Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2016

தெறிக்க விடலாமா!


மெலிந்த தேகம், ஒளிரும் கண்கள், விளையாட்டு மைதானத்திலோ ‘செம தில்’... இப்படித்தான் இந்தப் பெண்ணை அறிமுகப்படுத்த முடியும். பள்ளி வயதில் பெற்றோரை இழந்து தவித்த அந்தச் சிறுமி தன்னையே செதுக்கி உயிர்ப்பித்தாள். இன்று உலகம் வியக்கும் மனுஷியாக உயர்ந்து நிற்கிறாள். தனது கால்களில் சிக்கிய கால்பந்து அவளின் இன்னுயிர் தோழியானது. தனது கோபம், சோகம், வீரம் என அனைத்தையும் அதனோடு பகிர்ந்து கொண்டாள்.
அந்த கால்பந்து அவளை சர்வதேச கால்பந்து போட்டியின் நடுவர் என்ற உயரம் வரை உந்தித் தள்ளியுள்ளது. உலக கால்பந்து சம்மேளனத்தின் நம்பிக்கை நாயகி! தமிழகத்தில் இருந்து சர்வதேச கால்பந்து போட்டிகளின் நடுவராக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை அடைந்திருக்கும் அந்த அருமைத் ேதாழி ரூபாதேவி!
திண்டுக்கல் குருசாமி-தென்னம்மாள் தம்பதியின் 3வது மகள் ரூபாதேவி. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து நின்றவரை மற்ற உறவுகள் பாரமாக நினைத்து புறம் தள்ளின. நிர்கதியாக நின்ற சிறுமியை அவரது சகோதரி விஜயலட்சுமி அரவணைத்துக் கொண்டார். டெய்லர் வேலை பார்க்கும் மாமா. ஒய்.எம்.ஆர்.பட்டியில் சிறிய வீடு, சொற்ப வருவாய் என்றிருந்தாலும், ரூபாதேவிக்கு அன்பு மட்டும் குறையாமல் கிடைத்தது. பள்ளி வளாகத்தில் பல நாட்கள் சோர்ந்து அமர்ந்தவரை விளையாட்டு ஆசிரியர் ஜஸ்டின் உற்சாகப்படுத்தினார்.
எத்தனை முறை உதைத்தாலும் துள்ளி எழும் கால்பந்து அந்தச் சிறுமியை உற்சாகப்படுத்தியது. கால்பந்தை தனது தோழியாக்கி விளையாட்டுப் பயணத்தை தொடங்கினார். வகுப்பறை இல்லாத நேரத்தில் ரூபாவை கால்பந்துடன் விளையாட்டு மைதானத்தில் பார்க்க முடியும். வாழ்க்கை தனக்கு அளித்த சோகங்களையும் நெருக்கடிகளையும்  பாதங்களில் வைத்து உதைத்தார். மகிழ்ச்சியும் உற்சாகமும் அவளை நோக்கி ஓடி வந்து கட்டிக் ெகாண்டன. அவளது தனிமை முழுக்கவும் உருண்டு, புரண்டு, துள்ளித் திரிந்து அவளது பாதங்களில் அடங்கியது கால்பந்து.
திண்டுக்கல் புனிதவளானர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்து, ஜி.டி.என். கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார் ரூபாதேவி. மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டு மாவட்டப் போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளார். தமிழக கால்பந்து அணியில் இடம்பெற்று 6 முறை தேசிய போட்டிகளில் பங்கேற்றார். பல்கலை அளவிலும் மாநில மற்றும் தேசிய போட்டிகளில் களம் பல கண்டு, அடுத்தடுத்த உயரங்களை எட்டுவதில் தீவிரமாக இருந்தார்.
விளையாட்டு வீரர் என்ற நிலையை அடுத்து நடுவராக வேண்டும் என்று தீர்மானித்தார். நடுவருக்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்விலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதன் பின் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடுவர் பணியை தொடர்ந்தார். 2006ம் ஆண்டு இந்திய கால்பந்து நடுவராக தேர்வு செய்யப்பட்டார். 2013ல் ஆசிய அளவில் நடுவர் என்ற உயரத்தை எட்டினார்.
