Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 22, 2016

ஒயிட்டி!-சிறுகதை


வினோதினியின் பொம்மைப் பெட்டியில் ஒரு வெள்ளைக்காரப் பொம்மை இருந்தது. அதை "ஒயிட்டி' என்று கூப்பிடுவாள்.
இந்த ஒயிட்டிக்கு ரொம்பக் கர்வம் ஜாஸ்தி. ஏன் தெரியுமா? வினோதினியின் அம்மா குழந்தையாக இருக்கும் போது அந்த வீட்டுக்கு வந்தாள் ஒயிட்டி. அப்படியானால், ஒயிட்டி யின் வயது எத்தனை இருக்கும். ஆனால், ஒயிட்டி கிழவியாகவில்லை. சின்னப் பெண்ணாகவே இருந்தாள். உண்மையிலேயே ஒயிட்டி ரொம்ப அழகி. கருப்பான சுருட்டை முடி கழுத்துவரை தொங்குவதே ஒரு அழகு. பூப்போட்ட கவுன். காலில் பளபளப்பான பூட்ஸ். இதெல்லாம் சற்று மங்கி இருந்தாலும், அழகாகத்தான் இருந்தாள். ஆனாலும் ரொம்பக் கர்வக்காரி அவள்.
வினோதினியின் மற்ற பொம்மைகளான கரடிக் குட்டி, கோமாளிக்குப்பன், குறும்புக்காரிகளான கமலா, விமலா, குதித்தோடும் எலிக்குட்டி எல்லாருக்கும் ஒயிட்டியோடு சினேகம் செய்து கொண்டு விளையாட வேண்டும் என்று ஆசை. ஆனால், ஒயிட்டிக்கு அவைகளோடு சேர்வது தன்னைப் போன்ற ஒரு வயதான பெரிய பொம்மைக்கு கவுரவக் குறைவு என்ற எண்ணம்.
""நீங்கள் என்னை அழகிய ஒயிட்டி அம்மணி என்றுதான் அழைக்க வேண்டும்!'' என்பாள்.
அவர்கள் ஏதாவது பேசினாலும், ""சும்மா சளசளவென்று ராத்திரியில் பேசி, என் தூக்கத்தைக் கெடுக்காதீர்கள்,'' என்பாள் ராங்கியுடன்.
பாவம், எல்லா பொம்மைகளும், அவள் முன்னால் பேசாமல் தலைகுனிந்து போகும். ஆனால், தனிமையில் அவை இப்படிப் பேசிக் கொள்ளும்.
""சுத்த அகம்பாவக்காரி, சிடுமூஞ்சி, ஒரு நாளாவது அவள் முகத்தில் சிரிப்பைக் கண்டு நான் பார்த்ததில்லை. எப்போதும் தனியாக ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நடக்கத்தான் தெரியும் அவளுக்கு என்பாள் விமலா!''
""அது சரி, அவள் எதனால் செய்யப் பட்டவள்? ரப்பராக இருக்குமா?'' என்பான் குப்பன் நகத்தைக் கடித்துக்கொண்டே.
""ஐயோ! அவ உடையையும், அவளையும் எனக்குப் பிடிக்கவே இல்லை. அவ எதனாலே ஆனவளோ? அவ உடல் முழுக்கத்தான் கவுன் மறைத்துக் கொண்டிருக்கே,'' என்றது கரடிக் குட்டி.
"ஒயிட்டி எதனால் செய்யப்பட்டவள்?' என்பது யாருக்குமே தெரியாது. கோமாளிக் குப்பன் ரப்பரால் ஆனவன். அவனை வினோதினி அடிக்கடி குளிப்பாட்டி இருக்கிறாள். கமலாவும், விமலாவும் பஞ்சு மெத்தையால் ஆனவர்கள். மொழு, மொழு வென்று மிருதுவாக அவர்களை தொடுவதே இன்பமாக இருக்கும். இந்த அகம்பாவக்காரி ஒயிட்டி எதனால் செய்யப்பட்டவள் தெரியுமா?
