Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 19, 2016

திருட்டு வி.சி.டி. தயாரிக்க உடந்தையாக இருந்த தியேட்டர் மீது தயாரிப்பாளர் சங்கம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: நடிகர் விஷால் பேட்டி


திருட்டு வி.சி.டி. தயாரிக்க உடந்தையாக இருந்த தியேட்டர் மீது தயாரிப்பாளர் சங்கம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், படஅதிபர் ஞானவேல்ராஜா ஆகிய இருவரும் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது விஷால் கூறியதாவது:-

திருட்டு வி.சி.டி. தியேட்டர்

திருட்டு வி.சி.டி. தயாரிப்பதற்கு பெங்களூரில் உள்ள ‘ஓரியன் மால்’ என்ற தியேட்டர் உடந்தையாக இருந்திருக்கிறது. சமீபகாலத்தில் மட்டும் 7 படங்களின் திருட்டு வி.சி.டி. அந்த தியேட்டரில் இருந்து படமாக்கப்பட்டிருக்கிறது. அதில், ஆர்யா நடித்த ‘வி.எஸ்.ஓ.பி.’, இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள்’ ஆகிய படங்களும் அடங்கும். அந்த தியேட்டரில் இருந்துதான் திருட்டுத்தனமாக வி.சி.டி. தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், சூர்யா நடித்த, ‘24’ என்ற படமும் அதே தியேட்டரில் இருந்து திருட்டுத்தனமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒருவாரத்துக்கு முன்பு புகார் செய்தோம். அந்த தியேட்டர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

‘மருது’ படம்

நாளை (வெள்ளிக்கிழமை) நான் நடித்த ‘மருது’ படம் வெளியாக இருக்கிறது. அதுவும் திருட்டு வி.சி.டி.யாக வந்துவிடுமோ என்று பயப்படுகிறேன். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்து ஒருவாரம் ஆகிறது. இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று புரியவில்லை.

இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் உடனே தலையிட்டு, திருட்டு வி.சி.டி. தயாரிக்க உடந்தையாக இருந்த தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இவ்வாறு விஷால் கூறினார்.

ஞானவேல்ராஜா பேட்டி

படஅதிபர் ஞானவேல்ராஜா கூறியதாவது:-

“தமிழ் திரையுலகில் இப்போது 40 தயாரிப்பாளர்கள் தான் படம் தயாரித்துக்கொண்டு இருக்கிறோம். நாளுக்கு நாள் படம் தயாரிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்த நிலை நீடித்தால் சினிமா தொழிலே முழுவதுமாக அழிந்துவிடும்.

எனவே, தயாரிப்பாளர்கள் சங்கம் உடனடியாக தலையிட்டு இதில் ஒரு முடிவு எடுக்கவேண்டும். இல்லையென்றால், சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம். இப்போது படஅதிபர்களுக்கு அவர்கள் தயாரிக்கும் படங்களில் இருந்து 20 சதவீதம் மட்டுமே வருமானம் வருகிறது. மீதி 80 சதவீதம் வருமானம் திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்களுக்கு போய்விடுகிறது. இதுபற்றி அமைய இருக்கும் புதிய அரசாங்கத்திடம், தயாரிப்பாளர்கள் சங்கம் முறையிட வேண்டும்”.  மேற்கண்டவாறு ஞானவேல்ராஜா கூறினார்.

பேட்டியின்போது, படஅதிபர்கள் எல்ரெட்குமார், ராஜசேகர், ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.