Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 19, 2016

தங்கையின் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைப்பதற்காக ஆம்புலன்சை கடத்தி சென்ற வாலிபர் வாகன சோதனையில் பிடிபட்டார்


வேடசந்தூர் அருகே தங்கையின் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைப்பதற்காக ஆம்புலன்சை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்புலன்ஸ் வாகனம்

திண்டுக்கல் திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனம் வேடசந்தூர் அருகே கோட்டையூரில் உள்ள நூற்பு ஆலையின் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும். திண்டுக்கல்- கரூர் 4 வழிச்சாலையில் விபத்துகள் நடந்தால் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அந்த ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவார்கள்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த சக்திவேல்முருகன் (வயது 40) என்பவர் அந்த ஆம்புலன்சை ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் அவர் வழக்கமாக நிறுத்தும் நூற்புஆலையின் முன்பு ஆம்புலன்சை நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

வாகனசோதனை

அப்போது மறந்து போய் சாவியை எடுக்காமல் சென்றுவிட்டார். டீ குடித்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது ஆம்புலன்ஸ் வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. உடனே இதுகுறித்து அவர் வேடசந்தூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் நேற்று காலை வேடசந்தூர்- கரூர் 4 வழிச்சாலையில் மினுக்கம்பட்டி பிரிவு அருகே வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்சை நிறுத்தும்படி சைகை காட்டினர்.

மடக்கி பிடித்தனர்

போலீசார் நிற்பதை கண்டதும் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டி வந்தவர் சிறிது தூரத்திலேயே அதனை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றார். சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் மதுரை பைக்கார, முத்துராமலிங்கபுரம் மெயின் தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவருடைய மகன் விவேக்குமார் (29) என்பதும், கோட்டையூரில் காணாமல் போன ஆம்புலன்ஸ் வாகனத்தை கடத்தி செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆம்புலன்ஸ் வாகனத்தையும் மீட்டனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

நான் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். அப்போது எனது தங்கை திருமணத்திற்காக ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருந்தேன். பின்னர் வேலை பிடிக்காமல் அதை விட்டுவிட்டு திருப்பூரில் தனியார் நூற்பு ஆலையில் பார்த்து வந்தேன்.

பணம் கேட்டு தொந்தரவு

இந்தநிலையில் சட்டசபை தேர்தலையொட்டி ஓட்டுப்போடுவதற்காக மதுரைக்கு வந்தேன். அப்போது கடன்கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். பின்னர் ஓட்டுபோட்டு விட்டு மீண்டும் திருப்பூருக்கு புறப்பட்டேன். அப்போது மதுரையில் இருந்து தவறுதலாக சேலம் பஸ்சில் ஏறிவிட்டேன்.

பஸ் டிரைவருக்கும், எனக்கும் ஏற்பட்ட தகராறில் அவர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே என்னை இறக்கி விட்டு விட்டார். கையில் ரூ.30 மட்டும் இருந்ததால் திருப்பூருக்கு செல்ல பணம் இல்லை. எனவே அங்கிருந்து நடந்து வந்தபோது கோட்டையூரில் ஆள் இல்லாமல் சாவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் நின்று கொண்டு இருந்தது.

பரபரப்பு

எனவே ஆம்புலன்சை கடத்தி சென்று விற்று தங்கையின் திருமணத்திற்கு வாங்கிய ரூ.3 லட்சம் கடனை அடைத்து விடலாம் என்று எண்ணினேன். அதன்படி ஆம்புலன்சை கடத்தி சென்றபோது தூக்கம் வந்ததால் அதனை சாலையோரமாக நிறுத்தி விட்டு தூங்கினேன். பின்னர் காலையில் எடுத்து கொண்டு சென்றபோது போலீசாரிடம் மாட்டிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரை போலீசார் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.