* 4 பேர் கும்பல் வெறிச்செயல்
* குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி
அயனாவரத்தில் பிரபல ரவுடியை 4 பேர் கும்பல் பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்தது. போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த ஆவடி பூம்பொழில் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (28), பிரபல ரவுடி. ஓட்டேரியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டில் குடியிருந்தபோது, அங்கு ஒரு நபரை வெட்டி கொலை செய்துள்ளார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.இக்கொலை தொடர்பாக கார்த்திக்கை பழிக்குப்பழி வாங்க, அவரது எதிரிகள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், ஓட்டேரி சந்நியாசிபுரத்தில் உள்ள ஒரு நண்பரை பார்ப்பதற்காக நேற்று காலை 11.30 மணியளவில் கார்த்திக் வந்தார். அப்போது ஒரு மோட்டார் பைக்கில் 4 பேர் கும்பல் வந்தது. அவர்களது கையில் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் கார்த்திக்கை சுற்றி வளைத்தது. ஆனால், கும்பலின் பிடியிலிருந்து கார்த்திக் மின்னல் வேகத்தில் தப்பி, மேடவாக்கம் டேங்க் சாலை வழியாக ஓடினார். பின்னர் அங்கிருந்து விபி காலனி பகுதிக்குள் நுழைந்தார். எனினும், கும்பல் கார்த்திக்கை பின்தொடர்ந்து வந்தது. இதைப் பார்த்ததும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடிக்கு தப்பி ஓடினார்.அந்த கும்பலும் விடாமல் துரத்திச்சென்று, 4வது மாடியில் திறந்தவெளி பகுதியில் கார்த்திக்கை சுற்றி வளைத்தது. அங்கு கார்த்திக்கை சரமாரியாக அரிவாளால் வெட்டி தள்ளியது. இதில் கார்த்திக்கின் தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது. கார்த்திக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதைப் பார்த்ததும் கார்த்திக் இறந்துவிட்டதாக கருதி அங்கிருந்து தப்பி சென்றது.
இதை பார்த்த அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். தங்களது மாடியில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அயனாவரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் கந்தவேலு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரவுடி கார்த்திக்கை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கார்த்திக்கை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மதியம் கார்த்திக் இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் கந்தவேலு, சப்இன்ஸ்பெக்டர் சத்தீஸ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர், ஓட்டேரி சத்தியவாணிமுத்து நகர், சந்நியாசி புரம், குட்டியப்பன் நகர், லாக்மா நகர் ஆகிய பகுதிகளில் சல்லடை போட்டு தேடிவருகின்றனர். சினிமாவில் வரும் சேசிங் காட்சி போல் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.