Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 15, 2016

காணொளி ஆட்சி ஸ்டிக்கர் ஆட்சியாக மாறிவிட்டது: கனிமொழி கடும் தாக்கு!


காணொளி ஆட்சியாக இருந்த அ.தி.மு.க. ஆட்சி, பின்னர் ஸ்டிக்கர் ஆட்சியாக மாறிவிட்டது என்று கனிமொழி கடுமையாக தாக்கி கூறினார்.

கிருஷ்ணகிரி மீனாட்சி மகால் திருமண மண்டபத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மற்றும் தர்மபுரி மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் தி.மு.க. மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ''கடந்த 5 ஆண்டு காலமாக மதுவிலக்கை அமல்படுத்தாத ஜெயலலிதா, தற்போது படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார். ஜெயலலிதா சொன்ன எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றியதில்லை. சட்டசபையில் 110 விதியை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான அறிவிப்புகளை வெளியிட்ட ஒரே முதலமைச்சர் ஜெயலலிதாதான். இதில் ஒன்று, இரண்டை தவிர மற்ற எதையும் அவர் நிறைவேற்றவில்லை.

மதுவிற்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள், பெண்கள், மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இசை கலைஞர் கோவன் என்பவர் மதுவிற்கு எதிராக பாடல் பாடியதால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் ஈடுபட்டபோது உயிரிழந்தார். இதுபோன்று மதுவிற்கு எதிராக போராடியவர்கள் மீது அ.தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள்.

ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்த தனிச்சட்டம் இயற்றுவதாக அறிவித்துள்ளார். மேலும், பெண்களுக்கு, விவசாயிகளுக்கு என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் செய்வதைத்தான் சொல்வார். சொல்வதைத்தான் செய்வார். தி.மு.க.வின் இந்த தேர்தல் அறிக்கை மக்கள் தயாரித்த தேர்தல் அறிக்கையாகும்.

எப்படி என்றால் நாங்கள் மாவட்டந்தோறும் சென்று அங்கு விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், தொழில் அதிபர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து, அவர்கள் கூறியதை உள்வாங்கி, வெளியிடப்பட்டதுதான் இந்த தேர்தல் அறிக்கையாகும். தமிழகத்தில் இரு சமூக மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் சாதி கட்சிகள் உள்ளன. அதனால், சாதி கட்சியினரை நம்பாதீர்கள்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. காணொளி ஆட்சியாக இருந்த அ.தி.மு.க. ஆட்சி, பின்னர் ஸ்டிக்கர் ஆட்சியாக மாறிவிட்டது. வரும் தேர்தலில் தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று, தலைவர் கருணாநிதி 6-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அதற்கு உறுதுணையாக தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி தூண்களாக இருந்தது என்ற பெருமை பெரும் வகையில் நாம் பணியாற்றிட வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.