Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2016

புதிய நிபந்தனையால் திருப்பம் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் போர் விமானங்கள் கிடைக்காது


பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் ‘எப்-16’ ரக போர் விமானங்கள் கிடைக்காது என தெரிய வந்துள்ளது.

‘எப்-16’ போர் விமானங்கள்

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 8 ‘எப்-16’ ரக போர் விமானங்களை விற்பனை செய்ய முடிவு செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்துக்கு வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இது குறித்த தகவல் வெளியானதும் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு வர்மாவை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நேரில் வரவழைத்து இந்தியாவின் எதிர்ப்பை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமெரிக்க செனட் சபை முட்டுக்கட்டை போட்டது. அது மட்டுமின்றி அந்த நாட்டின் எம்.பிக்களே, பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடும் ஆட்சேபம்

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த விவகாரம் குறித்து, அமெரிக்க பாராளுமன்ற வெளியுறவு கமிட்டியின் ஆசிய, பசிபிக் பிரிவுக்கான துணைக்குழு வாஷிங்டனில் கூடி விவாதித்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குடியரசு கட்சி எம்.பி., மேத் சால்மன், ஜனநாயக கட்சி எம்.பி., பிராட் ஷெர்மேன் உள்ளிட்டவர்கள் அமெரிக்காவின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். துணைக்குழுவின் தலைவர் இலியானா ரோஸ் லேட்டினனும் எதிர்ப்பு தெரிவித்தார். அனைவரும் பாகிஸ்தான் ‘எப்-16’ ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கூறினர்.

இப்போது செனட் சபையின் வெளியுறவு கமிட்டி தலைவர் பாப் பார்க்கரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதிய நிபந்தனை

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பை, வாஷிங்டனில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானுக்கு ‘எப்-16’ ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு பாராளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில், இந்த விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா தனது வெளிநாட்டு ராணுவ நிதி உதவியை பயன்படுத்துவதற்கு முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பின் அடிப்படையில், இந்த விமானங்களை வாங்குவதற்கு பாகிஸ்தான் தனது சொந்த நிதியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதை அந்த நாட்டிடம் தெரிவித்து விட்டோம்.

இவ்வாறு அவர்கூறினார்.

இதற்கான முடிவு எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்தோ அல்லது பாகிஸ்தானுக்கு எப்போது தெரிவிக்கப்பட்டது என்பது பற்றியோ அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

அமெரிக்காவின் இந்த புதிய நிபந்தனை, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

எவ்வளவு தர வேண்டும்?

8 ‘எப்-16’ ரக போர் விமானங்களின் விலை 700 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,620 கோடி) ஆகும். ஆனால் பாகிஸ்தான் முதலில் 270 மில்லியன் (சுமார் ரூ.1,782 கோடி) மட்டுமே தருவதாக ஒப்புக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மீதி தொகையை அமெரிக்கா தனது வெளிநாட்டு ராணுவ நிதி உதவி திட்டத்தின் கீழ் சரிக்கட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது எம்.பி.க்களின் கடும் எதிர்ப்பால் அந்த திட்டத்தின்கீழ் நிதியை விடுவிக்க முடியாது, பாகிஸ்தான் தன் சொந்தப்பணத்தை முழுமையாக கொடுத்துத்தான் விமானங்களை வாங்க வேண்டும் என்று தெளிவுபட கூறி விட்டது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட தொகையை விட இந்த தொகை கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு அதிகம் என்பதால் அவ்வளவு தொகையை அமெரிக்காவிடம் கொடுத்து பாகிஸ்தான் அந்த விமானங்களை வாங்குவதற்கான வாய்ப்பு இல்லை என தகவல்கள் கூறுகின்றன.

இந்த மாத இறுதிவரை விமானங்களை வாங்கிக்கொள்வதற்கு பாகிஸ்தானுக்கு அவகாசம் உள்ளது. மே மாதத்துக்குள் வாங்காவிட்டால் இன்னும் அதன் விலை உயரக்கூடும் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. எனவே பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் போர் விமானங்கள் கிடைக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.