கேரளத்தில் இடதுசாரிகள் மகத்தான வெற்றி பெற்றிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றுள்ள ஆர்எஸ்எஸ் – பாஜக, வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. இதன் உச்சமாக தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகத்தையும், இந்தக் கும்பல் தாக்கியுள்ளது. இதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அசாம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மமதையின் உச்சத்திற்கு சென்றுள்ளது. மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் படுதோல்வியடைந்துள்ள போதிலும், பாஜக நாட்டின் பெருவாரியான மக்களது நம்பிக்கையை பெற்றுவிட்டதாக ஊடகங்கள் ஊதித்
தள்ளுகின்றன. இந்தப் பின்னணியில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக குறிவைத்து தாக்குதலை துவக்கியுள்ளது பாஜக.
கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணியின் மகத்தான வெற்றியை தொடர்ந்து நடைபெற்ற வெற்றிப் பேரணிகளில் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். கண்ணூர் மாவட்டம் பினராயி கிராமத்தில் இடது ஜனநாயக முன்னணியின் வெற்றிப் பேரணி நடைபெற்ற போது, பாஜக – ஆர்எஸ்எஸ் வெறியர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி மார்க்சிஸ்ட் கம்யூஸ்னிட் கட்சியின் உறுப்பினரான சி.வி.ரவீந்திரன் என்பவரை படுகொலை செய்தனர்.
இந்நிலையில், இடவிலங்கு எனுமிடத்தில் இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் பாஜகவைச் சேர்ந்த ஒரு நபர் காயமடைந்தார். மறுநாள் அவர் மரணமடைந்தார்.
ஆர்எஸ்எஸ் – பாஜக வெறியர்கள் கேரளம் முழுவதும் இடதுசாரிகளை குறிவைத்து – குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களை குறிவைத்து பெரும் வன்முறை நடத்தியதை வெளியில் சொல்லாத ஊடகங்கள், பாஜக உறுப்பினரின் மரணத்தை, இடதுசாரிகளின் மிகப்பெரும் வெறியாட்டமாக திட்டமிட்டு ஊதித்தள்ளின. இந்நிலையில், இடதுசாரிகளுக்கு எதிராக பாஜகவின் தலைவர் அமித்ஷா, வன்முறையை தூண்டும்விதத்தில் பேட்டியளித்தார்.
இந்தப் பின்னணியில் தில்லியில் ஞாயிறன்று காலை 500க்கும் மேற்பட்ட மதவெறியர்களின் கும்பல் உள்ளூர் பாஜக தலைவர்களின் தலைமையில், தில்லி கோல்மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.ஜி.பவன் முன்பு கூச்சலிட்டுக் கொண்டே குவிந்தனர். அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்தனர். அலுவலகத்திற்குள் இருந்து வெளியே வந்த மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள், அவர்களை தடுக்க முயற்சித்தனர். அவர்களை தாக்கிய பாஜகவினர், கட்சி அலுவலகத்தின் பெயர் பலகையை நொறுக்கினர்.
இந்நிலையில், தகவலறிந்து கூடுதல் காவல்துறையினர்அங்கு வந்தனர். இத்தாக்குதலை கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் ஆகியோர் வன்மையாக கண்டித்துள்ளனர்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ்காரத், பாஜகவினர் எங்களது அலுவலகத்தை நோக்கி உள்ளே வரமுயற்சித்தபோது, அங்கே ஏற்கெனவே இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்த எந்தவிதத்திலும் முயற்சிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம்
செய்தியாளர்களிடம் பேசிய சீத்தாராம் யெச்சூரி, பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் எங்களை குறிவைத்து வன்முறையை துவக்கியுள்ளன. அந்தக் கும்பலின் அராஜகத் தாக்குதல்களை கடுமையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்.
கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக மக்கள் அளித்த ஜனநாயகப்பூர்வமான தீர்ப்பை ஏற்றுக் கொள்ள பாஜக தயாராக இல்லை; எனவே, மாநிலம் முழுவதும் அது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்றும் அவர் சாடினார்.