ஸ்ரீலங்கா, மலேசியா, பஹ்ரைன், கத்தார், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளில் நடந்த போட்டிகளில் நடுவராக பங்கேற்றுள்ளார். சமீபத்தில் சர்வதேச கால்பந்து நடுவராக தேர்வு செய்யப்பட்டதன் வாயிலாக, அடுத்தடுத்த உயரங்களை மின்னல் வேகத்தில் கடந்துள்ளார். வாழ்த்துச் சொல்ல வரும் தொலைபேசி அழைப்புகளுக்குக் கூட பதில் சொல்ல நேரம் இன்றி பயிற்சியில் உள்ளார். ஒலிம்பிக் நடுவராகி, அடுத்த உயரத்தை எட்ட வேண்டும் என்கிற வெறி, இவரது வார்த்தைகளில் தெறிக்கிறது. தனது நேரம் முழுவதையும் பயிற்சியிலும் பயணத்திலும் வெற்றிக்காக மட்டுமே செலவு செய்கிறார்.
‘‘உடற்கல்வி ஆசிரியர் ஜஸ்டின், திண்டுக்கல் கால்பந்துக் கழகம் என என் மீது நம்பிக்கை வைத்து தோள்தட்டி உற்சாகப்படுத்தியவர்களை இந்தத் தருணத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். சந்திக்கும் எந்த மனிதரிடத்திலும் ஏதாவது ஒரு நல்ல குணத்தை எனதாக்கிக் கொள்கிறேன். பெற்றோரை இழந்து நின்ற காலத்தில் அடைக்கலம் தந்து இன்று வரை அன்பை அள்ளித்தரும் அக்காவின் குடும்பம் எப்போதும் என் வெற்றியின் பக்கபலம்.கால்பந்துதான் எனது வாழ்க்கை என்று முடிவு செய்த காலத்தில் எனது ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. பெண்களில் சிலர் தனக்கு சாதகமான ஒரு சூழலில் தன்னைப் பொருத்திக் கொண்டு வளர்ந்தது போதும் என்று தேங்கிவிடுகின்றனர்.
என்னால் அப்படி யோசிக்க முடியவில்லை. அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும் என்ற தேடல் எப்போதும் எனக்குள் இருந்தது. என்னால் அடைய முடியாதது எதுவும் இல்லை என்று என் மனதுக்கு அடிக்கடி சொல்வேன்.  வெளிநாடுகளுக்கு நடுவராகச் செல்லும் போது மனசு முழுக்கவும் விளையாட்டைப் பற்றிய சிந்தனையே இருக்கும். ஆரம்பத்தில் மொழிப் பிரச்னை இருந்தது. சக வீராங்கனைகளுடன் பேசிப் பழகி பயிற்சி எடுத்தேன். கிடைக்கும் வாய்ப்பை எந்தக் காரணம் கொண்டும் நழுவ விடமாட்டேன். பாரதியார் கூறியது போல பெரிய விஷயங்களுக்கு ஆசைப்பட வேண்டும். இலக்கை அடையும் வரை காத்திருப்பும் தொடர் முயற்சியும் அவசியம். சுற்றியிருப்பவர்கள் நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று கண்டு கொள்ளத் தேவையில்லை.
2013ல் கத்தாரில் நடந்த போட்டியில் நான் கால்பந்து நடுவர். பாலஸ்தீனமும், ஜோர்டான் அணியும் போட்டியாளர்களாக களத்தில். சர்ச்சைகளுக்கும் சண்டைக்கும் பஞ்சம் இருக்காது. இந்த விஷயமெல்லாம் முதலில் எனக்கு தெரியாது. நீண்ட ஆலோசனைக்கு பின்னர் என்னை நடுவராக நியமித்தனர். நான் அணிகளின் மோதல் மனநிலை பற்றி கண்டுகாள்ளாமல் வழக்கம் போல பணியாற்றினேன். போட்டி எந்த சிக்கலும் இன்றி முடிந்தது. மற்ற நாட்டு நடுவர்கள் என்னை தேடி வந்து பாராட்டினர். அது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது’’ என்று அனுபவம் பகிர்ந்துவிட்டு பயிற்சியைத் தொடர்கிறார் ரூபாதேவி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.