மரத்தூளினால்! மேல்நாட்டுப் பொம்மைகள் எல்லாமே அனேகமாக இப்படித்தான். ஆனால், ஒயிட்டி இதை யாருக்குமே சொன்னதில்லை. உடம்பிற்குள் மரத்தூள் என்பதைப் பிறர் அறிய அவள் வெட்கப்பட்டாள்.
ஒயிட்டி தினமும் இரவில், வினோதினியின் அறையில் தனியாக உலாத்துவாள். ஜன்னலில் நின்றபடி வானத்தில் மினுக்கிடும் நட்சத்திரங்களை எண்ணுவதுபோல அமைதியாக அசையாமல் பார்த்துக்கொண்டே இருப்பாள். வேறு பொம்மைகளைக் கண்டால் தலையை வேறுபக்கம் திருப்பிக் கொள்வது அவள் பழக்கம்.
இப்படி ஒருநாள் ஒயிட்டி உலாவும் போது தான் அந்த அதிசயத்தைக் கரடிக்குட்டி கண்டது. ஒயிட்டி நடக்கும் பாதையில் எல்லாம் மிருதுவான மஞ்சள் தூள் விழுந்துகொண்டே வருவதைக் கண்டது. அது என்னவாக இருக்கும்? கரடிக் குட்டி கீழே குனிந்து அதை உற்றுப் பார்த்தது. மஞ்சளாக மணல்போல இருந்தது. அது மரத்தூளைப் பார்த்தது இல்லை.
""ஒருவேளை ஒயிட்டி தன் முகத்துக்கு பூசிக் கொள்ளும் வாசனைப் பவுடராக இருக்குமோ?'' என்று எண்ணியது கரடி. உடனே தன் நண்பர்களை எல்லாம் கூப்பிட்டு அந்தத் தூளைக் காட்டி விஷயத்தைச் சொல்லிற்று. எல்லாம் பார்த்தன. உண்மைதான்.
மஞ்சள் தூள்!
ஒயிட்டி எங்கே போனாலும் அவள் கவுனுக்குள்ளிருந்து அந்த தூள் உதிர்ந்து கொண்டே இருந்தது. ஆனால், ஒயிட்டிக்கு இது தெரியாது. அவள் தலை தான் கர்வத்தால் எப்போதும் ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறதே. கீழே குனிந்தாலல்லவா தெரியும்?
இது மட்டுமல்ல... மற்ற பொம்மைகள் ஒயிட்டியிடம் இன்னொரு விசேஷ மாறு தலையும் கண்டன. அவள் முன்பை விட இப்போது இளைத்திருந்தாள்.
""அவ உடம்பு நாளுக்கு நாள் மெலிந்து வரதில்லே!'' என்றான் குப்பன் ரகசியமாக விமலாவின் காதில்.
""ஆமாம்... என்ன காரணம்னு தெரியவில்லையே?'' என்று வியந்தனர் கமலாவும், விமலாவும்.
வெடுக்கென்று நகத்தை கடித்துத் துப்பி விட்டுக் கோமாளிக் குப்பன் சொன்னான்.
""எனக்கு விஷயம் விளங்கிப் போச்சு. அந்த ஒயிட்டி உடம்பின் ரகசியம்தான் இந்த தூள். இதனாலேதான் அந்த அம்மா செய்யப்பட்டிருக்கா. இப்போ ஒயிட்டிக்கு வயசாகி விட்டதனாலே அவள் உடம்பிலே எங்கேயோ கோளாறு ஏற்பட்டிருக்கு. அது வழியா இந்த தூள் கொட்டிக் கொண்டே இருக்கு. இப்படியே இன்னும் கொஞ்ச நாளானா ஒயிட்டி அப்புறம்... அப்புறம்தான்!''
""ஐயோ அப்பன்னா பாவம் அவ கதி?''
""என்ன கதி, ஒரே கதிதான். அவள் உடம்பிலே இருக்கிற தூள் பூரா வெளியே வந்தப்புறம் ஒயிட்டிக்கு உருவமே இருக்காது. அவ கர்வத்துக்கு அது வேணும்!''
""நான் ரப்பராலே ஆனவன். எனக்கென்ன கவலை,,'' என்றான் குப்பன்.
