Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 8, 2016

எங்கே பணம்?சிறுகதை


ஒரு காட்டில் ஒரு நரி இருந்தது. ஒருநாள் அதற்கு இரையே கிடைக்கவில்லை. எங்கெங்கோ அலைந்து திரிந்தது.
ஓர் ஆலமரத்தடியில் இரண்டு பழைய செருப்புகள் இருந்ததை பார்த்துவிட்டது.
அந்தப் பழைய செருப்புகள் ஒரு விவசாயினுடையது. அவை ரொம்பவும் கிழிந்து போய் வார் அறுந்து இருந்தது. அவற்றை உபயோகிக்க முடியாமல் போகவே, விவசாயி அந்தச் செருப்புகளைத் தூக்கி ஏறிந்து விட்டான்.
பசியினால் அலைந்து திரிந்த நரியின் கண்களில் இந்தச் செருப்புகள் பட்டுவிட்டன. அவைகளில் ஒன்றை தின்றால் தன் பசி அடங்கும் என்று நினைத்தது.
செருப்புகளுக்கு உரியவன் பக்கத்தில்தான் இருப்பான். அவன் அனுமதியின்றி நாம் செருப்பைச் சாப்பிட்டுவிட்டால், அவன் நமக்குத் தண்டனை கொடுப்பான் என்று எண்ணியது நரி.
சரி நாம் ஏன் சும்மா சாப்பிட வேண்டும்? நாம் சாப்பிடும் செருப்புக்கு உரிய பணத்தைச் செருப்புக்குச் சொந்தக்காரனிடம் கொடுத்து விடுவோம் என்று நினைத்த நரி, ""ஐயா, எனக்குப் பசியாக இருக்கிறது. இந்தச் செருப்புகளில் ஒன்றை நான் சாப்பிடப் போகிறேன். அதற்குரிய பணத்தை நான் உங்களுக்குக் கொடுத்து விடுகிறேன்,'' என்று கூறி விட்டுச் செருப்புகளில் ஒன்றைச் சாப்பிட்டது நரி.
இதை அந்த மரத்தின் பின்னாலிருந்த கடவுள், கேட்டுக் கொண்டிருந்தார்.
நரி செருப்பைச் சாப்பிட்டு விட்டு ஓட்டம் பிடித்தது.
"செருப்புக்குச் சொந்தக்காரனை நாம் ஏமாற்றி விட்டோம்' என்று அது நினைத்துக் கொண்டிருக்கும் போது அதன் பின்னாலிருந்து, ""எங்கே பணம்?'' என்ற குரல் கேட்டது.
""பணமா? எந்தப் பணம்?'' என்று திருப்பிக் கேட்டது நரி.
""நீ சாப்பிட்ட செருப்புக்குப் பணம் தருவதாகக் கூறினாயே, அந்தப் பணம்தான்,'' என்றார் கடவுள்.
இதைக் கேட்ட நரி மீண்டும் வேகமாக ஓடியது. ஓடுகிற வழியில் கல்லிலும், முள்ளிலும் அடிபட்டது. அதைக் கூட அது பொருட்படுத்தவில்லை.
காட்டுக்குள் ஒரு மறைவான இடத்திற்கு வந்ததும், "செருப்புக்காரன் இங்கே வர மாட்டான்!' என்று அது நினைத்துக் கொண்டிருந்தபோதே மறுபடியும், ""எங்கே பணம்?'' என்று அதன் பின்னாலிருந்து குரல் கேட்டது.
இதைக் கேட்ட நரி, "செருப்புக்காரன் நாம் எங்கு போனாலும் நம்மை விடமாட்டான் போலிருக்கிறதே...' என்று நினைத்தவாறு, மீண்டும் தலைதெறிக்க ஓடியது.
இம்முறை ஒரு சிறிய மரக்கிளையில் அதன் கண்பட்டு ஒரு கண் குருடாகிவிட்டது. அப்போதும் அதன் பின்னால், ""எங்கே பணம்?'' என்ற குரல் கேட்டது.
நரி திரும்பிப் பார்க்காமல் வேகமாக ஓடியது. ஒரு கண் சரியாகத் தெரியாததால், வழியில் கிடந்த ஒரு பெரிய பாறையின் மீது மோதிக் கொண்டது. அப்போது அதன் கால்களில் ஒன்றில் பலமாக அடிபட்டு நொண்டியாகி விட்டது.
நரி நொண்டிக் கொண்டே ஒரு மரத்தடிக்குச் சென்றது.
மரத்தின் பின்னாலிருந்து, ""எங்கே பணம்?'' என்று குரல் கேட்டது.
நரி இம்முறை ஓடவில்லை. தைரியமாக, ""எதற்குப் பணம்?'' என்று கேட்டது.
""நீ சாப்பிட்ட செருப்புக்குப் பணம்!'' என்றது குரல்.
""உன்னுடைய செருப்பைப் சாப்பிட்ட நரிக்கு ஒரு கண் குருடாகவும், ஒரு கால் நொண்டியாகவும் இருந்ததா?'' என்று கேட்டது நரி.
""இல்லை!'' என்றது குரல்.
""அப்படியானால், அது நானில்லை. அது வேறு நரியாக இருக்கும். அதைத் தேடிச் செல்,'' என்றது நரி.
நரியின் தந்திரமான பதிலைக் கேட்ட கடவுள் சற்று நேரம் யோசனை செய்தார்.
"நரி செய்த தவறுக்குத் தண்டனை கொடுத்தாகிவிட்டது. இன்னும் ஏன் அதனைச் சோதிக்க வேண்டும்' என்று நினைத்தார். இருப்பினும் நரியின் தந்திரமான பேச்சை ரசித்தபடியே சென்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.