Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2016

ஆடி காரில் வந்த அமைச்சர்கள் யார் யார்? -சிக்க வைக்குமா சி.சி.டி.வி?


கரூரில் அன்புநாதனின் தோட்டத்து குடோனில் கைப்பற்றப்பட்ட நாலரை கோடி ரூபாயின் சூடு ஆறுவதற்குள், சென்னை எழும்பூரில் அ.தி.மு.க பிரமுகர் விஜய் கிருஷ்ணசாமியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஐந்து கோடி ரூபாய் பலத்த அதிர்வலையை கிளப்பியிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக, ஆம்புலன்ஸ் வழியாக நடந்த நூதன பணக் கடத்தலால் எதிர்க்கட்சிகள் உறைந்து போய் உள்ளனர். தி.மு.க தலைவர் கருணாநிதி, ' கண்டெய்னர்களும், ஆம்புலன்ஸ் வண்டிகளும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அன்புநாதன் தோட்டத்து வீட்டில் சி.சி.டி.வி கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் என்னென்ன காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பதைப் பற்றி மக்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். கைப்பற்றப்பட்டது நாலரை கோடி ரூபாயா? 100 கோடி ரூபாயா? என்பதைப் பற்றி ஜெயலலிதா மக்களுக்கு விளக்க வேண்டும்' என வேண்டுகோள் வைத்தார். இதையே ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் வலியுறுத்தினார்.

கரூரில் உள்ள அரசியல் கட்சித் தலைவர் ஒருவரிடம் பேசினோம்.

" அய்யம்பாளையத்தில் 4 கோடியே 77 லட்சம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் சொல்கின்றனர். இதுதவிர, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கொலுசுகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சேலைகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள். இவை அனைத்தும் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்டவை. கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பணத்தை விநியோகிக்கும் முக்கிய சென்டர்  அன்புநாதனின் குடோன்தான். தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே பணத்தைக் கொண்டு வந்துவிட்டனர். இந்தக் குடோனுக்கு ஐவரணியில் பவர்புல்லாக இருந்த அமைச்சர்கள் இரண்டு பேர், ஆடி காரில் அடிக்கடி வந்து போயுள்ளனர். இவர்கள் வந்துபோன தடயங்கள் அனைத்தும் சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளன. தவிர, மூத்த அமைச்சரின் மகன் வாரத்திற்கு இரண்டு முறை குடோனுக்கு வந்து போயிருக்கிறார். அதிகாரிகளிடம் பிடிபட்ட சி.சி.டி.வி ஆதாரம் மிக முக்கியமானது. இதை வெளியில் விடுவார்களா? என்று தெரியவில்லை.

கடந்த பதினைந்து நாட்களில் 12 தடவைக்கும் மேல் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அய்யம்பாளையம் வழியாகச் சென்றுள்ளன. கரூர் பைபாஸ் சாலையில் பிடிபட்ட ஆம்புலன்ஸ் வண்டி பற்றி எந்தத் தகவலும் இதுவரையில் இல்லை. அன்புநாதனின் குடோனில் இருந்துதான் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் செலவுக்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. கடைசிநேரத்தில் கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால், பிடிபட்டவை அனைத்தும் மிச்சப் பணம்தான். அதிலும், அன்புநாதனின் பின்புலம் என்ன? அவரை இயக்கிய அமைச்சர்கள் யார்? என்ற தகவலையும் இதுவரையில் அதிகாரிகள் சொல்லவில்லை" என்றார் ஆதங்கத்தோடு.

அன்புநாதனை அடுத்து எழும்பூரில் உள்ள பிரபலமான குடியிருப்பு ஒன்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்தக் குடியிருப்பில் வசிக்கும் விஜய் கிருஷ்ணசாமியின் தந்தை விஜயகுமார், அமைச்சர் வைத்தியலிங்கத்தின் நண்பர் என்கிறார்கள். தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றப் பொறுப்பில் இருக்கிறார் விஜயகுமார். இவர் வீட்டில் இருந்து வருமானவரித்துறை உதவி ஆணையர் சஞ்சய்காந்தி தலைமையிலான அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். நேற்று இரவு நீண்டநேரம் நடந்த ரெய்டில், கணக்கில் காட்டப்படாத ஐந்து கோடி ரூபாய் மற்றும் பணம் எண்ணும் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அமைச்சர் வைத்தியலிங்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட இருந்த பணம் இது என்கின்றனர் அதிகாரிகள். மிகப் பிரமாண்டமான இந்தக் குடியிருப்புக்கு வந்து சென்ற அமைச்சர்களின் விவரமும் சி.சி.டி.வியில் பதிவாகியிருக்கிறது.  இதைப் பற்றியும் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றன அரசியல் கட்சிகள்.

சி.சி.டி.வி காட்சிகள் அம்பலமானால், எத்தனை வாகனங்களில் பணம் கடத்தப்பட்டது? ஆடி காரில் வந்த அமைச்சர்கள் யார்? என்ற தகவலும் மக்கள் மன்றத்திற்குத் தெரியும். ஆணையத்தின் பதிலுக்காகக் காத்திருக்கிறார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.