Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 14, 2016

தேர்தல் ஆணையம் நடத்தும் ‘மினி’ தேர்தலைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?


அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்கு இணையாக களம் இறங்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க,  தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இப்போதைய முக்கிய வேலை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வதுதான். நம் நாட்டின் தலையெழுத்தை வாக்காளர்கள் எழுதும் இடமே அதுதான். என்னவெல்லாம் நடக்கிறது அந்த இயந்திரத்தில்?

* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவு செய்யும் பகுதி, அதை கன்ட்ரோல் செய்யும் பகுதி என மொத்தம் இரண்டு இயந்திரங்கள் எப்போதும் ஆன் மோடிலேயே இருக்கும். கன்ட்ரோல் யூனிட்டில், நம் வாக்காளர் அட்டையை சரியென அலுவலர் பதிவு செய்யும் வரை, நம்மால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது.

* நரம்பும், சதையும் போல தமிழகமும் , மின்வெட்டும் ஒட்டிப்பிறந்த மாற்றான்கள். அதையும் கடந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்ய, பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

* ஒரு இயந்திரத்தில் 16  ஓட்டு பட்டன்கள். அதற்கேற்ப 16 வேட்பாளர்கள் பெயரை எழுத முடியும். அதிகபட்சமாக ஒரு வாக்குசாவடியில் 4 இயந்திரங்கள் பயன்படுத்த முடியும். அதாவது 64 வேட்பாளர்கள். 1996ல் மொடக்குறிச்சி தொகுதியில் ரெக்கார்ட் பிரேக்காக 1033 வேட்பாளர்கள் நின்றார்கள். அப்படி நடந்தால் மிஷினுக்கு ஓய்வு தந்துவிட்டு வாக்குச்சீட்டு முறையில் தான் தேர்தல் நடத்த வேண்டும்.

* ஒரு  இயந்திரத்தில் 3840 ஓட்டுக்கள் வரை பதிவு செய்யலாம். இருந்தாலும், நம் அரசியல்வாதிகளின் நலன் கருதி, அதைவிட குறைவான அளவிலான ஓட்டுக்கள்தான் பதிவு செய்யப்படுகின்றன.

* வாக்கு இயந்திரத்தில் பதிவு செய்யப்படும் வாக்கிற்கு 10 ஆண்டுகள் வேலிடிட்டி.  ஒரு நிமிடத்தில் ஐந்து ஓட்டுக்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரு  முறைபதிவு செய்யப்பட்ட  வாக்கை அழிக்க வேண்டுமென்றால், அந்த இயந்திரத்தில் உள்ள எல்லா வாக்குகளையுமே அழித்தால் மட்டுமே உண்டு.

*உங்கள் வாக்கு நோட்டுக்கு இல்லை, நோட்டாவுக்கு என்றால், அதற்கும் வாய்ப்பு தருகிறது இயந்திரம். 16 ஓட்டு பட்டன்களில், நோட்டாவிற்கும் ஒரு பட்டன் ஒதுக்கி இருக்கிறது தேர்தல் ஆணையம்

* தேர்தலுக்கு முன்னால் இயந்திரத்தை துடைத்து, சேமிப்பில் இருக்கும் தகவல்களை அழித்து சோதனை செய்கிறார்கள். ஒரு சோதனை வாக்குப்பதிவு நடத்தி,  முடிவுகளை கிராஸ் செக் செய்கிறார்கள்.  இந்த புராசஸ் முழுவதையும் கேமராவில் பதிவும் செய்கிறார்கள். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதை நேரில் உறுதி செய்து கொள்ளலாம்.

* சோதனை முடிந்ததும் அதில் தேர்வாகும் இயந்திரங்கள் மீது பிங்க் நிற ஸ்லிப்பில், தனி குறியீட்டு எண் ஒட்டப்படும். இந்த ஸ்டிக்கர் பணம் அச்சடிக்கும் நாசிக் பிரஸ்ஸால் தயாரித்து தரப்படுகிறது. இந்த ஸ்டிக்கரை மீறி உள்ளிருக்கும் எந்த பாகத்தையும், யாராலும் பிரித்து பார்க்க முடியாது.

* சோதனையில் பழுதானவை என கண்டறியப்படும் இயந்திரங்கள்,  உற்பத்தியாளர்களுக்கு திரும்ப அனுப்பப்பட்டு பழுது நீக்கம் செய்யப்படும்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாதான். அதன் தேர்தல்கள் பெரும்பாலும் எந்த பெரிய சிக்கல்களும் இல்லாமல் நடைபெறுவதற்கு காரணம் நமது அரசு அதிகாரிகள்தான். இந்த முறையும் தேர்தல் நல்லபடியாக நடக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.