Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 19, 2016

விவாகரத்துக்கு பின்னர் கணவர் குடும்பத்தினர் வரதட்சணையை திருப்பிக்கொடுக்க முன்வந்தால் வரவேற்க வேண்டும் கீழமை நீதிமன்றத்துக்கு, ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.விமலா அறிவுரை


விவாகரத்துக்கு பின்னர் வரதட்சணை பொருட்களை கணவர் குடும்பத்தினர் திருப்பிக்கொடுக்க முன்வரும்போது, அதை வரவேற்று தீர்வுகாண முன்வரவேண்டும் என்று தாம்பரம் சார்பு நீதிமன்ற நீதிபதிக்கு, ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.விமலா அறிவுரை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

வரதட்சணை பொருட்கள்
சென்னையை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி காவேரி. இவரது மகனுக்கும், இந்து என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, கடந்த 2014–ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், திருமணத்தின்போது தன் மருமகள் கொண்டுவந்த வரதட்சணை பொருட்களை திருப்பிக்கொடுக்க விரும்புவதாகவும், இந்த பொருட்களை அடையாளம் கண்டு எடுத்துச்செல்ல வக்கீல் ஒருவரை மத்தியஸ்தராக நியமிக்கவேண்டும் என்றும் தாம்பரம் சார்பு நீதிமன்றத்தில் சுந்தரமும், காவேரியும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.

சாமி வரம்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:–

சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி விடமாட்டார் என்பார்களே, அந்த உதாரணத்துக்கு பொருத்தமான வழக்கு இதுதான். வரதட்சணை பொருட்களை திருப்பிக்கொடுக்க மாமனார், மாமியார் முன் வந்தும், அதை கீழமை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாமல், தடுக்கும் விதமாக செயல்பட்டுள்ளது.

குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்குகளில், வரதட்சணை பொருட்களை திரும்ப பெற முடியாமல் பல பெண் வீட்டார் தவித்து கொண்டிருக்கின்றனர். அதற்காக வழக்கு தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், இந்த வழக்கு அப்படி அல்ல.

விவாகரத்து
மனுதாரர்களின் மகனுக்கும், எதிர்மனுதாரர் இந்துவுக்கும் கடந்த 2014–ம் ஆண்டு தாம்பரம் சார்பு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. பின்னர், வரதட்சணை பொருட்களை திரும்ப கேட்டு இந்து வழக்கு தொடர்ந்துள்ளார். அதை ஏற்றுக்கொண்டு, வரதட்சணை பொருட்களை திரும்ப ஒப்படைக்கும்படி கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்பின்னர், மனுதாரர்கள் வரதட்சணை பொருட்களை திரும்பக்கொடுக்க தயாராக உள்ளதாகவும், அதற்காக வக்கீல் ஒருவரை மத்தியஸ்தராக நியமிக்கவேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை தாம்பரம் சார்பு நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

வரவேற்க வேண்டும்
விவாகரத்து வழக்கு ஏற்கனவே முடிவுக்கு வந்த பின்னர், எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு ஏற்கமுடியும்? என்று கேள்வி எழுப்பி, மனுவை கடந்த மார்ச் மாதம் நிராகரித்துள்ளது.

ஆனால், இந்து திருமண சட்டத்தின் பிரிவு 27, வரதட்சணை சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளை விசாரிக்க சம்பந்தப்பட்ட சார்பு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்குகிறது.

தற்போது, விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்த பின்னர், கணவர் குடும்பத்தார் வரதட்சணை பொருட்களை திருப்பிக்கொடுக்க தாமாக முன்வரும்போது, அதை நீதிமன்றம் வரவேற்று, அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். அதை செய்யாமல், அவர்களது கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது.

சட்டப்படி உத்தரவு
அதனால், மனுதாரரின் மனுவை தாம்பரம் சார்பு நீதிபதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, சட்டப்படி தகுந்த உத்தரவினை ஒரு மாதத்துக்குள் பிறப்பிக்க வேண்டும்.  இவ்வாறு நீதிபதி விமலா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.