Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 24, 2016

ஈரோட்டில் பரபரப்பு சம்பவம் வடமாநிலத்தவர்களை ஏமாற்றி கட்டாய வேலைக்கு அனுப்பிய 5 பேர் கைது 7 பேர் மீட்பு


ஈரோட்டில் வடமாநிலத்தவர்களை ஏமாற்றி கட்டாய வேலைக்கு அனுப்பிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 7 வடமாநிலத்தவர்களை போலீசார் மீட்டனர்.

தறிப்பட்டறை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 53). இவர் அந்த பகுதியில் தறிப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய பட்டறையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்பவர் வேலை செய்து வருகிறார். தறிப்பட்டறையில் வேலைக்கு கூடுதலாக ஆட்கள் தேவைப்பட்டது. இதனால் மனோஜ் தனது உறவினர் வாசுதேவ் என்பவரை ஒடிசாவில் இருந்து வேலைக்கு அழைத்து வருவதாக கதிர்வேலிடம் கூறினார்.

அதன்படி வாசுதேவ் ஒடிசாவில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தார். அதன்பின்னர் அவர் ஈரோட்டிற்கு வந்த தகவலை மனோஜின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதையடுத்து வாசுதேவை அழைத்து செல்வதற்காக கதிர்வேல், மனோஜ் ஆகியோர் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு வாசுதேவை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து அவர்கள் வாசுதேவின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது வாசுதேவ், தனக்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி சிலர் என்னை ஒரு அறையில் அடைத்து வைத்து உள்ளதாக கூறினார்.

போலீஸ் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடை ந்த அவர்கள் ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் ஈரோடு ரெயில் நிலையம் பகுதியில் ரோந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், வாசுதேவை 2 பேர் அழைத்து சென்று ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்திருப்பதாக தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, வடமாநிலத்தை சேர்ந்த 7 பேரை ஒரு அறையில் அடைத்து வைத்திருந்ததாகவும், அவர்கள் சில நிமிடங்களுக்கு முன்பு ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி சென்றதாகவும் ஓட்டலில் இருந்தவர்கள் கூறினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை தேடி ரெயில் நிலையம் நோக்கி விரைந்தனர்.

7 பேர் மீட்பு

அங்கு ஈரோடு ரெயில்வே போலீசார் உதவியுடன் சூரம்பட்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடைமேடையில் நின்றுகொண்டு இருந்த வாசுதேவை மனோஜ் அடையாளம் காட்டினார். இதையடுத்து வாசுதேவ் உள்பட வடமாநிலத்தை சேர்ந்த 7 பேரை போலீசார் மீட்டனர். மேலும், வடமாநிலத்தவர்களை கட்டாயப்படுத்தி வேலைக்கு அழைத்து சென்றதாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள், ஒடிசா மாநிலம் பொல்லாங்கீர் மாவட்டம் மூங்குடிபாபி பகுதியை சேர்ந்த ரபிக்கான் மகன் முன்னாகான் (23), அசாம் மாநிலம் மஸ்தச்லாங் மாவட்டம் விஜயலங்கா பகுதியை சேர்ந்த ராஜலு (24), ஈரோடு ஸ்டோனி பாலம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (42) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் வெளியான தகவல் வருமாறு:-

இடைத்தரகர்கள்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மோர்பாளையம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (42), மூர்த்தி ஆகியோர் வடமாநிலத்தவர்களை ஏமாற்றி கட்டாய வேலைக்கு அனுப்பி வைக்கும் இடைத்தரகர்களாக செயல்பட்டனர். இதற்காக வடமாநிலத்தவர்களிடம் இந்தியில் பேசி அவர்களை நம்ப வைக்கும் பணியில் முன்னாகானும், ராஜலுவும் செயல்பட்டனர். மாணிக்கம், மூர்த்தி, முன்னாகான், ராஜலு ஆகியோர் ஈரோட்டிற்கு வேலை தேடி வரும் வடமாநிலத்தவர்களை நம்ப வைத்து தொழில் அதிபர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வெவ்வேறு வேலைக்கு குறைந்த சம்பளத்தில் அனுப்பி வைக்கிறார்கள்.

அதன்படி கடந்த சில நாட்களாக வேலை தேடி வந்த வடமாநிலத்தை சேர்ந்த சிலரை அவர்கள் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றனர். இவ்வாறு வாசுதேவ் உள்பட 7 பேரை அவர்கள் அழைத்து ஒரு அறையில் தங்க வைத்து இருந்தனர். இதையடுத்து ரிக் வண்டியில் வேலைக்கு அமர்த்துவதற்காக அந்த 7 பேரையும் அவர்கள் புனேவுக்கு அனுப்பி வைக்க முயன்றபோது ஈரோடு ரெயில் நிலையத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேற்கண்ட விவரங்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைது

அதைத்தொடர்ந்து முன்னாகான், ராஜலு, மூர்த்தி, ரிக் வண்டி உரிமையாளர்களான நாமக்கல் மாவட்டம் சிதுமல் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (44), நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி பகுதியை சேர்ந்த குழந்தைவேல் (38) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மாணிக்கத்தை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோட்டில் வடமாநிலத்தவர்களை ஏமாற்றி வேலைக்கு அனுப்பி வைக்கும் கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.