அதேநேரத்தில், இடதுசாரிகள்தான் வன்முறையில் ஈடுபடுவதாக பாஜக தலைமையும், அதன் ஆதரவு ஊடகங்களும் திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன என்றும் யெச்சூரி குற்றம்சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக பாஜகவின் அமைச்சர்கள் நிதின் கட்காரி, ஜே.பி.நட்டா, நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் ஞாயிறன்று குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து புகார் அளித்திருப்பதை சுட்டிக்காட்டிய யெச்சூரி,
கேரளத்தில் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார்.
ஆனால், தேசிய ஊடகங்கள் இந்தப் படுகொலை உள்ளிட்ட சம்பவங்களை ஒளிபரப்பக் கூட இல்லை.
கேரளத்தில் நடந்தது என்ன?
இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக் குழுவும் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
கேரளத்தில் பாஜகவினருக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் வன்முறை நடத்தப்படுவதாக திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டிருக்கிறது. இதைக் காரணம் காட்டி, தில்லியில் கட்சியின் மத்தியக் குழு அலுவலகம் முன்பு பாஜகவினர் போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை மறைத்து, பாஜகவின் தலைமை ஒரு மோசடியான, நேர்மையற்ற நிலைபாட்டை மேற்கொண்டு பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளது.
மே 19 அன்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இடது ஜனநாயக முன்னணி அரசின் முதலமைச்சராக தற்போது பொறுப்பேற்க உள்ள பினராயி விஜயனின் தொகுதியில் அமைந்திருக்கும் பினராயி கிராமத்தில் அவரது வெற்றியை கொண்டாடும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் வெற்றி ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தில் பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் திடீரென கடும் தாக்குதலை நடத்தினர். அந்தத் தாக்குதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் உறுப்பினரான 53 வயது தோழர் சி.வி. ரவீந்திரன் படுகொலை செய்யப்பட்டார். அவரது மகன் ஜிசேன்
மற்றும் 4 தோழர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் மட்டுமின்றி, காசர்கோடு மாவட்டத்தில் கன்னங்காடு தொகுதியில் நடைபெற்ற வெற்றி பேரணியில் இடது ஜனநாயக முன்னணியின் வேட்பாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான இ.சந்திரசேகரன், பாஜகவினரால் நேரடியாக தாக்கப்பட்டார். இதில் அவரது கைமுறிந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ.கே.நாராயணன் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர்.
அதே நாளில் கண்ணூர் மாவட்டம் மட்டனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிப் பேரணியில் பாஜகவினர் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர். அதில், 4 தோழர்கள் படுகாயமடைந்தனர்.
திருவனந்தபுரம் மாவட்டம் நேமம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழு அலுவலகம் பாஜகவினரால் அடித்து நொறுக்கப்பட்டது. இதேபோல கேரளம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக – ஆர்எஸ்எஸ் குண்டர்கள் வன்முறையை அரங்கேற்றினர்.
தேர்தல் முடிவுகள் வெளியானவுடனே, இடதுசாரிகளின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜகவினர் ஆத்திரத்தின் உச்சத்தில் இத்தகைய வன்முறையை அரங்கேற்றினர் என்பது தெளிவாகிறது.
தேர்தலில் கேரள மக்கள் இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக, மகத்தான தீர்ப்பினை அளித்துள்ளார்கள். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் வன்முறை தாக்குதலை நடத்துவது என்பது மக்கள் ஜனநாயகப்பூர்வமாக அளித்த தீர்ப்புக்கு எதிரானது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மத்திய பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்துவருகிறார். அவர் அதை கைவிட்டு கேரளத்தில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ள தமது கட்சியை முதலில் சரிசெய்யட்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணியை பொறுத்தவரை மோதல்களுக்கு இடம் கொடுக்காமல் அமைதியை நிலைநாட்டுவதில் உறுதியாக நிற்போம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.