Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 11, 2016

அலட்டல் ஆசாமிகள்!-சிறுகதை


ஓர் ஊரில் மூன்று அலட்டல் பேர்வழிகள் இருந்தனர். திடீரென அவர்களிடம் செல்வம் சேர்ந்தது. ஒருவன் வைர மோதிரம் செய்து போட்டுக் கொண்டான். பார்ப்பவர்கள் எல்லாம், "ஏது மோதிரம். நன்றாக இருக்கிறதே. எங்கு வாங்கினீர்கள்?' என்று கேட்பார்கள் என்று நினைத்தான்.
இரண்டாமவன், பொன்னாலான அரைஞான் கயிற்றை இடுப்பில் அணிந்து கொண்டான். "அழகாக இருக்கிறதே, பத்துப் பவுன் இருக்குமா?' என்று எல்லாரும் கேட்பார்கள் என்று நினைத்து பெருமை கொண்டான்.
மூன்றாமவன், வைரக் கடுக்கனைக் காதில் அணிந்து கொண்டான். "பளபளவென்று மின்னுகிறதே. உண்மையான வைரம்தானா? உங்கள் முகமே இப்போது அழகாக இருக்கிறது என்று எல்லாரும் கேட்பார்கள்' என்று நினைத்தான்.
மூவருமே ஊர் முழுவதும் சுற்றினர். யாராவது வழியில் சென்றால் கூட அவர்களை அழைத்துப் பேசினர். ஆனால், யாருமே அவர்கள் அணிந்திருந்த நகைகளைக் கண்டு கொள்ளவில்லை. ஒருவர் கூட அதைப் பற்றிப் பேசவில்லை.
அலட்டல் பேர்வழிகளான அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாகி விட்டது. "தாங்கள் அணிந்திருக்கும் அணிகலன்களைப் பற்றி யாருமே பேச வில்லையே...!' என்ற சோகத்தில் ஓரிடத்தில் அமர்ந்தனர்.
அப்போது அங்கு ஓடி வந்த ஒருவன், ""ஐயா! என் பசு மாடு காணாமல் போய்விட்டது. இந்த வழியாகப் போனதா? நீங்கள் யாராவது பார்த்தீர்களா?'' என்று பரபரப்புடன் கேட்டான்.
மோதிரம் அணிந்திருந்தவன், தன் பெருமையைக் காட்ட நினைத்தான். வைர மோதிரத்தை அவன் முகத்துக்கு நேராகக் காட்டி விரல்களை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று பலமுறை எண்ணினான்.
""உன் மாடு காணாமல் போய் நான்கு மணி நேரம் இருக்குமா?'' என்று கேட்டான்.
உடனே இரண்டாமவன், தான் அணிந்திருந்த அரைஞான் கயிற்றைக் காட்ட விரும்பினான். அவன் எதிரே இடுப்பை அசைத்து, அசைத்து இரண்டு மூன்று முறை நடந்து காட்டினான்.
""இப்படித்தான் உன் மாடு நடந்து போனதா?'' என்று கேட்டான்.
வைரக் கடுக்கனைக் காட்ட விரும்பிய மூன்றாமவன், தன் தலையை அவன் எதிரில் பலமுறை ஆட்டினான்.
""உன் மாடு இப்படித் தலையை ஆட்டிக் கொண்டு சென்றதா?'' என்று கேட்டான்.
வந்தவன் இவர்கள் பேசியதைக் கேட்டு கோபம் கொண்டான்.
""என் மாடு போனதைப் பார்த்திருந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்டால், பேசாமல் இருங்கள். மோதிரத்தை, அரைஞாண் கயிற்றையும், கடுக்கனையும் காட்டி சம்மந்தமே இல்லாமல் ஏதேதோ பேசுகிறீர்களே... நீங்கள், சரியான "அலட்டல் பேர்வழிகள்' என்று தெரியாமல் கேட்டு விட்டேன்,'' என்று கத்திவிட்டுச் சென்றான்.
அவமானமடைந்த அலட்டல் ஆசாமிகள் சோகத்துடன் வீடு திரும்பினர்.
***

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.