Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2016

90 வயது: எலிசபெத் ராணியின் ஆடை அழகு ரகசியங்கள்


இவர், எவ்வளவு காலமாக அரச பீடத்தில் இருக்கிறார் என்பதை ஒப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், இவரது காலத்தில் இங்கிலாந்து 18 பிரதமர்களைக் கண்டிருக்கிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் 11 அதிபர்கள் ஆட்சி செலுத்தியிருக்கிறார்கள்.

ராணி எலிசபெத்தை அறிந்தவர்கள், அவர் ஒரு இனிய முரண்பாடுகளின் தொகுப்பு என்கிறார்கள்.

அரச குடும்பத்துக்கே உரிய அந்தஸ்து, அதேநேரம் தன்மை, எல்லோரும் அறிந்தவராக இருப்பது, அதேநேரம் கொஞ்சம் ரகசியம் கொண்டவர் போலத் தோன்றுவது, அரச கம்பீரம், அதேநேரம் எளிமை... இப்படி எதிரெதிர் அம்சங்களின் கூட்டணிதான், இரண்டாம் எலிசபெத்.

உலகத்தின் புகழ்பெற்ற பெண்மணிகளில் ஒருவராக, எப்போதும் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நெருக்கடி ராணி எலிசபெத்துக்கு இருக்கிறது. ஆனால் அந்தச் சவாலை இவர் லாவகமாகவே கையாண்டு வருகிறார்.

இங்கிலாந்தின் அடையாளங்களில் ஒன்றாக, பணத்தாள்கள், நாணயங்கள், ஸ்டாம்புகள், நினைவுப்பரிசுப் பொருட்கள் என்று எல்லாவற்றிலும் ராணியின் முகம் இடம்பெற்றுவருகிறது.

பழமையையும் பாரம்பரியத்தையும் போற்றும் இங்கிலாந்து மக்களின் ராஜ பிரதிநிதி என்ற முறையில் எப்போதும் அழகாகவும் கம்பீரமாகவும் ராணி தோன்ற வேண்டி இருக்கிறது. அதற்காகவே அவர் தனது ஆடை, அணிகலன்களில் ஆழ்ந்த கவனம் செலுத்துகிறார்.

ராணியின் வசிப்பிடமான பக்கிங்காம் அரண்மனையில், விதவிதமான ஆடைகள் அணிவகுத்திருக்கும் பல ஆடை அலமாரிகள் இருக்கின்றன. (அனைத்து விஷயங்களையும் அலசி, பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ஆடைகள் விரைவில் கண்காட்சியாகவும் வைக்கப்பட இருக்கின்றன.)

எல்லா ஆடைகளுமே ஆடம்பரத்தையும் அரச கம்பீரத்தையும் வெளிப்படுத்துபவை அல்ல. பல ஆடைகள், ஒரு சாதாரண இங்கிலாந்து பெண்மணி அணியக்கூடியவை. குதிரையேற்றத்திற்கும், நாய்களைப் பராமரிக்கும் நேரத்துக்கும் உரிய ஆடைகளும் அங்கே இடம்பிடித்திருக்கின்றன.

அதேநேரம், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஹார்ட்னெல்லின் கைவண்ணத்தில் உருவான ‘பார்மல்’ ஆடைகளும் உள்ளன. தான், ராணி எலிசபெத்தை முதன்முதலில் சந்தித்த நாளை ஹார்ட்னெல் தனது நூலில் நினைவுகூர்கிறார். வெகு காலத்துக்கு முன்பு, அதாவது 1935–ம் ஆண்டில் ஹார்ட்னெல்லின் கடைக்கு வந்திருந்தார், குட்டி எலிசபெத். அப்போது, திருமணம் காணும் உறவுப் பெண் ஒருவருக்கு மணப்பெண் தோழியாகச் செல்லவிருந்த எலிசபெத்துக்கு, ஹார்ட்னெல் ஆடை வடிவமைத்துக் கொடுத்தாராம். தங்களின் பாரம்பரிய கம்பீரத்தைப் பிரதிபலிப்பதாக தங்களுக்கான ஆடைகள் இருக்கவேண்டும் என்பதில் அரச குடும்பத்தினரும் அவ்வளவு அக்கறையாக இருப்பார்களாம். அதற்காகவே இவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்று முந்தைய ராஜா, ராணிகளின் படங்களைக் காண்பிப்பார்களாம்.

ராணி எலிசபெத்துக்காக தான் பல ஆடைகளை வடிவமைத்திருந்தாலும், 1947–ல் அவரது திருமணத்துக்கு தான் உருவாக்கிய ஆடையும், 1953–ல் அவரது முடிசூட்டு விழாவுக்கு தான் வடிவமைத்த ஆடையும் தனது நினைவில் சிறப்பிடம் பெற்றிருப்பதாகச் சொல்கிறார், ஹார்ட்னெல்.

