Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 30, 2016

கருப்பு பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை மோடியின் சுவிட்சர்லாந்து பயணத்தின்போது ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது


பிரதமர் மோடியின் சுவிட்சர்லாந்து பயணத்தின் போது அங்குள்ள வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

இந்தியா கட்டியஅணை திறப்பு

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி முதல் 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் முதலாவதாக ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் அவர், அங்கு ரூ.1,400 கோடி மதிப்பில் இந்தியா கட்டிக்கொடுத்துள்ள சல்மா அணையை திறந்து வைக்கிறார்.

ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போருக்குப்பின் அங்கு இந்தியா மேற்கொண்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஒருபகுதியாக இந்த அணை கட்டிக் கொடுக்கப்பட்டது. 20 கி.மீ. நீளம், 3 கி.மீ. அகலத்தில் அமைந்துள்ள இந்த அணை மூலம் 80 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், 42 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும்.

கத்தார் பயணம்

ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி எண்ணெய் வளமிக்க கத்தாருக்கு புறப்பட்டு செல்கிறார். அரபு நாடுகளில் ஒன்றான கத்தார், இந்தியாவின் முக்கியமான வர்த்தக கூட்டாளியாகவும், கச்சா எண்ணெய் தேவையை நிறைவேற்றும் நாடுகளில் முன்னணியிலும் உள்ளது.

அங்கு 2 நாட்கள் தங்கி இருக்கும் மோடி இரு நாடுகளிடையே பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது, குறிப்பாக ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்பு குறித்து கத்தார் அரசர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தனியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

கருப்பு பணம் மீட்பு

பின்னர் அங்கிருந்து சுவிட்சர்லாந்து செல்லும் பிரதமர், அந்நாட்டு அதிபர் ஜோகன் சினைடர்-அம்மான் உள்ளிட்ட தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் குவித்துள்ள கருப்பு பணத்தை மீட்பதற்கு ஒத்துழைக்குமாறு அந்த நாட்டு தலைவர்களை பிரதமர் கேட்டுக்கொள்வார் என தெரிகிறது.

வரி தொடர்பான விவரங்களை தானாகவே பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவதற்கு இரு நாடுகளும் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அந்த வகையில் பிரதமரின் இந்த பயணத்தின் போது கருப்பு பணத்தை மீட்கும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகும் என தெரிகிறது.

அமெரிக்கபாராளுமன்றத்தில் உரை

சுவிஸ் பயணத்தை முடித்துக்கொண்டு 7-ந்தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி. ஒபாமாவின் சிறப்பு அழைப்பின் பேரில் அங்கு செல்லும் மோடி, பொருளாதாரம், பாதுகாப்பு, ராணுவம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை எதிர்காலத்துக்கு முன்னெடுத்து செல்வது குறித்து ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

கடந்த 2 ஆண்டுகளில் 4 முறை அமெரிக்காவுக்கு பிரதமர் சென்றிருந்தாலும், முழுக்க முழுக்க இருதரப்பு உறவு மேம்பாடு சார்ந்து பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்த பயணத்தின் போது 8-ந்தேதி அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார். அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடனும் மோடி உரையாற்றுகிறார்.

மெக்சிகோ, ஜெர்மனி

இறுதியாக அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் வழியில் பிரதமர் மெக்சிகோவுக்கும் செல்கிறார். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதே பிரதமரின் பயணத்தின் நோக்கமாகும்.

முன்னதாக இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் அந்த நாட்டு அதிபர் என்ரிக் பினா நியட்டோவுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சுற்றுப்பயணத்தின் நிறைவில் ஜெர்மனிக்கும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் மோடி சென்று வருவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.