இன்று விஞ்ஞான வளர்ச்சியிலும், நாகரிகத்திலும் உச்சத்தில் இருக்கும் அமெரிக்கா, 150 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி இருந்திருக்கும் என்பதை சென்னையில் நம் கண்முன்னே காட்டுகிறது, பிரமாண்டமான அந்த ‘செட்டிங்’. 35 அடி உயர கூண்டுக் கோபுரம். 20 அடி உயரத்தில் இருந்து கயிற்றில் சறுக்கி வரும் கம்பி அமைப்பு. வெடிகுண்டுகள் வெடித்து சிதறுவதற்கான கேபின். திகைக்கவைக்கும் திடீர் தீ மழைக்கான கட்டமைப்புகளோடு நிமிர்ந்து நிற்கிறது, அந்த செட்டிங் அரங்கம்.
அந்த (அமெரிக்க) அரங்கத்தில் தினமும் ஆலிவுட் அதிரடி சாகச சண்டைக்காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. சமூக விரோத கும்பல் ஒன்று அழகுப் பெண் ஒருத்தியை கடத்திச் செல்கிறது. மகளை பறிகொடுத்தவர் கண்ணீர் மல்க அலைந்து திரிகிறார். துப்பறியும் உளவுக் குழு ஒன்று அந்த பெண்ணை தேடி அலைகிறது. அப்போது கடத்தல் கோஷ்டிக்கும், உளவுக் குழுவிற்கும் இடையே கடும் சண்டை மூளுகிறது. துப்பாக்கி குண்டுகள் சீறிப் பாய்கின்றன. வெடிகுண்டுகள் வெடித்து சிதறுகின்றன. தீ மழை அந்தரத்தில் எழும்பி அதிரவைக்கிறது. உடலில் பற்றி எரியும் தீயுடன் ஒருவர் மரணகூச்சலோடு ஓடிக்கொண்டே இருக்கிறார். உயரமான கூண்டில் நிற்கும் கடத்தல்காரன் குண்டடிபட்டு பொத்தென்று தரையில் விழுகிறான்.
விறுவிறுப்பாக நடக்கும் இந்த ஆலிவுட் சாகச சண்டைக்காட்சியில் பார்வையாளர்கள் அனைவர் கண்களும் ஒருவர் மீது நிலைகுத்தி நிற்கிறது. அவர் குண்டு மழைக்குள் இரண்டு துப்பாக்கிகளோடு முன்னேறி எதிரிகளை சுட்டுத்தள்ளுகிறார். குத்துவிட்டு எதிரிகளை நிலைகுலையச் செய்கிறார். சாகசம் செய்கிறார். சாட்டையால் விளாசுகிறார். கம்பீரமாக நின்று எதிரிகளை துவம்சம் செய்யும் அவர் யார் என்பது காட்சியின் முடிவில்தான் தெரிகிறது. வெற்றியோடு அவர் தனது தொப்பியை கழற்றி முகத்தையும், நீள கூந்தலையும் காட்டும்போதுதான் பெண் என்பது புரிகிறது. அப்போது ரசிகர்களின் கரவொலி காதுகளை துளைக்கிறது. அவரது பெயர் லோரல்.
(இந்த சாகச காட்சி வி.ஜி.பி.பொழுதுபோக்கு பூங்காவில் தினமும் பல காட்சிகளாக நடந்துகொண்டிருக்கிறது. ஜூன் மாதம் 5–ந்தேதி வரை நடக்கிறது. இந்த ‘ஹாலிவுட் வைல்ட் வெஸ்ட் ஸ்டன்ட் ஷோ’வில் நான்கு ஆண்களும், 2 பெண்களும் பங்குபெறுகிறார்கள்)
சாகசத்தால் ரசிகர்களை கவர்ந்து, அவர்களின் அன்புப் பிடியில் சிக்கியிருந்த லோரலை பேட்டிக்காக சந்தித்தோம்:
உடற்பயிற்சியால் வலுவாகியிருக்கும் கட்டுடல், நேருக்கு நேரான பார்வை, குத்துச்சண்டை தெரிந்தவர்களுக்கான உடல்மொழி, ஆண்களைப் போன்ற கம்பீரம் போன்ற அனைத்தும் கலந்த கலவையாக லோரல் காட்சியளிக்கிறார்.
‘ஆண்களை எல்லாம் பந்தாடுகிறீர்களே! எப்படி இவ்வளவு உடல்வலுவோடு செயல்படுகிறீர்கள்?’ என்றதும், சிரித்தார்!
‘‘நான் அமெரிக்காவில் சிகாகோவில் பிறந்தவள். தந்தை என்னை ஒரு ஆண் போலவே வளர்த்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும், இல்லினாய்ஸ் வெஸ்லியன் யூனிவர்சிட்டியில் நடிப்பு பற்றி நான்காண்டுகள் படித்தேன். பின்பு இன்டர்நேஷனல் ஸ்டன்ட் ஸ்கூலில் இரண்டு வருடங்கள் பலவிதமான சண்டை பயிற்சிகளை பெற்றேன். ஆண்களோடு சேர்ந்துதான் எல்லாவற்றையும் செய்கிறேன். என்னை பெண்ணாக நினைத்து தனிமைப்படுத்தியிருந்தால் இந்த அளவுக்கு என்னால் வலிமை பெற்றிருக்க முடியாது. எனக்கு பயமே கிடையாது’’
நீங்கள் சாகசத்தின் மூலம் வெளிப்படுத்தும் கதையின் பின்னணி என்ன?
