May 23, 2016
அரசியல் கட்சிகளுக்கு அயல்நாடுகளிலிருந்து பணம் பாஜக அரசின் ஆபத்தான நடவடிக்கை
பாஜக அரசாங்கம் இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அந்நிய நிறுவனங்கள் நிதி அளிப்பதை அனுமதித்திடக்கூடிய விதத்தில் ஆபத்தான நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதுநாள் வரையில், அந்நிய பங்களிப்பு (முறைப்படுத்தல்) சட்டத்தின் (FCRA-Foreign Contribution (Regulation) Act) படி, அரசியல் கட்சிகள் அந்நிய நிறுவனங்கள் மற்றும் அதன் துணை அமைப்புகளிடமிருந்து பணம் பெறுவதற்குத் தடை இருந்து வந்தது.
வோடாபோன் – இனி இந்திய நிறுவனமே
இதுவரை, இந்தியாவில் செயல்படும் ஒரு நிறுவனத்திற்கு வெளிநாட்டு பங்கு மூலதனம் 51 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்நிறுவனம் அந்நிய நிறுவனமாகக் கருதப்பட்டு வந்தது. அந்நிய பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்திலிருந்த இந்த ஷரத்து சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த ஒரு சட்டமுன்வடிவின் மூலம் திருத்தப்பட்டிருக்கிறது. இதன்படி இனி ஒரு நிறுவனத்திற்கு அந்நிய மூலதனப் பங்குகள் 50 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தாலும், அது அந்நியப் பரிவர்த்தனை மேலாண்மை சட்டம் (Foreign Exchange Management Act) அல்லது விதிகள் மற்றும் முறைப்படுத்தல்களின் கீழ் வரும் பட்சத்தில், பின் அது அந்நிய நிறுவனமாக கருதப்பட வேண்டியது இல்லை என்பதாகும். இதன் பொருள் என்னவெனில், ஒரு துறையில் அந்நிய மூலதன முதலீடு 74 சதவீதம் அனுமதிக்கப்பட்டிருந்தால், (இப்போது டெலிகாம் துறையில் இவ்வாறுதான் அனுமதிக்கப்பட்டிருக்கிறது) பின் அந்த நிறுவனம் அந்நிய பங்குமூலதனம் பெரும்பான்மையாக இருந்த போதிலும்கூட, ஓர் அந்நிய நிறுவனமாகக் கருதத் தேவையில்லை என்பதாகும். இவ்வாறு, வோடாபோன் டெலிகாம் நிறுவனம் ஓர் இந்திய நிறுவனமாகவே கருதப்படும்.
இனிமேல் இந்தியாவில் இயங்கும் ஐபிஎம், சாம்சங், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க முடியும். இதுநாள்வரையில் இவ்வாறு இந்திய கார்ப்பரேட்டுகள்தான் சட்டப்பூர்வமாக நன்கொடை அளித்துவந்தார்கள். இனி அந்நிய நிறுவனங்களும் சட்டப்பூர்வமாகவே நன்கொடை அளித்திடமுடியும்.
ஆணி வேரை வெட்டி எறிதல்
இவ்வாறு மிகவும் விரிவானஅளவில் திருத்தம் செய்திருப்பதன் மூலம், அனைத்து அந்நிய நிறுவனங்களும் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களாகவே கருதப்படும். எனவே அவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்குத் தாராளமாக நன்கொடைகள் அளிக்கலாம். இது நாட்டின் ஜனநாயக அமைப்பிற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும், நாட்டின் அரசியல் கட்சி அமைப்பிலேயே கடும் பாதிப்பை ஏற்படுத்தும், நம் நாட்டின் அரசியல் அமைப்பில் பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாகத்தலையிட இது இட்டுச் செல்லும். ஒட்டு மொத்தத்தில் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் ஒருமைப்பாட்டையே வேரறுத்து நிலைகுலையச் செய்துவிடும்.
இந்தத் திருத்தத்தின் மூலம், அந்நிய நிறுவனங்கள் மூலமாக அரசு சாரா நிறுவனங்கள் பெறும் நன்கொடைகளும் சட்டரீதியானதாக மாறிவிடும்.
இவ்வாறு, நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, பல்வேறு பொது செயல்பாடுகளுக்கு அந்நிய நிதி வருவதை முறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அந்நிய பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்தின் ஆணிவேரே வெட்டி எறியப்படுகிறது.
வழக்கிலிருந்து தப்பிக்கவே
இந்தச்சட்டத் திருத்தம் ஏன் ஏற்படுத்தப்பட்டது? அந்நிய நிறுவனங்களிடமிருந்து பாஜக நன்கொடைகள் பெற்றிருப்பதை சட்டப்பூர்வமாக்கு வதற்காகவே இத்திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
தில்லி உயர்நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு அந்நிய நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள் பெற்றது தொடர்பாக அளித்த தீர்ப்பு ஒன்றில், காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் அந்நிய பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்தில் நன்கொடைகள் வாங்குவதைத் தடை செய்துள்ள ஷரத்துக்களை மீறி இருக்கின்றன என்று குறிப்பிட்டிருந்தது. அந்நிய நிறுவனத்தின் துணை அமைப்பாகச் செயல்படும் வேதாந்தா என்னும் நிறுவனத்திடமிருந்து இக்கட்சிகள் நன்கொடைகள் பெற்றிருந்தன. இத்தீர்ப்பை எதிர்த்து இவ்விரு கட்சிகளுமே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கின்றன. அது இப்போது நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் இச்சட்டத்திற்கு இப்போது கொண்டுவரப் பட்டிருக்கிற திருத்தம் இவ்விரு கட்சிகளுக்குமே உதவ வேண்டும் என்பதற்காகவே 2010ஆம் ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படும் என்ற முறையில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இந்தச் சட்டத்திருத்தத்தையும் மோடி அரசாங்கம் ஒரு நிதிச்சட்ட முன்வடிவாகவே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. மோடி அரசாங்கத்தின் இரண்டகமான நாடாளுமன்ற நடைமுறைக்கு இது மற்றோர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு ஆதார் சட்ட முன்வடிவை இவ்வாறே மக்களவை சபாநாயகரின் துணையுடன் நிதிச் சட்ட முன்வடிவாக கருதி, நிறைவேற்றிக் கொண்டதைப் பார்த்தோம்.
அந்நிய நிறுவனங்களின் நன்கொடைகளை சட்டப்பூர்வமாக்குவது தேசவிரோத, ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். அரசியல் கட்சிகள் மீது மிக மோசமான முறையில் செல்வாக்கு செலுத்தவும், ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைத்திடவும் அந்நிய நிறுவனங்கள் மிகவும் நாசகரமான முறையில் செல்வாக்கு செலுத்தத்தக்க விதத்தில் மோடி அரசாங்கம் மிகவும் இழிவான முறையில் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.
மிகவும் கேடுபயக்கத்தக்க இந்தத் திருத்தத்தை செல்லத்தகாத தாக்கக்கூடிய விதத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும்
அரசியல் கட்சிகளுக்கு அயல்நாடுகளிலிருந்து பணம் பாஜக அரசின் ஆபத்தான நடவடிக்கை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.