Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 27, 2016

இடவசதியில்லாததை கண்டித்து நாகர்கோவில்– மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து பயணிகள் திடீர் போராட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு


இடவசதியில்லாததை கண்டித்து நாகர்கோவில்– மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாராந்திர ரெயில்
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக துணை ராணுவ படையினர் அனைவரும் சிறப்பு ரெயில் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய முகாம் பகுதிகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை ராணுவ படையினர் 300–க்கும் மேற்பட்டோர் தங்கள் பணி முடிவடைந்ததையடுத்து நேற்று ரெயிலில் புறப்பட்டனர்.

கடும் இடநெருக்கடி
இவர்கள் நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்பதிவு செய்யாத 4 பெட்டிகளில் பயணம் செய்தனர். இதனால் அந்த பெட்டிகளில் பயணம் செய்ய பயணச்சீட்டு எடுத்திருந்த பயணிகளுக்கு கடும் இடநெருக்கடி ஏற்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து ரெயில் புறப்படும்போதே இந்த பிரச்சினை ஏற்பட்டது. இருப்பினும் பயணிகள் சிரமத்துடன் பயணம் செய்தனர்.

இதனிடையே இந்த ரெயில் திருச்சி ரெயில் நிலையத்தை மதியம் 1.30 மணியளவில் வந்தடைந்தது. அப்போது அங்குள்ள பயணிகள் விழுப்புரம், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏறினார்கள். ஏற்கனவே இருந்த இடநெருக்கடி காரணமாக திருச்சியில் இருந்து ஏறிய பயணிகளுக்கு முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணம் செய்ய போதிய இடவசதியில்லை. இதனால் அவர்கள் அங்கிருந்த ரெயில்வே அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட்டு தகராறு செய்தனர்.

பயணிகள் அவதி
அதற்கு, விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு ரெயில் சென்றவுடன் அங்கிருந்து கூடுதல் பெட்டிகள் இணைக்க ஏற்பாடு செய்வதாகவும், அதுவரை முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாக ரெயில்வே அதிகாரிகள் கூறினார்கள். இதை ஏற்ற பயணிகள் மிகுந்த இடநெருக்கடிக்கு மத்தியில் திருச்சியில் இருந்து புறப்பட்டனர். பெரும்பாலான பயணிகள் முன்பதிவு பெட்டியில் கீழே அமர்ந்தபடியும், நின்று கொண்டே பயணம் செய்தும், சிலர் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் நின்றபடியும் மிகுந்த சிரமப்பட்டு பயணம் செய்தனர்.

இந்த சூழ்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் இந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலைய 2–வது நடைமேடைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் அடுத்த 10 நிமிடத்தில் ரெயில் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் திருச்சியில் அதிகாரிகள் கூறியபடி விழுப்புரத்தில் இருந்து கூடுதலாக ரெயில் பெட்டிகளை இணைக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ரெயில் மறியல் போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்கள். பின்னர் விழுப்புரத்தில் இருந்து இந்த ரெயிலை புறப்பட விடாமல் தடுத்து ரெயிலை மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்குள்ள ரெயில்வே அதிகாரிகளிடமும் பயணிகள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் மற்றும் விழுப்புரம் நகர போலீசாரும் விரைந்து சென்று ரெயில் பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் நாகர்கோவில்– மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடைசியாக ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பயணிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அந்த பெட்டியில் ஏறினார்கள். அதன் பிறகு இந்த ரெயில் 2¼ மணி நேரம் தாமதமாக மாலை 6.20 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டது.

பயணிகளின் இந்த திடீர் போராட்டத்தினால் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.