‘‘இன்று அமெரிக்கா உலகில் தலைசிறந்த நாடு. 1850–ம் ஆண்டுகளில் அங்கே சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஆங்காங்கே பல்வேறு சமூக விரோத குழுக்கள் தோன்றி மக்களுக்கு பல்வேறு விதங் களில் தொல்லைகொடுத்துவந்தது. கடத்தல், கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டது. அப்போது பிங்கர்டன் என்ற துப்பறியும் உளவுக்குழு அந்த சமூக விரோதிகளின் கொட்டத்தை அடக்க முன்வந்தது. அவர்கள் அதிரடி சாகசங்களில் கைதேர்ந்தவர்கள். தங்கள் முழு பலத்தைகாட்டி சமூக விரோதிகளை அடக்கி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவார்கள். அதனை மையப்படுத்தி ஆலிவுட் சினிமாக்கள் உருவாக்கப்பட்டன. அதை அடிப்படையாகவைத்துதான் நாங்கள் காட்சிகளை வடிவமைத்திருக்கிறோம். எங்களில் சிலரும் ஆலிவுட் சினிமாக்களில் நடித்திருக்கிறோம்’’
எத்தனை வருடங்களாக சண்டைக்காட்சிகளில் பங்குபெறுகிறீர்கள்? எத்தனை நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள்?
‘‘எனக்கு இப்போது 31 வயது. 22 வயதில் இருந்து பங்குபெறுகிறேன். அமெரிக்காவில் மேடை அதிரடி சாகசங்களிலும், டி.வி. காட்சிகளிலும் இடம் பெற்றிருக்கிறேன். இரண்டு ஆண்டுகளாக சீனாவில் ஷோக்களில் கலந்துகொண்டேன். முதல் முறையாக இப்போதுதான் இந்தியாவிற்கு வந்திருக்கிறேன்’’
இதற்கு முன்பு இந்தியாவிற்கும் உங்களுக்கும் ஏதாவது வகையில் தொடர்பு இருந்ததா?
‘‘சிகாகோவில் எனது பக்கத்துவீட்டில் இந்திய பெண் ஒருவர் வசித்தார். அவர் எனக்கு தோழியானார். அவரது வீட்டிற்கு சென்றால் சுவையான இந்திய டீ தயாரித்து தருவார். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்கே சென்னையிலும் தினமும் அதே சுவையில் நிறைய டீ பருகுகிறேன்’’
பொதுவாக இந்திய பெண்கள் 30 வயதிற்குள் திருமணம் செய்துகொள்வார்கள்.. நீங்கள்?
‘‘எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனாலும் திருமணம் நடக்கவில்லை. காரணம் எனக்கு இன்னும் நிறைய லட்சியங்கள் இருக்கின்றன. அதை அடைந்த பின்பு திருமணம் செய்துகொண்டால் போதும் என நினைக்கிறேன்’’
ஒவ்வொரு நாடாக நிகழ்ச்சிக்காக சுற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது?
‘‘ஜாலியாக இருக்கிறது. பிடித்த நண்பர்களோடு பயணம் செய்கிறேன். நடிப்பு, அதிரடி என்று வாழ்க்கை விறுவிறுப்பாக இருக்கிறது. புதுப்புது மனிதர்களை, பல்வேறுபட்ட ரசிகர்களை சந்திக் கிறோம். வித்தியாசமான உணவுகளை சுவைக்கிறோம். இந்த வாழ்க்கை எனக்கு பிடித்திருக்கிறது’’
சென்னை வெயிலை எப்படி தாக்குப்பிடிக்கிறீர்கள்?
‘கஷ்டம்தான். நிறைய தண்ணீர், காய்கறிகள், பழங்கள், மோர் என்று சாப்பிடுகிறோம். ஒவ்வொரு காட்சியிலும் வியர்வையில் குளிக்கிறோம். பின்பு தண்ணீரில் குளிக்கிறோம். வெயில் எங்களை கஷ்டப்படுத்தினாலும், இங்குள்ள ரசிகர்கள் தரும் பாராட்டு எங்களை ஜில்லென்று குளிர்ச்சியாக்கிவிடுகிறது’’
இங்கு தினமும் நிறைய பெண்களை சந்திக்கிறீர்கள். தமிழக பெண்களிடம் உங்களை கவர்ந்த விஷயம் எது?
‘‘கலர் கலராக அழகழகாக புடவை கட்டிக்கொண்டு வருகிறார் கள். அதற்கு ஏற்ற ஜாக்கெட் அணிந்திருக்கிறார்கள். எவ்வளவு நீளமாக கூந்தல் வளர்த்திருக்கிறார்கள். நன்றாக சிரிக்கிறார்கள். குழந்தைகளை எங்கள் கையில் கொடுக்கிறார்கள். எங்கள் கன்னத்தில் கிள்ளுகிறார்கள்”.
