Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 11, 2016

'பத்து தொகுதி வெற்றிக்காக மெகா பார்ட்டி!' -அதிகாரிகளை குளிர்வித்ததா அ.தி.மு.க?


கோவை மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு நடத்தப்பட்ட மெகா பார்ட்டி பற்றித்தான் சகல கட்சியினரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். 'பத்து தொகுதியின் ரிசல்ட்டைப் பொறுத்து நல்ல கவனிப்பும் இருக்கும்' என்ற உறுதிமொழியும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கோவை மாவட்ட அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு அதிர வைக்கும் புகார் ஒன்று சென்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரையில் நீடித்த விருந்து பற்றித்தான் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்கே கொண்டு வராமல் பார்ட்டி நடந்துள்ளது. வட இந்திய மேற்பார்வையாளர்கள், தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் என 75 பேர் அந்தப் பார்ட்டியில் பங்கேற்றுள்ளனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர், " மாவட்ட ஆட்சியர், தேர்தல் அலுவலர்கள் என பலருக்கும் பார்ட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. மாவட்டத்தில் பத்து தொகுதிகளில் இருந்தும் அதிகாரிகள் வந்து குவிந்துவிட்டார்கள். முதலில் 75 பேருக்கு சாப்பாடு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றுதான் உத்தரவு வந்தது. அதிகாரப்பூர்வ விருந்துதான் என அதிகாரிகள் வெளியில் சொல்லிக் கொண்டார்கள். நேரம் போகப் போக, பார்ட்டியின் நோக்கம் திசைமாறிவிட்டது. முழுக்க அ.தி.மு.கவுக்கு சாதகமாக செயல்படும் வகையில் பார்ட்டியைக் கொண்டாடிவிட்டார்கள். செட்டிபாளையத்தில் உள்ள புகழ்பெற்ற கிளப்பில்தான் பார்ட்டி நடந்தது. அந்த கிளப் நிர்வாகம் மீது நிலமோசடி உள்பட ஏராளமான புகார்கள் உள்ளன.

மாலை 7 மணிக்குத் தொடங்கிய பார்ட்டியில், 12 ஆயிரம், 16 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த ஸ்காட்ச் விஸ்கிகள் பரிமாற்றப்பட்டது. இதற்கான செலவுகள் அனைத்தையும் அ.தி.மு.கவின் முக்கியப் பிரமுகரே ஏற்றுக் கொண்டார். 'ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட வேண்டும். பத்து தொகுதிகளின் ரிசல்ட் நல்லபடியாக வர வேண்டும். தேர்தல் முடிந்ததும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விநியோகம் இருக்கும்' என்ற உத்தரவாதமும் அங்கே கொடுக்கப்பட்டது. இவ்வளவு பெரிய பார்ட்டி நடக்கும்போது, அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க, காவல்துறையின் உதவியை ஆட்சியர் கோரியிருக்க வேண்டும். அதையும் அவர் செய்யவில்லை. மிக ரகசியமாகவே பார்ட்டியை நடத்தி முடித்துவிட்டார்கள்"  என்றார் விரிவாக.

ஏற்கெனவே, பாண்டிச்சேரி உள்பட சில பகுதிகளில் தேர்தல் அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட பார்ட்டி குறித்த சர்ச்சைகளால் கலவரமானது தேர்தல் ஆணையம். இதையடுத்து, கொங்கு மண்டலத்திலும் ஆளுங்கட்சி தயவில் பார்ட்டி வைத்தது பற்றி ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்கிறது தி.மு.க உள்ளிட்ட கட்சிகள்.

என்ன செய்யப் போகிறது ஆணையம்? 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.