அலுவலகம் முடிந்து வீடு வந்து சேர்ந்த வெகு நேரத்திற்கு பின், ''என்னங்க...'' என்று, மெல்ல அழைத்தாள், என் மனைவி இந்திரா.
'என்ன?' என்று கேட்டேன். மூடியிருந்த அறையில், பையன் படித்துக் கொண்டிருந்தான்.
''கொஞ்சம் கொல்லைக்கு வர முடியுமா?'' என்று, ரகசியமாக கேட்டாள்.
'கொல்லை பகுதியில், கிணறும் அதைச்சுற்றி வாழை மரமும், அதற்கு அடுத்தாற் போல், மா, புளிய மரம் என்று, அப்பகுதியே ஒரே இருட்டா இருக்கும். ஆனாலும், இந்திரா தனியே போய் வருவா. இன்னைக்கு மட்டும் ஏன் துணைக்கு அழைக்கிறா...' என்ற எண்ணம், எனக்குள் ஓடியது.
'வர்றேன்' என்பதற்கு, அடையாளமாக நாற்காலியை விட்டு எழுந்தேன்.
இந்திரா எனக்கு முன் நடந்தாள்; நான் அவளை பின் தொடர்ந்தேன்.
கொல்லைக் கதவைத் திறந்து, கிணற்றடியில் வந்து நின்றவள், ''பையனக் கவனிச்சீங்களா?'' என்று, கீழ்க்குரலில் கேட்டாள்.
''இல்ல; ஏன்?''
''மொகமே சரி இல்லங்க.''
''ஏன்...என்ன காரணம்?''
''இன்னக்கி வகுப்புல முட்டி போட்டிருக்கான்.''
துணுக்குற்றேன். பள்ளியில், படிக்கும் பத்து வயது பையனில்லை என் மகன். கல்லூரியில் படிக்கும், பத்தொன்பது வயது வாலிபன்.
''என்ன விஷயம்?''
''இன்னைக்கு காலையில, வழக்கமா போற கல்லூரி பஸ்ச தவற விட்டுட்டு, வேற பஸ்சுல கல்லூரிக்கு போயிருக்கான். 'கல்லூரி பஸ்சுல ஏன் வரல'ன்னு கேட்டு, வாத்தியார், வகுப்புல இவனை முட்டிப் போட சொல்லி தண்டனை கொடுத்திருக்காரு. கால் மணி நேரமா முட்டி போட்டுருக்கான். பாவம் அத்தனை பேர் மத்தியில எத்தனை அவமானமா இருந்திருக்கும்... முகம் தொங்கி போய் வந்தான். நான் தேறுதல் சொல்லியும் சரி ஆகலே. அட! இப்படியெல்லாம் கூடவா படிக்கிற பசங்களை அவமானப்படுத்து வாங்க?''என்று, ஆதங்கத்துடன் சொல்லி நிறுத்தினாள் இந்திரா.
இதைக் கேட்டதும், எனக்கு ரத்தம் சூடேறியது. மற்ற எல்லா ஊர்களிலும் உள்ளது போல், எங்கள் ஊரிலும், அத்வான காட்டில் ஒரு பொறியியல் கல்லூரி உள்ளது. 5 கி.மீ., சுற்றளவிற்கு, மனித வாடையே கிடையாது; சரியான பொட்டல்வெளி.
கல்லூரியின் சட்ட திட்டங்கள் ரொம்ப கெடுபிடி. மாணவ, மாணவியர் கல்லூரி பேருந்தில் மட்டுமே கல்லூரிக்கு வந்து, திரும்ப வேண்டும். மதியம், அனைவரும் கல்லூரி மெஸ்சில் தான் சாப்பிட வேணடும். புத்தகங்கள், சீருடைகள் அனைத்தும் கல்லூரியில் தான் வாங்க வேண்டும்; வெளியில் வாங்க கூடாது. அப்படி வாங்கினாலும், அதை நிர்வாகம் ஏற்காது.
