் பாண்டி நீதிமன்றத்துக்கு எழுதியிருக்கும் கடிதம், பல அதிர்வலைகளை உண்டு பண்ணியுள்ளது. இதன் மூலம் செய்திகளிலிருந்து இடையில் காணாமல்போன அட்டாக் பாண்டி,  மீண்டும் பரபரப்பு வளையத்துக்குள் வந்திருக்கிறார்.

 மு.க அழகிரியின் வலதுகரம் எனப்பட்ட பொட்டு சுரேஷ் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட  அட்டாக் பாண்டியை இரண்டே முக்கால் வருடங்களுக்கு பிறகு மும்பையில் கைது செய்தனர் தமிழக போலீஸார். விசாரணைக்கு பிறகு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட  பாண்டி, அதன்பின் முந்தைய வழக்குகளில் ஆஜர்படுத்தப்பட்டார். புதிய வழக்குகள் பலவும் போடப்பட்டன. இதனடிப்படையில் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் அவரை கைது செய்தது காவல்துறை. நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி அதிலிருந்து வெளியில் வந்தார்.

இதற்கிடையே சில காவல்துறை அதிகாரிகள் மீது நம்பிக்கையில்லை என்ற பல புகார்களுடன்  முதல்வருக்கு கடிதம் அனுப்பினார். அதைத் தொடர்ந்து பொட்டுசுரேஷ் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தினகரன் நாளிதழ் எரிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சொல்லி பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து அது தொடர்பான விசாரணையில் அட்டாக் பாண்டி உட்பட  அவரது ஆதரவாளர்கள் 14 பேர் ஆஜராகி உள்ளார்கள்.

இந்நிலையில்தான் தன் உயிருக்கு ஆபத்து என்று நீதிபதிகளுக்கு கடிதம் எழுதி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார் பாண்டி. மதுரை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு மற்றும், தன் மீதான வெடிகுண்டு வழக்கு நடந்து வரும்  அருப்புக்கோட்டை நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ள அந்த கடிதத்தில், ‘நெல்லை சிறைக்குள் சாதிக் கலவரத்தை தூண்டியோ அல்லது பிற ஏதேனும் காரணங்களின் பேரிலோ, என்னைக் கொல்ல சில போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனை சிறையில் உள்ள உளவுத்துறை அதிகாரிகள் மூலம் அறிந்து கொண்டேன். இதுகுறித்து கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி சிறைத்துறை தலைவருக்கு மனு கொடுத்தும் இதுவரை எனக்கு எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யவில்லை.



சிறைக்கு வெளியே சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய போலீசாரை என் பாதுகாப்புக்கு நியமிக்கவேண்டும். மேலும் இந்த கடிதம் தங்கள் கைகளில் கிடைக்கப் பெற்று நடவடிக்கை எடுக்கும் முன்பு எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நான் கொல்லப்பட்டால் என் உடலை தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளை தவிர்த்து கேரளா அல்லது டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்யவேண்டும். சிறையில் தற்போது நிலவும் சூழ்நிலைகளை பார்க்கும்போது உளவுத்துறை அதிகாரிகள் கூறிய தகவல்கள் வலுப்பெற்று வருகிறது.’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

அட்டாக் பாண்டியின் இந்த புகார் சம்பந்தமாக நெல்லை சிறைத்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது நீதிமன்றம். அட்டாக் பாண்டியின் வழக்கறிஞர் இளங்கோவிடம் பேசினோம்.

“ தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். இதற்கு முன்பு போலீஸ் விசாரணைக்கும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். நீதிமன்ற விசாரணைக்கும்  ஒத்துழைப்பு கொடுக்கிறார். ஆனால், காவல்துறை அவர் மீது புதுப்புது வழக்குகளை போட்டு சிறைக்குள்ளேயே முடக்கப் பார்க்கிறது. அது மட்டுமில்லாமல் சமீபத்தில் நாளிதழ் எரிப்பு வழக்கில் ஆஜராகிவிட்டு மீண்டும் சிறைக்கு சென்றபோது, குடித்திருப்பதாக அவரை சோதனையிட்டு அதை நாளிழ்களில் செய்தியாக வரவழைத்துள்ளனர்.



இது அவர் மேல் அவதூறை பரப்பும் செயல். சில வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. மீதமுள்ள வழக்குகளில் ஜாமீன் கிடைக்காமல் செய்ய வேண்டுமென்பதற்காக திட்டமிட்ட பொய்யை பரப்புகிறார்கள்.  சிறைக்குள்ளும், நீதிமன்றத்துக்கு வரும்போதும் போலீஸ் பாதுகாப்புடன் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் குடித்துவிட்டார் என்று பழி போடுவதற்கு என்ன காரணமென்று தெரியவில்லை.

தற்போது சிறைக்குள்ளும் பாதுகாப்பான சூழல் இல்லையென்று என் கட்சிக்காரர் பாண்டி, நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குடித்து விட்டார் செய்தி பரப்பியதற்காக விளக்கம் கேட்டு பாண்டியின் மனைவி தயாளுவும் சிறைத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நீதிமன்ற நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம்’’ என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.