Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2016

முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரியில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பொதுக்கூட்டம்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வருகிற 16-ந் தேதி நடக்கிறது. தர்மபுரி தொகுதியில் தடங்கம் சுப்பிரமணியும், பென்னாகரம் தொகுதியில் பி.எம்.பி.இன்பசேகரனும், பாலக்கோடு தொகுதியில் பி.கே.முருகனும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் டாக்டர் எம்.பிரபு ராஜசேகரும், அரூர் (தனி) தொகுதியில் எஸ்.ராசேந்திரனும் போட்டியிடுகின்றனர். இந்த 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தர்மபுரி மாவட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெற்றது.

கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்ததாக முதல்-அமைச்சர் ஒரு பொய்யை சொல்லி வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீரில் உள்ள புளோரைடு பிரச்சினையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க கடந்த 1977-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தி.மு.க. ஆட்சியில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். அந்த திட்டத்தின் அப்போதைய மதிப்பீடு ரூ.576 கோடி. பின்னர் மீண்டும் தி.மு.க. ஆட்சியில் 1998-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல்துறை, நீர்வளத்துறை ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் மூலம் இந்த திட்டத்திற்கான அனுமதி பெறப்பட்டது. ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதால் ஜப்பான் நாட்டு நிறுவனம் நிதியுதவி வழங்க மறுத்தது.

இந்த நிலையில் 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1,008 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்படுவதாக கொள்கை விளக்க குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் 2006-ம் ஆண்டு வரை நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து 2006-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக கருணாநிதி 5-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான்நாட்டு நிதிநிறுவன செயல் இயக்குனர் சென்னை வந்து தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.1,334 கோடி நிதி உதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 25.2.2008-ல் இந்த திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒகேனக்கல் திட்டத்திற்கு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தர்மபுரியில் அடிக்கல் நாட்டினார். திருத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படி ரூ.1,928 கோடியே 80 லட்சம் மதிப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்துவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டத்தை 5 தொகுப்புகளாக நிறைவேற்ற உலகளாவிய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நான், ஜப்பான் நாட்டிற்கு நேரில் சென்று இந்த திட்டத்திற்கான ஒப்புதலை பெற்று வந்தேன்.

குடிநீர் கிடைக்கவில்லை

2012-ம் ஆண்டிற்குள் இந்த திட்டத்தை முடிக்க முடிவு செய்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டபணியின்போது 25 முறைக்கும் மேல் தர்மபுரி மாவட்டத்திற்கு நேரில் வந்து இந்த திட்டபணிகளை நான் நேரில் ஆய்வு செய்தேன். ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நான் மேற்கொண்ட பணிகள் இந்த மாவட்ட மக்களுக்கு நன்றாக தெரியும். 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் 2011-ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது அமைந்த அ.தி.மு.க. அரசு, 10 சதவீத பணிகளை கிடப்பில் போட்டது. இதுதொடர்பாக பல போராட்டங்களை நடத்தியபிறகு அ.தி.மு.க. அரசு அவசர அவசரமாக இந்த திட்டத்தை நிறைவேற்றியது.

ஒகேனக்கல் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 30 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை அ.தி.மு.க. அரசு முறையாக செயல்படுத்தாததால் 50 சதவீத மக்களுக்கு இன்னும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்கவில்லை. இதையெல்லாம் மறைத்து ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை தான் கொண்டு வந்ததாக ஜெயலலிதா பொய் சொல்கிறார். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஓரிரு மாதங்களில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 100 சதவீத மக்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலைவாய்ப்பு பதிவு

தமிழகத்தில் 84 லட்சம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழகத்தில் ஒரு தொழிற்சாலைகூட தொடங்கப்படவில்லை. இதனால் பிற மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் தமிழகத்தை சேர்ந்த முதலீட்டாளர்களை தங்கள் மாநிலங்களுக்கு அழைத்து செல்ல தமிழகம் வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவிற்கு செல்கின்றன.

தமிழகத்தில் இருந்த பல தொழில்நிறுவனங்கள் இந்த ஆட்சியில் மூடப்பட்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்து உள்ளனர். இந்த நிலையில் ஆட்சி முடிவடையும் நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். அதில் சுமார் ரூ.2லு லட்சம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு தொழிற்சாலைகூட தொடங்கப்படவில்லை.

மருத்துவ படிப்பு

மருத்துவ படிப்பிற்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தால் தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வந்த நேரத்தில் அரசின் மூத்த வக்கீல்களை வைத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அ.தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக செல்லும் அமைச்சர்கள் தொகுதி மக்களால் விரட்டியடிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அ.தி.மு.க. இன்னும் தேர்தல் அறிக்கையை கூட வெளியிடாத நிலை உள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், நெசவாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் உள்ளன.

வளர்ச்சிப்பாதை

இதேபோல் தர்மபுரி மாவட்டத்தின் விவசாய வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்டவற்றிற்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. தமிழகம் வளர்ச்சி பாதைக்கு மீண்டும் திரும்ப தி.மு.க.வை நீங்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

நமக்கு நாமே பயணத்தின் மூலம் மக்களை தேடி சென்று அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிலையை உருவாக்கி உள்ளோம். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் எம்.எல்.ஏ.க்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை மக்களை தேடி சென்று மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அ.தி.மு.க. ஆட்சியின்போது முறைகேடுகளில் ஈடுபட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக நேற்று மாலை ஓமலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அம்மாசியை ஆதரித்து ஓமலூர் பஸ் நிலையம் எதிரே அவர் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அதைத்தொடர்ந்து மேட்டூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் மக்கள் தே.மு.தி.க. சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து மேச்சேரியில் மாலை 4.50 மணிக்கு மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திரளாக கூடியிருந்தவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.