எந்த மாணவ, மாணவியரும் சொல்லாமல், கொள்ளாமல் விடுப்பெடுக்கக் கூடாது. எடுத்தால், எந்தவித காரணங்களும் ஏற்கப்படாமல், முந்நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மருத்துவச் சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே மன்னிப்பு.
போலீஸ், ராணுவம் போல் பையன்கள் தலைமுடியை ஒட்ட வெட்டியிருக்க வேண்டும். படித்து வரவில்லை, டெஸ்ட் எழுதவில்லை என்றால், அபராதம். பெண்கள் தலையில் பூ வைக்க கூடாது; இரட்டைப் பின்னலை தவிர, வேறெதுவும் கூடாது. காது, கழுத்து தவிர நகைகள் அணிந்து வரக் கூடாது.
எல்லாம் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., - கான்வென்ட் சட்ட திட்டங்கள். மக்களின் நாகரிக மோகத்தினால், கல்வி வியாபாரமாகிப் போனதால், வந்த வினைகள்.
பொதுவாய் தொழிற்கல்வி கற்கும் மாணவர்களை நிர்வாகம் நடத்தும் விதம், ரொம்ப கொடுமை. ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், மருத்துவ படிப்பும், இதில் அடக்கம்.
இவைகளில் படிக்கும் மாணவ, மாணவியர் அனைவரும், நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் அடிமைகள். எதிர்த்து பேசக் கூடாது. அவர்கள் சொன்னதை தான் செய்ய வேண்டும்; கல்லூரி சட்ட திட்டப்படி தான் நடக்க வேண்டும். மாறினாலோ, முரண்டாலோ பிராக்டிக்கல் தேர்வில், மதிப்பெண்களை குறைத்து விடுவர்.
அது மட்டுமல்லாமல், மாணவர்களின் நன்னடத்தை மதிப்பெண்கள் ஐந்து, நிர்வாகம் கையில்; அதையும் கொடுக்க மாட்டார்கள். மாணவர்கள் அவர்கள் சொல்படி நடப்பதை தவிர, வேறு வழி இல்லை. இந்த அராஜகம் எல்லை மீறி, இன்று, பள்ளி சிறுவர், சிறுமியரைப் போல், 'முட்டிப் போடு, பெஞ்சு மேல் ஏறி நில்' என்கிற அளவுக்கு வந்து நிற்கிறது.
கல்லூரி மாணவ, மாணவியர் பருவ வயதில் இருப்பவர்கள். நான்கைந்து ஆண்டுகளில் படிப்பை முடித்து, பின், குடும்ப சுமைகளை ஏற்கும் பொறுப்பாளிகள். மான அவமானங்கள் தெரிந்தவர்கள். தண்டிக்கப்படும் மாணவ, மாணவியருள் எவராவது ஒருவர், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டால், நிர்வாகம் எதைச் சொல்லியாவது தப்பிக்கலாம். ஆனால், பெத்தவங்களுக்குத் தானே நஷ்டம். 'இதை தட்டிக் கேட்டே ஆக வேண்டும்...' என்று, என் மனம் விஸ்வரூபம் எடுத்தது.
'விடுவிடு'வென்று, வீட்டிற்குள் வந்து, அறையை திறக்க, படித்துக் கொண்டிருந்த பரத், சத்தம் கேட்டு, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான்.
''பரத்... அம்மா சொன்னதெல்லாம் உண்மையா?''
பின்னாலேயே தாய் வந்ததை கவனித்து, விஷயத்தை புரிந்து, ''ஆமாம்ப்பா,'' என்றவன், ''நீங்க எதுவும் கேட்க வேணாம்ப்பா,'' என்று, கலவரமாக சொன்னான்.
''ஆமாங்க,'' என்று இந்திராவும், மகனுக்கு ஒத்துப் பாடினாள்.
''கவலைப்படாத; உன் படிப்புக்கு எந்த பாதிப்பும் வராது.''
