Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 5, 2016

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 69 ரன் விளாசல்: இந்திய அணியில் ரிஷாப் பான்ட் இடம் பிடிப்பார் குயின்டான் டி காக் சொல்கிறார்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 69 ரன்கள் விளாசிய டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் ரிஷாப் பான்ட் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று சக வீரர் குயின்டான் டி காக் கூறியுள்ளார்.


டெல்லி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ராஜ்கோட்டில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்சை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த ரெய்னா தலைமையிலான குஜராத் அணி 7 விக்கெட்டுக்கு 149 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 53 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய டெல்லி அணி ரிஷாப் பான்ட் (69 ரன், 40 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), குயின்டான் டி காக் (46 ரன், 45 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோரின் சூப்பரான தொடக்கத்தின் உதவியுடன் 17.2 ஓவர்களில் இலக்கை எளிதில் எட்டிப்பிடித்தது.

ஆட்டநாயகன் விருது பெற்ற 18 வயதான ரிஷாப் பான்ட் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இவர் ரூ.1.9 கோடிக்கு டெல்லி அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். முந்தைய இரு ஆட்டங்களில் பின்வரிசையில் (20, 4 ரன்) ஆடிய ரிஷாப் பான்ட் இந்த ஆட்டத்தில் முதல்முறையாக தொடக்க வரிசையில் இறங்கி, கலக்கியிருக்கிறார்.

ரிஷாப் பான்ட் பேட்டி

இது குறித்து ரிஷாப் பான்ட் கூறும் போது, ‘குயின்டான் டி காக் எனக்கு ஆதரவாக இருக்கிறார். எந்தெந்த பவுலர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லி கொடுத்தார். ஏதுவான பந்து கிடைத்தால், விரட்டியடி என்றும் கூறினார். நான் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். பேட்டிங்கில் அவருடன் இணைந்து அனுபவித்து ஆடினேன். என்னை தொடக்க ஆட்டக்காரராக இறக்குவது என்பது அணி நிர்வாகம் மற்றும் கேப்டனின் முடிவு. என் மீது அவர்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. அந்த நம்பிக்கையை நானும் காப்பாற்றி இருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும் போது அதை இரண்டு கையாலும் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்று கேப்டன் ஜாகீர்கான் என்னிடம் கூறினார். அதை நான் செய்து விட்டேன்.

அணியின் ஆலோசகர் ராகுல் டிராவிட் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லி கொடுக்கிறார். அத்துடன் குயின்டான் டி காக், டுமினி ஆகியோரிடம் இருந்து நிறைய விஷயங்களை நீ கற்றுக்கொள்ள முடியும் என்றும் சொன்னார். நான் இளம் வீரர். டி காக், டுமினி பல சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். அதனால் அவர்கள் எனக்கு கிரிக்கெட் நுணுக்கங் களை கற்று கொடுப்பார்கள். அதை நான் பயன்படுத்திக்கொள்வேன்’ என்றார்.

டி காக் கருத்து

23 வயதான குயின்டான் டி காக் (தென்ஆப்பிரிக்காச் சேர்ந்தவர்) கூறும் போது, ‘இந்த ஆட்டத்தில் ரிஷாப் பான்ட் ஆதிக்கம் செலுத்திய விதத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குரிய நெருக்கடியை அவர் எடுத்துக் கொண்டு, ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். பொதுவாக, ஆட்டத்தின் ஒரு முனையில் நான் ஆதிக்கம் செலுத்த வேண்டியது முக்கியம் என்று நினைப்பேன். ஆனால் இன்றைய ஆட்டத்தில் எனது பணியை அவர் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து இதே போன்று அவர் விளையாடுவார் என்று நம்புகிறேன்.

ரிஷாப் பான்ட்டுக்கு பெரிய அளவில் அறிவுரை வழங்க வேண்டியதில்லை. அவர் மிகவும் திறமைசாலி. கிரிக்கெட்டில் கற்றுக்கொள்வதில் அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. எங்கிருந்தாலும் அவரை நான் வழிநடத்துவேன். அவர் முன்னேற்றம் அடைவதற்கு என்ன வேண்டுமோ அதை செய்வேன். நிச்சயம் ஒரு நாள், இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடுவதை நாம் பார்ப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.