அதிலும் ராணியின் திருமண ஆடை வடிவமைப்புக்குப் பின்னே சில சம்பவங்கள் நடந்தன என்று அவர் விவரிக்கிறார்...

‘ராணியின் திருமண ஆடைக்காக நான் ஸ்காட்லாந்து நிறுவனம் ஒன்றுடன் பேசினேன். அந்த விஷயம் வெளியே கசிந்தபோது பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது. இங்கிலாந்து இளவரசிக்கு எப்படி ஸ்காட்லாந்து துணியைப் பயன்படுத்தலாம்? அதிலும், அந்தப் பட்டாடையின் தோற்றத்தின் பின்னணியில் இருக்கும் பட்டுப்புழுக்கள் இத்தாலியைச் சேர்ந்ததாகவோ, ஜப்பானைச் சேர்ந்ததாகவோ இருக்கக்கூடும் என்று சிலர் எதிர்ப்புக்குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். (உலகப் போர் சமயத்தில் இங்கிலாந்தின் எதிரி நாடுகளாக இருந்தவை இத்தாலியும், ஜப்பானும்!) வேண்டும் என்றேவா நான் எதிரிநாட்டு பட்டுப்புழுக்கள் தந்த பட்டிழைகளில் உருவான துணியைப் பயன்படுத்துகிறேன் என்று நான் வேதனைப்பட்டேன். கடைசியாக நல்லவேளையாக அந்த ஆடையின் பட்டிழைகளின் பிறப்பிடம் சீனா என்று தெரியவந்தது. எல்லோரும் ஒருவழியாக ஏற்றுக்கொண்டார்கள்!’ என்கிறார்.

மறைந்த இளவரசி டயானா உள்பட ராஜ குடும்ப மணப்பெண்கள் அனைவரது மண ஆடை ரகசியத்தையும் பாதுகாக்க ஹார்ட்னெல் போன்ற ஆடை வடிவமைப்பாளர்கள் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்கள்.

இளவரசி எலிசபெத்தின் திருமண ஆடை எப்படி இருக்கும் என்பதை அறிய அப்போது உலகமே பெரும் ஆர்வத்தோடு முட்டிமோதி யிருக்கிறது.

அந்த ரகசியத்தைக் காக்க ஹார்ட்னெல்லும் அவரது சக ஊழியர்களும் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். அவரது ஆடை வடிவமைப்பகத்தின் ஜன்னல் கண்ணாடிகளுக்கு எல்லாம் வண்ணம் பூசி மறைத்திருக்கிறார்கள். மெல்லிய திரைச்சீலைகளை மாற்றி கனமான திரைச்சீலைகளை போட்டிருக்கிறார்கள்.

இளவரசி எலிசபெத்தின் திருமணத்துக்குப் பின் ஆறாண்டுகள் கழித்து அவரது முடிசூட்டு விழாவுக்கான ஆடையையும் தான் வெகு கவனமாக உருவாக்கியதாகக் கூறுகிறார், ஹார்ட்னெல். நீண்ட நெடிய ஆராய்ச்சிக்குப் பின், நுணுக்கமான அலங்காரங்கள், நகாசு வேலைகளுடன் தான் அந்த ஆடையை உருவாக்கி முடித்தேன் என்கிறார். இங்கிலாந்து அரச குடும்பம் சம்பந்தப்பட்ட அனைத்து இலச்சினைகளும் அந்த ஆடையில் இடம்பெற்றிருந்தனவாம்.

ராணியின் ஆடைக்குப் பொருத்தமான வண்ணம் மற்றும் அலங்காரத்திலான தொப்பியை தயாரித்து வழங்குவதும் ஆடை வடிவமைப்பாளரின் பொறுப்பு ஆகிறது.

ஹார்ட்னெல்லுக்குப் பிறகு ஹார்டி அமீஸ் என்பவர் ராணியின் பிரதான ஆடை வடிவமைப்பாளராக இருந்திருக்கிறார். இவர், தான் ராணிக்காக வடிவமைத்த ஆடைகளில், 2008–ல் அவரது பேரன் பீட்டர் பிலிப்சின் திருமணத்துக்காக தான் உருவாக்கிய நீல நிற ஆடை தனக்கு ரொம்பப் பிடித்தது என்கிறார்.

ஹார்டி அமீஸுக்குப் பிறகு தற்போது அரச ஆடை வடிவமைப்பாளராக இருப்பவர், ஏஞ்சலா கெல்லி. ராணியின் ஆடைகள் தொடர்பாக சொல்வதற்கு இவருக்கும் நிறையக் கதைகள் உண்டு.

இவர்கள் அனைவருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன்படி செயல்படுகிறார்கள்.

அதனால்தான் அரச குடும்பத்தின், குறிப்பாக ராணி இரண்டாம் எலிசபெத்தின் நம்பிக்கையையும், பாராட்டுதலையும் ஒரு சேரப் பெற்றிருக்கிறார்கள்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.