''இல்லப்பா அவுங்க பெயிலாக்கிடுவாங்க.''
அவன் முகத்தில், பயம் பிரதிபலித்தது.
''அப்ப, தவறை யார் தான் தட்டிக் கேட்கிறது,'' என்றேன்.
மவுனமாக நின்றான்; எனக்கு வேறு யோசனை தோன்றியது.
''சரி... நாம மட்டும் தனியா போய் கேட்டாத் தானே பகை; இன்னும் கொஞ்ச பேரைக் சேத்துக்கலாம்,'' என்றேன்.
''ஆமாங்க. அப்படியே செய்யலாம்,''என்றாள் இந்திரா.
அவளுக்கு இந்த யோசனை பிடித்திருந்தது.
சட்டையை மாட்டி, அடுத்தத் தெருவிலிருக்கும் கிருஷ்ணன் வாத்தியார் வீட்டை நோக்கி நடந்தேன். அவர் மகன் பரத்தோடு படிக்கிறான்.
வாசல் விளக்கு வெளிச்சத்தில், என் தலையைக் கண்டதுமே, ''என்ன சார் இந்த நேரத்துல,'' என்று கேட்டபடி, கொஞ்சம் பதற்றமாக வெளியே வந்தார்.
வந்த விஷயத்தை சொன்னேன். அமைதியாக கேட்டவர், ''கோபப்படாதீங்க சார்; இது ஒரு சாதாரண விஷயம், இதப் போயி பெரிசு படுத்திக்கிட்டு... விட்டுடுங்க,'' என்றார்.
மாணவர்களை முட்டிப் போட செய்வது, வாத்தியாரான இவருக்கு சாதாரணமான விஷயமாக தெரிகிறது.
''சார்... இது புள்ளைங்க மனசப் பாதிக்கிற விஷயம்,'' என்று கூறி, எடுத்துச் சொன்னேன்.
''நீங்க சொல்றது நியாயம் தான் சார். ஆனா, எதையாவது கேட்க போயி, பசங்களப் பெயிலாக்கிட்டா என்ன செய்றது... அதுதான், யாரும் இதப் பத்தி பேச வாயத் திறக்கறதில்ல; லட்ச லட்சமாக கொட்டி படிக்க வைக்கிறோம். இந்த சின்ன விஷயத்த பெரிசு படுத்தி, பிள்ளைங்க படிப்ப கெடுத்துறக் கூடாது,''என்றார்.
''இப்படியே எல்லாத்துக்கும் பயந்தா எப்படி சார்? தட்டினா தானே வழி பிறக்கும்,'' என்றேன் விடாமல்.
''நான் வரலை,'' என்று கூறியவர், அதற்கு மேல் பேச விரும்பாமல், உள்ளே சென்றார்.
அடுத்து இரண்டு மூன்று பேர்களை சந்தித்தேன். எவருக்கும் துணிவில்லை.
'கல்லூரியில் பெற்றோர், ஆசிரியர் சங்கம் என்று ஒன்னு இருக்கு. அங்கே, முறையிடலாம்ன்னா, அங்கேயும் இந்த கோழைங்க தான் உறுப்பினரா இருக்காங்க. ஆரம்பத்திலேயே இவங்க தட்டிக் கேட்டிருந்தா, இத்தகைய தவறுக நடந்திருக்காது; திருத்தப்பட்டிருக்கும். பயந்தாங்கொள்ளிகள்; கேட்கவுமில்லை. கேட்கவும் மாட்டார்கள்...' மனசு சபித்தது.
இதைத் தட்டிக் கேட்காமல் விட்டு விட, எனக்கு மனசில்லை. இது என்னுடைய மகனோட பிரச்னை மட்டுமல்ல, எதிர்கால சந்ததிகளின் பிரச்னையும் கூட. நிறைய யோசித்து, தனி ஆளாய்த் துணிவது என்ற, முடிவிற்கு வந்தேன். அதற்கு பரத் பக்கபலமாய் இருப்பது அவசியம் என்று நினைத்து வீட்டிற்கு திரும்பினேன்.
