Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 8, 2016

பறவை என்ன சொல்லுச்சு?-சிறுகதை


மன்னரும், மந்திரியாரும் காட்டில் வேட்டையாட சென்றனர். காட்டில் அழகிய சோலை ஒன்று காணப்பட்டது. உடனே மன்னர் அந்தச் சோலையின் அழகை ரசித்தபடி மந்திரியாரை நோக்கினார்.
""மந்திரியாரே! இந்தச் சோலையின் அழகை கவனித்தீரா? இந்தச் சோலையானது எத்தனை அழகாயிருக்கிறது. நாம் இருவரும் இந்தச் சோலையில் அமர்ந்து சிறிது நேரம் இளைப் பாறிவிட்டுச் செல்லலாமே,'' என்றார்.
""அரசே! தங்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது என்னுடைய கடமை. அதன்படியே நாம் இருவரும் இந்தச் சோலையில் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லலாம்,'' என்றார் மந்திரியார்.
மன்னரும், மந்திரியாரும் அந்தச் சோலை யின் உள்ளே சென்று அமர்ந்தனர். அந்த நேரத்தில் வினோதமானப் பறவை ஒன்று, பறந்து வந்து அவர்கள் முன் நின்றது.
அந்தப் பறவையைக் கண்டதும், மன்னரும், மந்திரியாரும் வியப்போடு அதனை பார்த்தனர்.
உடனே அந்தப் பறவையானது, ""இந்தச் சோலைக்கு வந்த மனிதர்களே! இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் உயிரை இழக்கப் போகின்றீர்கள்! ஏனென்றால், இந்த சோலையானது ஓர் அரக்கனுக்கு சொந்த மானது.
""இப்போது இந்த சோலைக்குள் அரக்கன் வரும் நேரம்! சோலைக்குள் அரக்கன் வந்தால் உங்கள் இருவரையும் பிடித்து தின்று விடுவான்,'' என்றது அந்தப் பறவை.
அதனைக் கேட்டதும் மன்னர் திடுக்கிட்டு, மந்திரியாரை பார்த்தார்.
""மந்திரியாரே! இந்த பறவை சொல்வதைக் கேட்கிற போது எனக்கு மிகவும் அச்சமாக யிருக்கிறது! உண்மையிலேயே அந்த அரக்கன் வந்து நம் இருவரையும் கொன்றுப் போட்டு விடுவான் போன்றுத் தெரிகிறது. எனவே, நாம் இங்கிருந்து சென்று விடுவோம்,'' என்று கூறினார்.
மந்திரியாரோ மன்னரை அமைதியுடன் இருக்குமாறு சைகை காட்டினார்.
""மந்திரியாரே! இந்தப் பறவை நம் உயிருக்கே ஆபத்து வரப்போகிறது என்கிறது. ஆனால், நீங்களோ அமைதி யாக இருக்கும்படியாக சைகை காட்டு கிறீர்களே! நீங்கள் எதனால் சைகை காட்டுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை!'' என்றார் மன்னர்.
""அரசே! அது தங்களுக்குப் புரியாதவரைக்கும் நல்ல தென்றே கூறுவேன். நீங்கள் அமைதியுடன் அப்படியே இருங்கள்! நான் இந்தப் பறவை யிடம் சிறிது நேரம் உரையாட வேண்டும்,'' என்றார் மந்திரியார்.
மந்திரியார் ஏதாவது சொன்னால் அதில், அர்த்தம் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்ட மன்னரும் மீண்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
மந்திரியாரோ அந்தப் பறவையிடம், ""பறவையே! இன்னும் சிறிது நேரத்தில்
இந்தச் சோலைக்குள் அரக்கன் வருவான் என்று கூறினாயே! அந்த அரக்கன் எப்படியிருப்பான்? எனக்கு அந்த அரக்கனைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறது,'' என்றார்.
""உங்கள் இருவருக்கும் உயிர் மீது ஆசை யில்லையா? இன்னும் சிறிது நேரத்தில் இங்கே அரக்கன் வந்திடுவான் என்று நான் கூறுகிறேன். ஆனால், நீங்களோ அதைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்கிறீர்களே!'' என்று கேட்டது பறவை.
""பறவையே! நீ சரியாகச் சொன்னாய்! எங்களுக்கு உயிர் மீது எந்த ஆசையும் இல்லை! அதனால்தான் உன்னோடு இப்படித் தைரிய மாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்! ஆனால், உன்னைப் பார்க்கின்ற போது நீ எங்களைப் பார்த்துதான் அச்சப்படுகிறாய் எனத் தெரிகிறது. எனவே, நீ தைரியமாக என்னுடைய கேள்வி களுக்கு பதில் கூறு,'' என்றார் மந்திரியார்.
