Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 5, 2016

சட்டக்கல்லூரி மாணவியை தொடர்ந்து கேரளாவில் மேலும் ஒரு தலித் மாணவி கற்பழிப்பு நண்பர்களுடன் சேர்ந்து காதலன் வெறிச்செயல்; 3 பேர் கைது


கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கற்பழித்து கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு தலித் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கற்பழித்து கொலை

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்துக்கு உட்பட்ட பெரும்பாவூரை சேர்ந்த ஏழை தலித் குடும்பத்தை சேர்ந்த ஜிஷா என்ற சட்டக்கல்லூரி மாணவி கடந்த 28-ந் தேதி மர்ம நபர்களால் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி நிர்பயா சம்பவத்தை போன்று அரங்கேறியுள்ள இந்த கொடூர செயல், கேரளாவில் மட்டுமின்றி தேசிய அளவில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு தலித் மாணவி கற்பழிப்பு சம்பவம் நடந்தேறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

காதலன் சதிச்செயல்
திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள அனயரா பகுதியை சேர்ந்த அந்த 19 வயது மாணவி 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இவர் கொல்லத்தில் உள்ள தனது காதலன் ஷைஜுவை பார்த்து விட்டு, நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு திரும்பினார்.

அப்போது அவருடன் வந்த ஷைஜு, தனது நண்பர்கள் 3 பேர் மற்றும் ஒரு ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து வர்க்கலை அருகே உள்ள அயந்தி பகுதிக்கு இளம்பெண்ணை கடத்தி சென்று வலுக்கட்டாயமாக கற்பழித்தார். பின்னர் அவரை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடினர்.

தீவிர சிகிச்சை

சிறிது நேரத்துக்குப்பின் அந்த பகுதியில் ஆட்டோ ஒன்று அனாதையாக நின்றதை கண்ட அப்பகுதியினர் அங்கே சென்று பார்த்தனர். அப்போது இளம்பெண் வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனே அவர்கள் அவரை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

உம்மன்சாண்டி ஆறுதல்

இதற்கிடையே கற்பழித்து கொல்லப்பட்ட சட்டக்கல்லூரி மாணவி ஜிஷாவின் தாய் உடல் நலக்குறைவால் பெரும்பாவூரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரை நேற்று முதல்-மந்திரி உம்மன்சாண்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நீதிக்கு முன் நிறுத்துவோம் என்றும், ஜிஷாவின் குடும்பத்தை பராமரிப்பதற்காக அவரது சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

மனித உரிமை ஆணையம் நோட்டீசு

முன்னதாக உம்மன்சாண்டி மருத்துவமனைக்கு வந்த போது அங்கு குழுமிய இடதுசாரி கட்சிகளை சேர்ந்த மாணவர் அமைப்பினர், இந்த வழக்கில் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யாததை கண்டித்து கோஷமிட்டனர்.

சட்டக்கல்லூரி மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தானாகவே முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு கேரள தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. மற்றும் எர்ணாகுளம் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.