ஆனால், விமலாவிற்கும், கமலாவிற்கும் மனம் இளகி விட்டது. பெண்ணல்லவா?''
""விமலா, நாம அவளுக்கு இதை தெரியப் படுத்த வேண்டும்,'' என்றாள் கமலா. உடனே இரண்டும் கிளம்பின.
விமலா மெதுவாக அவள் அருகில் சென்று, ""மேன்மை தாங்கிய அம்மணி, உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்,'' என்றாள்.
ஒயிட்டி திரும்பிக் கூடப் பார்க்காமல், ""சொல்வதானால் சீக்கிரம் சொல்,'' என்றாள் மிடுக்குடன்.
""உங்கள் உடம்பு இளைத்துக் கொண்டே வருகிறது. ஒரு மஞ்சள் தூளை ஒழுக விடுகிறீர்கள். இனி நீங்கள் நடக்காதிருந்தால் தான் உங்களை நாங்கள் பார்க்கவாவது முடியும்,'' என்றாள் பணிவுடன் கமலா.
ஒயிட்டிக்கு கோபம் வந்துவிட்டது. உருட்டி விழித்தாள்.
""ஹும். நானா இளைக்கிறேன். என்னை <உங்கள் பக்கம் இழுக்கும் இந்த தந்திரமெல்லாம் எனக்குத் தெரியாதா? இனி, இந்த மாதிரி என்னிடம் உளறாதே போ,'' என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்து போய்விட்டாள்.
ஒருநாள் ஒயிட்டியின் முதுகில் ஏற்பட்ட துவாரம் பெரிதாகி ஒயிட்டியால் நிற்கமுடியாத அளவிற்கு மரத்தூள் கொட்டி விட்டது.
ஒயிட்டி அப்படியே அந்த தூளின் மீது துவண்டு சுருண்டு விழுந்து விட்டாள்.
பொம்மைகளை எல்லாம் அவள் அலட்சியம் செய்தாலும் அவள் விழுந்ததும் எல்லா பொம்மைகளுக்கும் பகீர் என்றது. என்ன இருந்தாலும் வயதான பெரிய மனுஷிதானே!
எல்லாரும் அவளைத் தூக்க பரபரப்புடன் ஓடி வந்தன. ஆனால், அதற்குள் அறையின் கதவு திறந்தது. வினோதினியின் அம்மா உள்ளே நுழைந்தாள். ஒயிட்டியை பார்த்தவுடன் அவளுக்கு நடந்தது விளங்கிவிட்டது. ஒயிட்டியை தூக்கிக் கொண்டு போய் விட்டாள்.
அதன்பிறகு பிறகு, இரண்டு வாரத்துக்கு பொம்மைகள் ஒயிட்டியை பார்க்கவே இல்லை.
ஒருநாள் ஒரு அழகான பொம்மை உள்ளே வந்தது. கொழு கொழுவென்று வழவழப்பான வெல்வெட் உடம்பு கைகள், குட்டைக் கவுன், பாவாடை அடேடே! அந்த முகம் நம்ம ஒயிட்டியே தான்! பொம்மைக்கடைக்காரன் அவளை இவ்வளவு அழகாக மாற்றிவிட்டான்.
அன்று புது ஒயிட்டியை வரவேற்க, பொம்மைகள் ஒரு விருந்து வைத்தன. பொம்மைகளுக்கு ஒயிட்டி திரும்பி வந்ததில் மிகவும் சந்தோஷம். விமலா விருந்தின்போது, ""அழகிய ஒயிட்டியே...'' என்று கிண்டல் செய்தாள்.
பாவம் ஒயிட்டிக்கு வெட்கமாய் போய் விட்டது. கண்களில் நீர் தளும்ப, ""இனி என்னை அப்படியெல்லாம் கூப்பிடாதீர்கள். நான் இப்போது பழைய கர்வக்காரி இல்லை. உங்களிடம் அப்படி நடந்து கொண்டதற்கு வருத்தப்படுகிறேன். உங்களோடு உங்கள் விளையாட்டுக்களில் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்,'' என்றாள் பாவாடை கட்டிய ஒயிட்டி.
பொம்மைகளுக்கு ஆனந்தம் தாங்க வில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.