""நீர் வித்தியாசமான மனிதராகயிருக்கிறீரே! உம்மைப்பார்க்கின்ற போது எனக்கு ஆச்சரிய மாகயிருக்கிறது. இது வரைக்கும் இந்த சோலையினுள் வந்த மனிதர்கள் எல்லாரும் நான் அரக்கனைப் பற்றிப் பேச்சை எடுத்தவுடனேயே இங்கிருந்து ஓடி விடுவர். ஆனால், நீங்களோ மிகவும் தைரியமாக இந்தச் சோலைக்குள் அமர்ந் திருக்கிறீர்களே! எனக்கு உங்கள் இருவரையும் பார்த்து மேலும், பரிதாபம் தான் ஏற்படுகிறது. ஏனென்றால், நீங்கள் இருவரும் சிறிது நேரத்தில் இந்தச் சோலைக்குள் உயிரை விடப் போகிறீர்கள்,'' என்றது பறவை.
""பறவையே! மீண்டும்! மீண்டும் நாங்கள் இருவரும் இந்தச் சோலையில் உயிரை விட்டு விடுவோம் என்று கூறிகிறாயே! அரக்கன் வரட்டும்! அதுவரையிலும் நாங்கள் இப்படியே அமர்ந்திருக்கிறோம். அந்தக் அரக் கனைப் பார்த்ததும் நான் சில கேள்வி களைக் கேட்க வேண்டும்,'' என்று கூறினார் மந்திரியார்.
மந்திரியாரை, வியப்போடு பார்த்தது அந்தப் பறவை.
""பறவையே! ஏன் இப்படி பார்க்கிறாய்! இனிமேல் நீ என்ன செய்யப் போகிறாய்?'' என்று கேட்டார்.
பறவையோ மந்திரியாரைப் பார்த்து தலை கவிழ்ந்து கொண்டது. பின்னர் வன தேவதை யாக காட்சியளித்தது.
""வன தேவதையே உன்னைக் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,'' என்றார் மன்னர்.
""மன்னரே! உமது மந்திரியார் சரியான புத்திசாலி. நான் பறவை வடிவில் உருமாறி இருந்த போதும் நானொரு தேவதைதான் என்பதை அவர் கண்டுபிடித்து விட்டார். அதோடு இந்தக் காட்டிற்கு எத்தனையோ மன்னர்கள் வேட்டையாட வருவார்கள்! அவர் களோடு மந்திரியாரும், படை தளபதி மற்றும் வீரர்கள் கூட வருவதுண்டு. அவர்கள் எல்லாரும் தவறாமல் இந்த சோலையில் இளைப்பாற வருவார்கள்.
""அவ்வாறு வருகின்ற வர்களிடம் எல்லாம் நான் பறவையாக மாறி கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகின்ற நேரத்தில் அவர்கள் எல்லாம் உயிர் பிழைத்தால் போது மென்று ஓட்டம் எடுத்தனர். யாருமே நான் தேவதை என்பதைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், உமது மந்திரியாரோ பறவை உருவில் இருந்த நான் வனதேவதைதான் என்பதை கண்டு பிடித்து விட்டார். இதன் மூலமாக அவர் சகலகலா திறமைப் பெற்றவர் என்பது தெளிவாகிறது,'' என்றது வனதேவதை.
பின்னர் அந்த வன தேவதை மன்னருக்கும், மந்திரியாருக்கும் ஆசி வழங்கிவிட்டு மறைந்தது.
""மந்திரியாரே! தங்களைப் பார்க்கின்ற போது எனக்கு வியப்பாகயிருக்கின்றது! நீங்கள் பார்க்கிற நேரமெல்லாம் மிகவும் பொறுமை யுடன் இருக்கின்றீர்கள்! ஆனால், உங்களுக்குள் இருக்கின்ற சக்தியை இப்போது தான் நான் உணர்கிறேன். நீங்கள் என்னோடு துணையிருக் கின்ற வரையிலும் நான் சிறந்த முறையில் மக்களுக்கு நல்லாட்சியினைக் கொடுக்க முடியும்!'' என்றார் மன்னர்.
மந்திரியாரோ அதனைக் கேட்டதும் அடக்கத்துடன் சிரித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.