Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2016

ஸ்டாலினிடம் பேசினாரா விஜய்!? -விளக்கம் சொல்லும் எஸ்.ஏ.சி


கோவை தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்துள்ளனர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள். 'தி.மு.கவுக்கு வேலை பார்க்கச் சொல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது' எனவும் அதிர வைக்கிறார்கள் அவர்கள்.

நீலாங்கரையில் உள்ள விஜய் ரசிகர் மன்ற அலுவலகத்தில் இருந்து கடந்த வாரம் அனைத்து மாவட்ட மன்றத் தலைவர்களுக்கும் சென்ற ஒரு போன்காலில், ' உங்கள் ஒவ்வொருவரிடமும் பதினைந்து நிமிடங்கள் பேச வேண்டியுள்ளது. அதன்பிறகு நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளைச் சொல்வோம்' எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அலுவலகத்திற்கு வந்த மாவட்டத் தலைவர்களிடம், மாநிலத் தலைவர் ஆனந்த் பேசியிருக்கிறார். 'அந்தந்த மாவட்டங்களில் தி.மு.கவுக்கு ஆதரவாக வேலை பாருங்கள். இதைப் பற்றி தளபதியிடம் இளைய தளபதி பேசிவிட்டார். மாவட்டத்தில் உள்ள தி.மு.க மாவட்டச் செயலாளர்களை சந்தித்துப் பேசுங்கள். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிரஸ் மீட்டில் வைத்து இளைய தளபதி பேசுவார்' என அதிரடியாகக் கூறியிருக்கிறார்.

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பிலும் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை. 'தி.மு.கவுக்குப் பிரசாரம் செய்யுங்கள்' என அவர் அறிக்கையும் விடவில்லை. பகிரங்கமாகக் கூறினால், தேர்தல் முடிவுகளில் சிக்கல் ஏற்பட்டால் பிரச்னை ஏற்படும் என்பதற்காகவே அமைதியாக இருக்கிறார் எனவும் சொல்கின்றனர் அவரது ரசிகர்கள். அத்தனை மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்துப் பேசிய ஆனந்த், இப்போது புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் என்பது வேறுகதை.

'என்ன முடிவில் இருக்கிறார் விஜய்?' என்பதைப் பற்றி நம்மிடம் பேசிய மன்ற நிர்வாகி ஒருவர்,  "அ.தி.மு.க ஆட்சியில் அமர்வதற்கு அணில் போல உதவினார் இளைய தளபதி. ஆனால், அதைப் பற்றியெல்லாம் முதல்வர் ஜெயலலிதா ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இந்த ஐந்து வருடங்களில் ஒவ்வொரு திரைப்படத்தையும் வெளியில் கொண்டு வருவதற்குக் கடுமையாகப் போராடினார். தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்வதே பெரும்பாடாகிப் போனது. குறிப்பாக, தலைவா படத்திற்கு ஆளுங்கட்சி செய்த இடையூறுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஆளுங்கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தும், நமக்கு இதுதான் மரியாதை என்றால், நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும் என விஜய் உறுதியாக இருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, தி.மு.க தலைமையிடம் இருந்து இளைய தளபதிக்கு அழைப்பு வந்தது. நேரடியாக ஆதரவு தெரிவிக்க முடியாது. எங்கள் மன்ற நிர்வாகிகளை வேலை பார்க்கச் சொல்கிறேன் என உறுதியாகத் தெரிவித்துவிட்டார். நாங்களும் தி.மு.கவுக்காக வேலை பார்க்கிறோம். இதைத் தெரிந்து கொண்ட ஆளுங்கட்சி நிர்வாகிகள், பல மாவட்டங்களில் எங்கள் மாவட்டத் தலைவரை விலை பேசுகிறார்கள். சிலர் பகிரங்கமாக அ.தி.மு.கவுக்கு வேலை பார்க்கிறார்கள். தென்மண்டலத்தில் எங்கள் மன்ற நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக வளைக்கும் முயற்சியில் அ.தி.மு.க இறங்கிவிட்டது.

தேர்தல் முடிவுக்குப் பிறகு மன்றத்தின் உத்தரவுக்கு மாறாக வேலை பார்த்தவர்களை கட்டம் கட்டும் வேலைகளும் தொடங்கிவிடும்"  என்றார் உறுதியாக.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.