Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 10, 2016

'ஸ்டாலினுக்கே முதல்வராக விருப்பமில்லை'! - கருணாநிதி பரபர பேட்டி!


இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தாலும், ஸ்டாலினுக்கே முதல்வராக விருப்பமில்லை என்றும், தனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வராக முடியும் என்றும் அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரிதும் விரும்புகின்றனர்.  ஸ்டாலினுக்கும் அந்த விருப்பம் இருந்தாலும், தேர்தல் களத்தில் தன்னை முதல்வராக முன்னிறுத்துவது வாக்குகளை பெற்று தருமா என்ற அச்சத்தில் அவரே முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க ரொம்பவும் வலியுத்தவில்லை. கருணாநிதிக்கும் அந்த அச்சம் உள்ளது. மேலும் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் மு.க. அழகிரி ஏதாவது வில்லங்க வேலைகளில் இறங்கிவிடக்கூடாது என்ற அச்சம் காரணமாகவும் அதற்கான வாய்ப்பை அவர் வழங்கவில்லை.

இன்னொரு பக்கம் பாமகவில் அதன் நிறுவன தலைவர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்து களம் இறக்கிவிட்டுள்ளது போன்று தாம் அறிவிக்கப்பட வாய்ப்பில்லாமல் உள்ளதே என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும் ஸ்டாலினுக்கும் உள்ளது என்றாலும், தன்னைவிட கருணாநிதியை முன்னிறுத்துவதே தேர்தலில் வெற்றியை தேடித்தரும் என்ற யதார்த்தமும் அவருக்கு தெரியாமல் இல்லை.

இதனிடையே கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் பதவி ஆகிய அதிகார மாற்றத்தை இந்த தேர்தலுக்கு பின்னர் மு.க. ஸ்டாலினுக்கு கருணாநிதி இடமாற்றம் செய்யவேண்டும் என்ற நிர்பந்தமும், அழுத்தமும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை கருணாநிதிக்கு அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில்தான் என்டிடிவி ஆங்கில செய்தி சேனலுக்கு இன்று பேட்டி அளித்த கருணாநிதியிடம், " நீங்கள் உங்கள் கட்சியில் கடந்த பல ஆண்டுகளாக இளைஞர்களுக்கு ஊக்கமளித்து, பல இளைய தலைவர்களை வளர்த்துள்ளீர்கள். தற்போது உங்களுக்கு 93 வயதாகிறது. எனவே நீங்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என பலரும் சொல்கிறார்கள். பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸும் நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என சொல்லி இருக்கிறார். இந்நிலையில் இந்த தேர்தலில் உங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னர் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குவீர்களா...? குறிப்பாக ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என அவரது ஆதரவாளர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. உங்களது பதில் என்ன?" என செய்தியாளர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த கருணாநிதி, " ஸ்டாலினுக்கே முதல்வர் ஆக வேண்டும் என விருப்பம் இல்லை. திமுக தலைவர்தான் முதலமைச்சராக வரவேண்டும் என விரும்புகிறார். நான் கடந்த 1957 ம் ஆண்டிலிருந்து இதுவரை போட்டியிட்ட தேர்தல்களில் தோற்றதே இல்லை. இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும், நான்தான் ஆறாவது முறையாகவும் முதலமைச்சராக வரவேண்டும் என விரும்புகிறவர்களில் முதல் நபர் ஸ்டாலின்" எனக் கூறினார்.

அவர் முதல்வராக ஆவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லும் அவரது ஆதரவாளர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, " அவர் ( மு.க. ஸ்டாலின் ) முதல்வராவதற்கு வாய்ப்பு வரவேண்டுமென்றால் இயற்கை எனக்கு ஏதாவது செய்தால்தான் உண்டு." எனக் கூறினார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.