Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 30, 2016

12 மணிநேர வேலை... 20 ரூபாய் கூலி! -88 குழந்தைகள் உள்பட 318 கொத்தடிமைகள் மீட்பு


புதுக்குப்பம் பகுதியில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலைசெய்த 88 குழந்தைகள் உள்பட 318 பேரை அதிகாரிகள் அதிரடியாக மீட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், புதுக்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு செங்கல் சூளை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு அன்றாட கூலியாக 350-400 ரூபாய்வரை தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, கொத்தடிமைகளாக சிலர் வேலைவாங்கி வருகின்றனர்.

மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12 ஆயிரம் ரூபாய் முன்பணம் தந்து இடைத்தரகர்கள் மூலம் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால், செங்கல் அறுப்பவர்களுக்கு வார சம்பளமாக 200 ரூபாயும், பாரம் ஏற்றுபவர்களுக்கு ரூ.240 மட்டுமே வழங்கப்படுவதாக சர்வதேச நீதி இயக்கம் என்ற தனியார் தொண்டு நிறுவனத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர்  மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து, அரசு உயரதிகாரிகள் அடங்கிய குழு, அந்த செங்கல் தொழிற்சாலையை அதிரடியாக சோதனையிட்டது.

அப்போது, அந்த செங்கல் தொழிற்சாலையில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்பட 88 குழந்தை தொழிலாளர்களும், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் கொத்தடிமைகளாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.

'தினமும் கூலியாக ரூ.350 முதல் 400 வரை தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி அழைத்துவந்து, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல், 12 மணிநேர உழைப்புக்கு ரூ.20 மட்டுமே கூலியாக தந்து தங்களை கொத்தடிமைகளாக வைத்து வேலைவாங்கி வருவதாக' அப்போது சில தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.

இதை தொடர்ந்து, செங்கல் சூளையில் இருந்த 88 குழந்தைகள், 127 பெண் தொழிலாளர்கள் உள்பட 318 தொழிலாளர்களை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். விசாரணையில், அவர்கள் அவர்கள் ஒடிசா மாநிலம், நவ்ரங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது.

மீட்கப்பட்ட அனைவரும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டு ஒவ்வொருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அரசு உதவித் தொகையும் வழங்கப்பட்டு உள்ளது. மீட்கப்பட்டவர்கள் அனைவரும், விரைவில் அவர்களு டைய சொந்த ஊருக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவலறிந்து செங்கல் சூளை உரிமையாளர் தலைமறைவாகிவிட அவர்மீது, கொத்தடிமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

இதே திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு தனியார் செங்கல் சூளையில் 180 குடும்பங்களை சேர்ந்த தொழிலாளிகள் கொத்தடிமைகளாக மீட்கப்பட்டனர். இதற்கு, தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டும் கொத்தடிமைகளாக இருந்த 300-க்கும் மேற்பட்டவர்களை, அதிகாரிகள் இதே திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.