Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 24, 2016

முத்தான முதல் 5 கையெழுத்துக்கள்!


பரபரப்பான சட்டசபை தேர்தல் முடிந்து, முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது. மறைந்த எம்.ஜி.ஆர் ஒரு திரைப்படத்தில், ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும், அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்’ என்று பாடுவார். அதேபோல, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும், இந்த வெற்றியை தனது வெற்றி என்று இறுமாப்புகொள்ளாமல், ‘இது மக்களுக்கு கிடைத்த வெற்றி’ என்று இந்த வெற்றிக்கான பெருமையை எல்லாம் மக்களுக்கே சூட்டியுள்ளார். தேர்தலின்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் 50 தலைப்புகளில் கொடுத்த வாக்குறுதிகள் தேர்தலின்போது மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயமாக ஒரேநேரத்தில் நிறைவேற்றிட எந்த அரசாங்கம் நினைத்தாலும் முடியாது. ஆக, ஒவ்வொன்றாகத்தான் நிறைவேற்றமுடியும் என்ற நிலையில், மக்களும் மொத்த அறிவிப்புகளையும் பதவி ஏற்ற உடனேயே நிறைவேற்றி விடுவார் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவுக்கு வந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை வழிநெடுக தொண்டர்கள் செண்டை மேளம், தாரை தப்பட்டை, நடனங்களோடு மகிழ்ச்சிபொங்க உணர்ச்சிபூர்வமாக வரவேற்றனர். ஆனால், எந்த பேனர்களோ, கட்–அவுட்டுகளோ, வரவேற்பு பதாகைகளோ இல்லாமல் எளிமையாக இருந்தது. பதவி ஏற்பு விழாவிலும் அமைச்சர்கள் யாரும், முதல்–அமைச்சர் காலில் விழவில்லை. பதவி ஏற்புவிழா நடந்த மண்டபமும் எளிமையாக இருந்தது. அதேபோல, கோட்டைக்கு அவர் வரும்போதும் கோட்டையில் அவரை வரவேற்க அலங்காரமோ, தோரணங்களோ எதுவும் இல்லை. ஆனால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் நேற்று பதவி ஏற்றவுடன் கோட்டைக்கு வரும் ஜெயலலிதா, முதல் உத்தரவுகளாக எதை எல்லாம் பிறப்பிப்பார் என்ற ஆவல் இருந்து வந்தது.

அதேபோல, பதவி ஏற்றவுடன் கோட்டைக்கு சென்ற ஜெயலலிதா, தன் அலுவலில் முதல் கடமையாக தேர்தல் அறிக்கையில் கூறிய 5 முக்கிய வாக்குறுதிகளுக்கு அரசாணை வெளியிட்டார். கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை சிறு குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகால கடன், நீண்டகால கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்து முதல் உத்தரவை பிறப்பித்தார். 2–வது உத்தரவாக அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் கட்டணம் எதுவும் இல்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் உத்தரவில் கையெழுத்திட்டார். 3–வது உத்தரவாக அனைத்து திருமண நிதிஉதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதிஉதவியுடன், திருமாங்கல்யத்துக்காக வழங்கப்படும் தங்கத்தை 4 கிராமிலிருந்து ஒரு சவரன் அதாவது, 8 கிராமாக உயர்த்தி வழங்கி கோப்பில் கையெழுத்திட்டார். 4–வது உத்தரவாக கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என்றும், விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் என்றும் வழங்க உத்தரவிட்டார். 5–வது உத்தரவுதான் பூரண மதுவிலக்கை நோக்கி அவர் செல்கிறார் என்பதை பறைசாற்றும் வகையில், இன்றுமுதல் டாஸ்மாக் கடைகள், பார்கள் காலை 10 மணிக்கு பதிலாக, மதியம் 12 மணிக்கு திறக்கும் என்றும், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் உத்தரவிட்டார். முதல் 5 உத்தரவுகளுமே முத்து முத்தான உத்தரவுகள். விவசாயிகள் கடனற்ற வாழ்வை தொடங்கப்போகிறார்கள். திருமணம் செய்யப்போகும் ஏழைப்பெண்கள், நாங்கள் ஏன் மஞ்சள் துண்டுடன் கூடிய தாலி அணியவேண்டும். அம்மா கொடுக்கும் தங்கமாங்கல்யத்துடன் அணிவோம் என்று அகமகிழ்வார்கள். வீடுகளில் அனைவரும் கட்டும் மின்சார கட்டணம் குறையப்போகிறது. ஏழை நெசவாளர்களின் மின்சாரசெலவு பெரிதும் குறையப்போகிறது. டாஸ்மாக் கடைகள் 12 மணிக்குத்தான் திறக்கும் என்பது, ஒவ்வொருநாள் பொழுதையும் கட்டிங் அடித்து தொடங்குபவர்களை நல்வழிப்படுத்தும். இந்த உத்தரவுகள், பொதுமக்களுக்கு இந்த ஆட்சியில் சொன்ன அனைத்தையும் செய்வார், நிச்சயமாக சொல்லாததையும் அவர் செய்வார் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.