Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 15, 2016

தெருவோரத் தங்கங்கள்!-நிஜ சாதனையாளர்கள்


வானமே கூரையாய் கூட்டாந்தரையே படுக்கையாய் அன்றாடம் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து தெருவோரம் வாழ்க்கை நடத்தும் விளிம்பு நிலை மனிதர்களின் குழந்தைகள் இவர்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டியிருக்கும் அல்லிக் குளத்தில் ஒண்ணுக் குடித்தனத்தில் வீடு மாதிரியான அறையில்(!) கூட்டம் கூட்டமாய் வசிக்கிறார்கள்.
அடுத்த வேளை உணவு நிச்சயமில்லாத நிலையில் நிர்க்கதியாய் தவிக்கும் இந்தச் சிறுவர்கள் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உலக அளவில் நடந்த தெருவோர குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அள்ளி வந்திருக்கிறார்கள்.
அவர்களில் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் தட்டி வந்திருக்கும் ஹெப்சிபாவிடம் பேசினோம்.
'எனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும்தான் எனக்கு மூணு அக்கா. நான்தான் கடைக்குட்டி. அம்மா சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல பூ வியாபாரம் பண்றாங்க. தினமும் கிடைக்கும் அந்த கொஞ்சூண்டு வருமானத்துல தான் நாங்க வாழறோம். இங்க பக்கத்துல இருக்கிற கார்ப்பரேஷன் ஸ்கூல்ல பிளஸ் ஒன் படிக்கிறேன்.
சின்ன வயசிலிருந்தே பள்ளிக்கூடத்துல நடக்கற ஓட்டப் பந்தியத்துல கலந்துக்கிட்டு நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறேன். இப்ப பிரேசில்ல நடந்தது தெருவோர சிறுவர்களுக்காக நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டி. அதுல இந்தியா, பாகிஸ்தான், புரூண்டி, எகிப்து, பிலிப்பைன்ஸ்னு ஒன்பது நாடுகள்லேர்ந்து தெருவோரம் வசிக்கும் சிறுவர்கள் வந்திருந்தாங்க.
இங்கேர்ந்து அபுதாபி போய் அங்கேர்ந்து ரியோ டி. ஜெனிரோவுக்குப் போனோம். 19 மணி நேர விமானப் பயணம் வானத்துல பறக்கும் போது விமானத்தைப் பார்த்திருக்கேன் முதன் முதலா ஃபிளைட்டைப் பார்த்தப்ப ஆச்சரியமா இருந்திச்சு.
பரிசு கெடைக்கும்னு நெனச்சேன். ஆனா தங்கப் பதக்கம் கிடைக்கும்னு நினைக்கல!' என்று சொல்லும் ஹெப்சிபா 100 மீட்டர் ஓட்டத்தில் வௌ்ளி, ரிலே ரேஸில் வெண்கலம் என மூன்று பதக்கங்களைத் தட்டி வந்திருக்கிறார்.
வாங்கி பதக்கங்களை கழுத்தில் அணிந்தபடி நிற்கும் மகள் ஹெப்சிபாவை அருகில் வந்து கட்டி அணைக்கும் அவரது தாய் ஆராயி, 'ஓட்டப் பந்தயப் போட்டிக்காக என் பொண்ணு ஒரு வாரம் வெறுங்காலுடன் இங்கதான் பயிற்சி எடுத்தா. அவ நல்லா ஓடுவாங்கிறது தெரிபயும். இப்ப பரிசு வாங்கிட்டு வந்திருக்கிறது சந்தோஷம்!' எனச் சொல்லும் அந்த ஏழைத் தாயின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
ஹெப்சிபாவுடன் போட்டிக்கச் சென்றவர்களில் அசோக் உஷா, சினேகா, சிலம்பரசன் என நான்கு பேர் பட்டியலில் உடன் இருக்கிறார்கள்.
அவர்களில் ஷாட் புட்டில் அசோக் வெண்கலமும், சர்வதேச ரிலே ரேஸில் சினேகா வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருப்பது அசத்தல்.
அங்கே நடந்த விழாவில் உலக அளவில் தெருவோர குழந்தைகளின் சார்பில் சிறப்புரை ஆற்றும் வாய்ப்பு உஷாவுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த டீமில் சீனியர், கல்லூரி மாணவி என கூடுதல் தகுதிகள் இருந்ததால் இந்த வாய்ப்பு.
அது பற்றிப் பேசும் உஷா, 'தெருவோர குழந்தைகளின் ஒலிம்பிக் போட்டின்னு சொல்லாம தெருவோர குழந்தைகளின் விளையாட்டுப் போட்டின்னு தான் குறிப்பிடணும்னு சொல்லிட்டாங்க. நாங்க ஏழைக் குழந்தைங்கதானேன்னு நெனக்காம நல்லா உபசரிச்சாங்க. வந்திருந்தவங்க எல்லோருமே எங்களை மாதிரி தெருவோர குழந்தைகள்ங்கிறதால கெடுபிடி, கட்டுப்பாடு எதுவும் காட்டலை.
எங்களுக்கு உடனடித் தேவை அடையாளம் (ஐடென்ட்டிட்டி), கல்வி, பாதுகாப்பு உணர்வு இவற்றை வலியுறுத்தித்தான் நான் பேசினேன். அப்ப எல்லோரும் கைதட்டினாங்க. பின்னர் தான் அவங்க நாட்டுலேயும் இந்த மூன்று அம்சங்களும் கிடைப்பதில்லைன்னு தெரிஞ்சுது' என்று சொல்லும் உஷாவின் குரலில் இருக்கும் நிஜம் சமூகத்தின் காதுகளில் எதிரொலிப்பதை மறுப்பதற்கில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.