Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 17, 2016

'ஓட்டுக்கு பணம் வாங்கியது இல்லை!'- 100 வயது வாக்காளர்!


ருக்மணி அம்மாளுக்கு வரும் செப்டம்பர் 10ம் தேதி வந்தால் 100 வயது. சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் இவர், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் இருந்து ஒரு தேர்தல் விடாமல் வாக்களித்து வருகிறார். இந்த சட்டமன்ற தேர்தலிலும் வாக்களிக்க, அதிகாலையிலேயே எழுந்து தயாராகி, ஆட்டோ பிடித்து ஏழு மணிக்கெல்லாம் வாக்குச்சாவடிக்கு வந்துவிட்டார். மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக வரிசை இருந்தமையால் எளிதில் வாக்களித்து, 10 நிமிடத்துக்குள் வீட்டுக்கு செல்ல தயாரானார். அவரின் வயதை அறிந்த நாம் அவருடனேயே புறப்பட்டோம்.

ரிலாக்ஸாகப் பேசுகிறார் ருக்மணி அம்மாள். “எனக்கு சொந்த ஊரு செங்கல்பட்டு. என் கூடப் பிறந்தவர்கள் 4 அண்ணன்கள், 3 தங்கைகள். அவங்கள்ல நான் மட்டும்தான் இப்ப இருக்கேன். என் 8 வயசுலயே எனக்கு கல்யாணமாயிடுச்சு. 11 வயசுல சென்னை திருவல்லிக்கேணிக்கு வந்தேன். அப்ப இருந்து  அதே வீட்டுலதான் இருக்கேன். இங்கதான் ஒன்பது பிள்ளைகளையும் பெற்றேன். எல்லா எலெக்‌ஷன்லயும் ஓட்டுப் போடுறேன். இன்னிக்கும் ஓட்டுப் போட்டுட்டேன்.” என்றபடியே தனது இடது ஆள்காட்டி விரலை உயர்த்திக் காட்டி பெருமைப்படுகிறார்.

ருக்மணி அம்மாளின் கடைசி மகன் அழகிரி , “தனது வேலைகளை தானே செய்வார். காலை 5.30 க்கு எழுந்து பெருமாளை சேவித்து காபி குடித்துவிட்டு காய்கறி நறுக்குவது, சமையலறையை பராமரிப்பது என அவரால் இயன்ற உதவியை செய்வார். பூஜை பாத்திரத்தை தானே தேய்த்து வைப்பார். ஏழு ஆண் பிள்ளைகளையும் இரண்டு பெண் பிள்ளைகளையும், எனது தந்தையின் காலத்துக்குப்பின் 1976 முதல் வளர்த்து வந்தார். 9 பேருக்கும் திருமணம் நடந்து, பேரன் பேத்திகள் 30 பேரை பார்த்தவர். அது மட்டுமில்லை கொள்ளுப் பேரப்பிள்ளைகளையும் பார்த்தவர். கிட்டதட்ட 5 தலைமுறைகளை கண்டவர்” என குறிப்பிடுகிறார்.

ருக்மணி அம்மாள், தான் கண்ட தேர்தல்கள் பற்றி பேசுகிறார். “சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் 1951ல் நடந்தது. அந்த தேர்தலில் இருந்து நான் ஓட்டுப்போட்டு வருகிறேன். எனது பிள்ளைகளையும் ஓட்டுப் போட வலியுறுத்துகிறேன். அவர்களும், பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் தவறாமல் ஓட்டுப்போடச் சொல்கிறார்கள். முன்பெல்லாம் பேப்பரில் ஓட்டுப்போடும்போது பேப்பரை ஒரே நேராக மடிக்கவேண்டும். இல்லாவிட்டால் மை கசிந்து வேறு சின்னத்தில் பரவி,  ஓட்டு செல்லாமல் போய்விடுமோ என்ற பயம் இருக்கும். ஆனால் எலெக்ட்ரானிக் ஓட்டு மெஷினில் போடுவதால் அந்த பயம் இப்போது இல்லை.

இதுவரைக்கும் வாக்களிக்க பணம் வாங்கியது இல்லை. வாக்குச்சாவடி அருகில்தான் இருக்கு. அதனால் பெரும்பாலும் என் பிள்ளைகளோடுதான் ஓட்டுப்போட செல்வேன். கல்யாணம் பண்ணிக் கொடுத்த பெண் பிள்ளைகளையும் ஓட்டுப் போட்டாச்சானு கேட்டு உறுதிப்படுத்திப்பேன்” என்றவர்,  “யாருக்கு ஓட்டுப்போட்டேன்னு மட்டும் கேட்காதீங்க” என்று உஷாராகப் பேசுகிறார்.

இந்த 100 வயதிலும் வாக்களிப்பதை தன் தலையாய கடமையாக எண்ணும் இந்த பாட்டி போன்றோர்களால்தான் இந்த ஜனநாயகம் தழைக்கிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.