''அப்பா, யார் யார் வர்றாங்க?'' என்று கேட்டான் பரத்.
''கோழைங்க...'' ஒற்றைச் சொல்லில், வெறுப்பை உமிழ்ந்து, ''நாம கேட்கலாம்,'' என்றேன்.
பரத் துணுக்குற்று, என்னைப் பார்த்தான்.
''பயப்படாத உன் எதிர்காலத்துக்கு நான் உத்தரவாதம்,'' என்றேன். பதில் சொல்லவில்லை பரத். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி.
மறுநாள் காலை, கல்லூரி ஆரம்பித்தவுடன், நானும், பரத்தும் கல்லூரி முதல்வரை பார்க்க விரும்புவதாக, வாசலில் நின்ற பியூனிடம் சொன்னோம்.
அவன் உள்ளே சென்று, திரும்பி வந்து, ''போங்க சார்,''என்று, கதவு திறந்து விட்டான். கல்லூரி முதல்வர் தனசேகரன், ஆடம்பர மேசை, நாற்காலியில், அட்டகாசமாக அமர்ந்திருந்தார்.
''வணக்கம் சார்,'' கைகூப்ப, பதிலுக்கு அவரும் அனிச்சையாய்க் கைகூப்பி, ''பரத், நீ ஏன் வகுப்புக்குப் போகலை,'' என்றார்.
''பையன் விஷயமா கொஞ்சம் பேசணும் சார்,'' என்று கூறி இருக்கையில், அமர்ந்தேன்.
பரத் அமரவில்லை; நானும் அமரச் சொல்லவில்லை.
''என்ன விஷயம்?''
''இவன் நேத்து, காலேஜ் பஸ்சுல வரலைங்குறதுக்காக வகுப்புல முட்டிப் போட வச்சுருக்காங்க சார்,'' நேரடியாக, விஷயத்திற்கு வந்தேன்.
''அது அவன் செய்த தப்பு; அதுதான் தண்டனை கொடுத்திருக்காங்க.''
''மனுஷன் தவறுவது இயல்பு சார்,'' என்றேன் பணிவாக.
''இங்கே மன்னிப்பு, மறப்புங்குற பேச்சுக்கே இடமில்ல. இது கண்டிப்பான கல்லூரி,'' என்றார்.
''சந்தோஷம்; ஆனா, அதுக்குத் தண்டனை இது இல்லே சார். தண்டனைங்கறது, தவற திறுத்தணும்; மனச பாதிக்கக் கூடாது,'' என்றேன்.
''சார்... இங்கே இப்படித்தான். பையன கல்லூரி சட்ட திட்டத்த மதிச்சு நடக்கச் சொல்லுங்க. இல்ல... மான, அவமானம் உங்களுக்குப் பெரிசா இருந்தா, பையனோட, 'டிசி'யை வாங்கிக் கிட்டுப் போங்க,'' என்றார் கோபத்துடன்.
''நீங்க தவற உணராம பேசுறீங்க சார். இந்த முட்டிப் போடுற தண்டனை, வயசுப் புள்ளைங்க மனச பாதிக்கும். மனசொடிஞ்சு தற்கொலை வரை போகும்,'' என்றேன்.
தற்கொலை என்ற வார்த்தை, அவர் மனதைக் கொஞ்சம் அசைத்தது போல, மவுனமாக இருந்தார்.
