கேரளாவில் இடதுசாரி வெற்றிப் போராட்டத்தில் பாஜக தொண்டர் பலி: டெல்லியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே தடையை மீறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் 600 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கேரளாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி அமைப்பினருடன் ஏற்பட்ட மோதலில் பாஜக தொண்டர் ஒருவர் பலியானார்.
இதைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக பாஜகவினர் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் அலுவலகத்தைச் சுற்றி நூற்றுக் கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் அங்கு கூடிய பாஜகவினர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பின்ர்.
இதையடுத்து மார்க்சிஸ்ட் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த அக்கட்சியினர், பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினர் போலீஸாரின் தடுப்புகளை மீறி அங்கிருந்த பெயர்ப்பலகையை சேதப்படுத்தினர். பின்னர் போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து டெல்லி காவல் துறை துணை ஆணையர் ஜதின் நர்வால் கூறும்போது, “போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 600 பேரை கைது செய்துள்ளோம். இப்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது” என்றார்.
டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் கபூர் கூறும்போது, “போராட்டம் அமைதியாக நடந்தது. ஆனாலும் போலீஸார் எங்கள் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கைது செய்தனர். வன்முறையில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை கைது செய்யவில்லை” என்றார்.
குடியரசுத்தலைவரிடம் புகார்
மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜீவ் பிரதாப் ரூடி, எம்பிக்கள் மீனாட்சி லேகி மற்றும் எம்.ஜே.அக்பர், கேரள பாஜக தலைவர் குமனம் ராஜசேகரன் உள்ளிட்டோர் நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஒரு புகார் மனுவை கொடுத்தனர்.
இதுகுறித்து நிதின் கட்கரி கூறும்போது, “கேரளாவில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது இடதுசாரி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில், பாஜக தொண்டர் பிரமோத் உயிரிழந்தார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவரிடம் ஆதாரங்களுடன் புகார் செய்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்” என்றார்.
‘வன்முறைக்கு காரணம் பாஜக’
மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, “மார்க்சிஸ்ட் கட்சியினர் வெற்றி ஊர்வலம் நடத்தினர். அப்போது, பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர்தான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மக்கள் தீர்ப்பை ஏற்க மறுத்து பாஜகவினர்தான் வன்முறையில் ஈடுபடுகின்றனர். ஆனால் எங்கள் கட்சியினர் மீது குற்றம் சாட்டுகின்றனர்” என்றார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.