Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 27, 2016

மை அழிவதற்குள் மறுபடியும் தேர்தல்!: திருப்பரங்குன்றத்தில் 'திருமங்கலம் பார்முலா'


சட்டசபை தேர்தல் முடிந்து, விரல் மை அழிவதற்குள்ளாக, திருப்பரங்குன்றத்தில், இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் முடிந்த சட்டசபை தேர்தலில், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற, அ.தி.மு.க., வேட்பாளர் சீனிவேல், பதவியேற்பதற்கு முன்னதாகவே மரணம் அடைந்தார். இங்கு, இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

ஒரே ஒரு தொகுதிக்கு தேர்தல் நடத்துவது என்பது, சாதாரண விஷயம் அல்ல. அதற்கு, அறிவிக்கை வெளியிடுவதில் துவங்கி, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படை, தேர்தல் விதிமீறல்கள் கண்காணிப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என, பொதுத் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் ஆணையம் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு, 70 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

கடந்த, 2009ல், தி.மு.க., ஆட்சியில் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தல், ஒட்டுமொத்த இந்தியாவும், தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்தது. 'திருமங்கலம் பார்முலா' என்ற தனி ஸ்டைலே உருவானது. இடைத்தேர்தல் என்றாலே, ஆளுங்கட்சி தான் வெற்றி பெற்றே தீரும் என்ற நிலையையும் ஏற்படுத்தி விட்டது. திருப்பரங்குன்றத்திலும், அந்த பார்முலா தான் அரங்கேறப் போகிறது.

ஒவ்வொரு இடைத்தேர்தலில் நேரத்திலும், 'இது தேவையற்ற செலவு, கால விரயம்' என்ற விமர்சனங்கள் எழும். ஆனால், தீர்வு தான் இல்லை. தற்போது, திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர் கள், விரல் மை அழிவதற்குமுன்பாகவே, மீண்டும் ஒரு தேர்தலுக்கு தயாராக வேண்டிய நிர்ப்பந்தம்.

இதுகுறித்து, மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கூறுகையில், 'இடைத்தேர்தலுக்கு பதிலாக, அங்கு நடந்த தேர்தலில், 2ம் இடம் பெற்றவரை, எம்.எல்.ஏ.,வாக அறிவிக்கும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அது, நடைமுறைக்கு வருமானால், இடைத்தேர்தல் சங்கடம் தீரும்' என்றார்.

இன்னொரு தரப்பினரோ, 'அந்த தொகுதியில் ஏற்கனவே வென்ற கட்சியை சேர்ந்த பிரதிநிதியையே தேர்ந்தெடுக்கலாம்' என, கூறுகின்றனர்.35 ஆண்டுகளில் 51 இடைத்தேர்தல்: தமிழகத்தில், 1980 முதல் இதுவரை, 50 இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில், 42ல் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது. தற்போது, 51வது சட்டசபை இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. 2006 முதல் இதுவரை நடந்த, 18 இடைத்தேர்தல்களிலும் ஆளும் கட்சியே தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளது.

கடந்த, 2004ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தன் பதவியை ராஜினாமா செய்ததால், மங்களூரு தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது. அதில், தி.மு.க., வென்றதே, எதிர்க்கட்சி வெற்றி பெற்ற கடைசி இடைத்தேர்தல்.

'சட்ட திருத்தம் அவசியம்':இதுகுறித்து, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

ஒரு எம்.எல்.ஏ.,வின், 50 சதவீத பதவிக் காலத்துக் குப் பிறகு, அதாவது இரண்டரை ஆண்டுக்கு பின், அவர் இறந்து விட்டாலோ அல்லது பதவியை ராஜினாமா செய்தாலோ, அவர் சார்ந்த கட்சி வேட்பாளரையோ அல்லது, 2ம் இடம் பெற்ற வேட்பாளரையோ பரிசீலிக்க லாம். ஆனால், உடனடியாக இறந்து விட்டால், தேர்தல் நிச்சயம் நடத்த வேண்டும்.

வாக்காளர்கள், கட்சி பார்த்து ஓட்டு போடாமல், வேட்பாளரை பார்த்து போட வேண்டும் என்பதே கோட்பாடு. ஒருவேளை, இடைத் தேர்தல் வேண்டாம் என்றால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், திருத்தம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால சாமி, கூறும்போது, ''இந்த கேள்வியே முதலில் எழக்கூடாது. ஒரு நாட்டில் சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருந்தால், அதை பின்பற்ற வேண்டியது, நம் கடமை,'' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.