Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 10, 2016

உதயநிதி அரசியலுக்கு வருவாரா... ஸ்டாலின் என்ன பதில் சொல்லியிருப்பார்?


என்னுடைய மகனாக இருந்தாலும் சரி, என்னுடைய மருமகனாக இருந்தாலும் சரி, என்னுடைய குடும்பத்தில் வேறு யாராக இருந்தாலும் அரசியலுக்கு நிச்சயமாக வர மாட்டார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறியுள்ளார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சியில் நேயர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம்:

தேர்தல் அறிக்கையில் நீங்கள் பூரண மது விலக்கு கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கின்றீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அரசுக்கு வருமானம் இல்லை என்று மீண்டும் மதுக்கடைகளை திறக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தி.மு.க.வை பொறுத்த வரையில் எப்போதும், “சொன்னதைத்தான் செய்யும், செய்வதைத்தான் சொல்லும்”. பெண்களுடைய பாதுகாப்பிற்காக, தமிழர்களின் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக திமுக தேர்தல் அறிக்கையில் மது விலக்கு அமுல்படுத்துவோம் என்று தெளிவாக குறிப்பிட்டு காட்டி இருக்கின்றோம். அதன் மூலமாக அரசுக்கு இழப்பு ஏற்படும் என்பது உண்மைதான்.

ஆனால் அந்த இழப்பீட்டுத் தொகையை, எப்படி 2006-ம் ஆண்டு 7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தபோதும் இதே பிரச்னை வந்தது. தலைவர் கலைஞர் அந்த இழப்பை சமாளித்தார். அதேபோலத்தான் இப்போதும் கனிம வளம், தாது மணல், கிரானைட் போன்றவற்றில் இருந்து வரக்கூடிய வருமானங்களை தனியாருக்குத் தராமல், அரசே பொறுப்பேற்று, அரசின் மூலமாகவே அந்த பணிகளை மேற்கொள்கிற போது, நிச்சயமாக அரசிற்கு போதிய வருமானம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் பல்வேறு வகையில் அரசுக்கு வரக்கூடிய வருமானங்களை கண்காணிக்கும் போது நிச்சயமாக இந்த இழப்பை சமாளிப்போம் என்ற நம்பிக்கை தி.மு.க.விற்கு இருக்கிறது.

ஜெயலலிதா தனது ஒவ்வொரு பிரசாரத்திலும் தி.மு.க.வை குடும்ப கட்சி என்றும் உங்கள் ஆட்சியை குடும்ப ஆட்சி என்றும் சொல்லி வருகிறார். அதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

அதாவது சசிகலாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு அவர்கள் குடும்ப ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதை மூடி மறைப்பதற்காக திட்டமிட்டு தேர்தல் பிரசாரத்திற்காக செய்யக் கூடிய ஒரு உத்தியை அவர் கையாண்டு இருக்கிறார். அது தவிர வேறொன்றும் அல்ல. என்னைப் பொறுத்த வரையில் நான் சொல்ல வேண்டும் என்று சொன்னால், நான் 45 ஆண்டுகளாக அரசியலில் இருந்து கொண்டு இருக்கிறேன். அதுவும் தி.மு.க.வில் கிளைக் கழகத்தில் இருந்து தொடங்கி நகரக் கழகம், பகுதி கழகம், மாவட்டக் கழகம், தலைமைக் கழகம் என்று படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறேன். ஆகவே என்னை வைத்து அவர் இப்படி சொல்வதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

உங்கள் குடும்பத்தில் இருந்து இன்னும் யாராவது அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதா?

என்னுடைய மகனாக இருந்தாலும் சரி, என்னுடைய மருமகனாக இருந்தாலும் சரி, என்னுடைய குடும்பத்தில் வேறு யாராக இருந்தாலும் அரசியலுக்கு நிச்சயமாக வர மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.