புடவை உடுத்தினால் நீங்களும் இதைவிட அழகாக இருப்பீர்கள்தானே?
‘‘உண்மைதான். ஆனால் அதை யாரால் சுற்றிச்சுற்றி உடுத்த முடியும். வாய்ப்பிருந்தால் ஒருநாள் உடுத்தி பார்க்கலாம்’’
இந்திய சினிமாக்கள் ஏதாவது பார்த்திருக்கிறீர்களா?
‘‘இல்லை. ஆலிவுட் சினிமாக்களை ரசிகர்கள் மிக அமைதியாக இருந்து ரசிப்பார்கள். ஆனால் இந்தியாவில் விசில் அடித்தும், கைதட்டியும் ரசிப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். சினிமாவுக்காக அல்ல, அப்படிப்பட்ட ரசிகர்களுக்காக இங்கு ஏதாவது ஒரு தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்க ஆசைப்படுகிறேன்’’
உங்கள் சாகசங்களை பார்த்துவிட்டு தமிழ் சினிமாவில் அதிரடி கதாநாயகியாக நடிக்க அழைத்தால்..?
‘‘நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன். என் தோழி ஒருத்தி ஏற்கனவே ரோபோ படத்தில் நடித்திருக்கிறாள்’’
அமெரிக்க பெண்கள் இப்போது இந்திய ஆண்களை திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறதே?
‘‘அதில் என்ன தப்பு! மனதுக்கு பிடித்தால் நாடு, மொழி எல்லாவற்றையும் மறந்து, இணைந்துவிடவேண்டியதுதான். அப்படி இரண்டு நாட்டினர் இணைந்தால் அவர்கள் வாழ்க்கை புதுமையாகவும், எதிர்பார்ப்புகள் நிறைந்ததாகவும் இருக்கும்’’
உங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால்..?
‘‘நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன். ஆனால் சரியானவர் கிடைக்கவேண்டுமே..!’’
ஷோவில் அதிரடியில் தூள்கிளப்பும் நீங்கள், நிஜத்தில் எங்கேயாவது உங்கள் திறமையை காட்ட வேண்டிய அளவுக்கு சம்பவம் ஏதாவது நடந்திருக்கிறதா?
‘‘இதுவரை இல்லை. என்னை போன்ற தன்னம்பிக்கை கொண்ட பெண்ணை பார்த்தாலே யாரும் தொந்தரவு தரமாட்டார்கள். எனக்கு தைரியம் அதிகம் என்பதால் யாரும் வாலாட்டவில்லையோ என்னவோ..!’’ என்றபடி சிரிக்கிறார், லோரல்.
இந்த குழுவில் கடத்தப்படும் பெண்ணாக வந்து சாகசம் செய்பவர், டேனியலி. இவருக்கு 29 வயது. இவர் மிக்சிகன் ஸ்டேட் யூனிவர்சிட்டியில் நடிப்பு மற்றும் தகவல் தொடர்பு கல்வி பயின்றவர். சிறு வயதில் இருந்தே நடித்துக்கொண்டிருக்கிறார். இவரும் திருமணமாகாதவர்.
‘‘இங்கே உள்ள மக்களின் அன்பையும், பாராட்டுகளையும் பார்க்கும்போது வெகு தூரத்தில் உள்ள இன்னொரு நாட்டிற்கு வந்ததுபோல் தெரியவில்லை. இங்குள்ள பெண்களும், குழந்தைகளும் என்னை மிகவும் கவர்கிறார்கள்’’ என்றார்.
வி.ஜி.பி. பொழுதுபோக்கு பூங்காவின் நிர்வாக இயக்குனர் வி.ஜி.பி. ரவிதாஸ், ‘‘இதுபோன்ற அதிரடி காட்சிகள் சிறுவர்கள் மற்றும் பெண்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. எல்லோருக்கும் இவர்களைப் போன்ற உடல் வலுவும், மனோதைரியமும் தேவை என்பதை உணர்த்துகிறது. பெண்களுக்குபிரச்சினைகள் எப்போதும், எங்கேயும் ஏற்படலாம். அதை கண்டு பயப்படாமல் எதிர்தாக்குதல் நடத்தும் ஆற்றலையும், சமயோசிதமாக நடந்துகொள்ளும் சக்தியையும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் உருவாக்கித்தரும். அதனால்தான் உலக அளவில் சிறந்த அதிரடி சாகச குழுக்களை ஒவ்வொரு ஆண்டும் இங்கு அழைத்து வருகிறோம். இது பொழுதுபோக்கிற்கானது அல்ல, தன்னம்பிக்கைக்கானது..’’ என்றார்.
அடுத்த ஷோ ஆரம்பித்துவிட, நம்மிடம் இருந்து விடைபெற்று துப்பாக்கியோடு துள்ளிக்குதித்து ஓடினார்கள், லோராவும், டேனியலியும்!




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.