Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 21, 2016

2.4% வாக்குகளால் சிக்கல்..! அங்கீகாரம் இழக்கப் போகிறதா தேமுதிக?


தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க. 2.4 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பதால் அந்த கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிமுக, திமுக மற்றும் தேமுதிக கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள். இந்த கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் சின்னங்கள் நிரந்தரமாக ஒதுக்கப்படும். இது தவிர பாமக, மதிமுக, தமாகா உள்பட அனைத்து கட்சிகளும் பதிவு பெற்ற கட்சிகளாக உள்ளன. இவற்றுக்கான சின்னங்கள் தேர்தல் நேரத்தில்தான் ஒதுக்கப்படும். மேலும் பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 5 ஆண்டுகள் தொடர்ந்து செயல்படும் கட்சிகளாக இருக்க வேண்டும். இதுதவிர சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 30 உறுப்பினர்களுக்கு ஒரு உறுப்பினர் அதாவது ஒரு எம்.எல்.ஏ. பெற்றிருக்க வேண்டும். அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 உறுப்பினர்களில் 7 அல்லது 8 எம்.எல்.ஏ.க்களை பெற்றிருக்க வேண்டும். அல்லது சமீபத்தில் பதிவான மொத்த வாக்குகளில் அந்த கட்சி பெற்ற வாக்குகள் 6 சதவீதத்துக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் தேமுதிக 2.4 சதவீத வாக்குகளை அதாவது 10 லட்சத்து 34 ஆயிரத்து 384 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறது. எம்.எல்.ஏ. ஆக ஒருவரும் தேர்ந்து எடுக்கப்படவில்லை. இதன் மூலம் தே.மு.தி.க. தனது அங்கீகாரத்தை இழக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சிகள், பதிவு பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்ளன. இவற்றில் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலாக இருந்தால் ஒரு மாநிலத்தில் மொத்தம் உள்ள நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையில் 25 தொகுதிகளுக்கு ஒரு இடம் பெற்றிருக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலாக இருந்தால் 30 தொகுதிக்கு ஒரு தொகுதி என்ற வீதத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது மொத்தம் பதிவான வாக்குகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் அனைவரும் சேர்ந்து 6 சதவீதத்துக்கு மேல் பெற்றால் அந்த கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். இல்லையென்றால் அங்கீகாரம் கிடைக்காது. இதனால் அந்த கட்சிக்கு நிரந்தர தேர்தல் சின்னம் ஒதுக்கப்படாது. அதன்படி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்தெந்த கட்சி அங்கீகாரத்தை இழக்கின்றன என்பதை கணக்கிட்டு வருகிறோம்.

தமிழகத்தில் அதிமுக, திமுக மற்றும் தேமுதிக ஆகிய 3 கட்சிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்ற கட்சிகள். இதில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. கட்சி 2.4 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பதால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்வது பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற கட்சிகள் அனைத்தும் பதிவு பெற்ற கட்சிகள் என்பதால் அவற்றுக்கு அங்கீகாரம் இழப்பு ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று தெரிவித்தார்.

2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க. முதன்முதலாக போட்டியிட்டு 12 சதவீதம் வாக்குகளை பெற்றது. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 7.88 சதவீத வாக்குகளை பெற்றது. இந்த தேர்தலில் 2.4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் தே.மு.தி.க. கட்சி அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.