தொடர்ந்தேன்... ''சார், பரத் உள்ளூர் கான்வென்ட்டுலதான் படிச்சான். அதுவும் கண்டிப்புக்கு பேர் பெற்றது தான். பள்ளிக்கு தாமதமா வந்தாலோ, படிக்கலை, டெஸ்ட் எழுதலைன்னாலோ தண்டனையா மரக்கன்று நடச் சொல்லி, அதுக்கு காலை, மாலை தண்ணி ஊத்த சொல்வாங்க. இன்னைக்கு அந்த கான்வென்ட் சோலைவனமா இருக்கு. அங்க பறவைக கூட்டமாக வருதுக. ஒரு தண்டனையில எவ்வளவு நல்லது இருக்கு பாருங்க. அதே சமயம், குற்றவாளி மனசப் பாதிக்காத தண்டனை.
தண்டனை தண்டனையாய் மட்டும் இருக்கிறது பிரயோசனமில்லே. அது, அவனுக்கு மட்டுமில்லாம, மத்தவங்களுக்கும் பயனுள்ளதா இருக்கணும். அதனாலதான், சிறைச்சாலை கைதிகளுக்கு கூட கைத்தொழில் கத்துத் தர்றாங்க,'' என்றேன்.
''உங்க உபதேசத்துக்கு நன்றி; என் நேரத்தை வீணடிக்கிறீங்க.''
கோபம் மாறாமல் பேசினார் தனசேகரன்.
''சார், உங்க முடிவு?''
''இங்கே இப்படித்தான் சார் நடக்கும்.''
''அப்படின்னா, இந்த விஷயத்த நான் மனித உரிமைக் கழகம், மனிதவள மேம்பாட்டுக்குத் தெரியப்படுத்தறேன்,'' என்று, அடுத்த ஆயுதத்தை எடுத்தேன்.
அவர் துணுக்குற்றார்; ஆனாலும், சட்டென்று இறங்கி வர மனமில்லை.
''ரொம்ப சரி. அதுக்கு முன், 'டிசி'யை வாங்கிக்கிட்டு கிளம்புங்க,'' என்றார்.
''வாங்கிக்கிறேன்; ஆனா, அதுல இன்ன காரணத்துக்காக, பரத்தை கல்லூரியை விட்டு நீக்குறேன்னு, நீங்க குறிப்பிடணும்.''
''முடியாது.''
''அப்போ, 'டிசி' வாங்க முடியாது.''
''சார். நீங்க வம்பு செய்றதுக்காகவே வந்திருக்கீங்க. அதிகம் வேணாம்... உங்க பையன், இங்கே படிக்கிறான்ங்குறது நினைவிருக்கட்டும்,'' என்றார் கல்லூரி முதல்வர்.
''நல்லா ஞாபகமிருக்கு; அதே சமயம், பரிசோதனை பயிற்சித் தேர்வுல மதிப்பெண்கள குறைச்சு, அவனை பெயிலாக்கி, பழி வாங்கிடலாம்ன்னு நீங்க மனப்பால் குடிக்காதீங்க. மறு ஆய்வுக்கு வழி இருக்கு.''
முதல்வர் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. அதற்கு மேல், அவரால் முரண்டு பிடிக்க முடியவில்லை.
''ஓ.கே., சார். இனிமே, இப்படி நடக்காது; கை கொடுங்க,'' சட்டென்று சமாதானத்துக்கு வந்து கை நீட்டினார்.
நான் கையை நீட்டவில்லை. ''நீங்க மனப்பூர்வமாய் சொன்னால் மட்டுமே, நான் சமாதானத்துக்குத் தயார்,'' என்றேன்.
''நான் மனப்பூர்வமாகத்தான் சொல்றேன். இங்கே படிக்கிற யாருக்கும், இனி மனசப் பாதிக்கிற மாதிரி, தண்டனை கிடையாது. இதுக்கு நான் உத்தரவாதம். கை கொடுங்க,'' என்றார்.
வேறு வழியில்லாமல், அவர் சமாதானத்துக்கு வந்தாலும், இனிமேல், மாணவர்களிடம் இப்படி நடப்பது குறையும் என்ற எண்ணத்தில் நானும், ''நன்றி,'' என்று கூறி, கை கொடுத்தேன்.
பரத் முகம் மலர்ந்தது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.