Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 8, 2016

கருமித்தனம்!-சிறுகதை


முன்னொரு காலத்தில், கொடுங்கையூர் என்ற கிராமத்தில் சண்முகம் என்ற தங்க நகை வியாபாரியும், உதயகுமார் என்ற வைர நகை வியாபாரியும் இருந்தனர். இருவரும் ஒன்றாக பல ஊர்களுக்குச் சென்று வியாபாரம் செய்தனர். இருவருக்கும் நல்ல முறையில் வியாபாரம் நடந்தன. அதனால், இருவர் கைகளிலும் ஏராளமான பணம் புரண்டன.
ஒருமுறை இருவரும் வெகுதூரத்திலுள்ள நகரத்திற்கு, வியாபாரத்திற்காக சென்றனர். அந்த நகரில் இருக்கும் பல பணக்காரர்கள் வீட்டு விருந்தினராக ஒருசில நாட்கள் தங்கினர்.
அந்தப் பணக்காரர்கள் எல்லாரும் வெளியூரில் இருந்து உறவினர்களை வரவழைத்தனர். பின்னர் எல்லாருமாக ஒன்று சேர்ந்து இருவரிடமிருந்தும் ஏராளமான தங்கத்தையும், வைரங்களையும் வாங்கிக் கொண்டனர்.
இரு வியாபாரிகளுக்கும் ஏராளமான பணம் சேர்ந்தது.
இருவரும் பெரும் பணத்துடன் அந்த ஊரை விட்டு புறப்பட்டனர். வழியில் தென்பட்ட ஊர்களில் எல்லாம் மீண்டும் வியாபாரத்தை செய்த அவர்கள், இரவு நேரத்தில் ஓர் நகரத்தை வந்தடைந்தனர்.
அந்த நேரம் அவர்கள் இருவருக்கும் பசி ஏற்பட்டது.
""நண்பரே! எனக்குப் பசி வந்துவிட்டது,'' என்றார் சண்முகம்.
""நண்பரே! எனக்கும் பசி வந்துவிட்டது. நான் உம்மிடம் சொல்ல நினைத்தேன். அதற்குள் நீரே சொல்லிவிட்டீர்,'' என்றார் உதயா.
""நண்பரே! இந்த நகரத்தில் உணவுப் பண்டங்களின் விலை அதிகமாக இருக்கும் போன்று தெரிகிறது. எனவே, இந்த இரவு ஒரு வேளை உணவுக்காக அதிகப் பணம் செலவிட நேரிடலாம். பின்னர் நாம் தங்குவதற்கும் ஒரு விடுதியை தேர்ந்தெடுத்தால் அதற்கும் பணம் செலவு செய்ய வேண்டியதிருக்கும். நாம் மிகக் குறைந்த செலவில் சாப்பிடவும் வேண்டும். அதே நேரத்தில், தங்கிக் கொள்ளவும் வேண்டும். அதற்கு ஓர் யோசனையை நீரே கூறிடும்,'' என்றார் சண்முகம்.
""நண்பரே! சில உணவு விடுதியில் உணவுக்கும் ஏற்பாடு செய்து தங்க வைத்துக் கொள்வர். இந்த நகரிலேயே மிகக் குறைந்த விலை உணவுடன், மிகக் குறைந்த வாடகையுடன் உள்ள விடுதி எந்த இடத்தில் இருக்கிறது என விசாரிப்போம்! பின்னர் அந்த இடத்திற்குச் செல்வோம்! எப்படி என் யோசனை?'' என்று கேட்டார் உதயா.
""ஆஹா! புத்திசாலித்தனமான யோசனை தான். இப்போதே நாம் அப்படிப்பட்ட விடுதி எந்த இடத்தில் இருக்கிறது என விசாரிப்போம்! அப்படிப்பட்ட இடத்தினை தேடிப் பிடித்து உடனடியாகச் செல்வோம்,'' என்றார் சண்முகம்.
சிறிது நேரத்தில் இருவரும் அந்த நகரின் மூலை முடுக்குகளில் எல்லாம் தேடி, ஓர் மட்டமான விடுதி ஒன்றில் தங்கினர்.
அந்த விடுதியில், மிகக் குறைந்த கட்டணத்தில் உணவுக் கொடுத்ததால், இருவரும் ஏராளமாக உணவுகளை வாங்கி வயிறு நிறைய சாப்பிட்டனர்.
அதன் பின்னர் இருவருக்கும் தூக்கம் வந்தது.
""நண்பரே! நாம் இப்போது தூங்க வேண்டும். இங்கு நம் இருவருக்கும் சேர்த்து ஓர் அறையை வாடகைக்கு எடுக்கலாம். ஆனால், ஏராளமானவர்கள் திண்ணையிலும் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். நாமும் அவர்களைப் போன்று திண்ணையில் படுத்துத் தூங்கினால் அறைக்கு கொடுக்க வேண்டிய வாடகைச் செலவானது மிச்சமாகி விடும்,'' என்றார் உதயா
""பலே... பலே..! இது நல்ல யோசனையாகத் தானிருக்கின்றது. நாம் அப்படியே செய்திடலாம். வீணாக அறையில் தங்கிப் பணத்தைக் கொடுக்க வேண்டாம். திண்ணையில் படுத்துக் கொள்ளலாம். ஆனால், நம் வசம் ஏராளமாக பணம் இருக்கிறதே! அந்தப் பணத்தினை எல்லாம் நாம் என்ன செய்வது?'' என்று கேட்டார் சண்முகம்.
""அதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்தப் பணத்தை எல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டி, தலையணையாக தலைக்கு வைத்துக் கொள்ளலாம்,'' என்றார் உதயா.
""ஆஹா! அருமையான யோசனைதான்! நாம் நமது பணத்தையும் பாதுகாத்தது மாதிரியிருக்கும். அதே நேரத்தில், தலைக்கு இதமாக தலையணையை வைத்துத் தூங்கியது போலவும் இருக்கும்! உமக்குதான் இந்த மாதிரியான அற்புதமான யோசனைகள் எல்லாம் வருகின்றன. ஆனால், எனக்கு எந்த யோசனையும் வருவதில்லை. என்னை விட உமக்கு மூளை மிக நன்றாகவே வேலை செய்கிறது. உமது மூளையை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டிக் கொண்டேயிருக்கலாம்,'' என்றார் சண்முகம்.
அதன் பின்னர் இருவரும் தங்கள் வசம் இருந்த பணத்தையெல்லாம் ஆளுக்கோர் தலையணையாகக் கட்டி தலைக்கு வைத்தபடி தூங்கத் தொடங்கினர்.
ஏற்கனவே அவர்கள் களைப்போடு இருந்ததாலும், அதிகமான உணவு உட்கொண்டதாலும் நன்றாக அயர்ந்து தூங்கி விட்டனர்.
நள்ளிரவு நேரத்தில் எல்லாரும் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்க, அந்தக் கூட்டத்தில் படுத்திருந்த ஒருவன் மட்டும் தூக்கத்தினை விட்டு எழுந்து கொண்டான்.
அவர் தலையணையை வைத்துப் படுத்திருக்கும் உதயகுமாரையும், சண்முகத்தையும் வெறுப்போடு பார்த்தார்.
"இந்த இடத்தில் படுத்திருக்கும் எவருமே தலையணையுடன் படுக்கவில்லை. இதோ இந்த இரண்டு பேர் மட்டும் தலையணையுடன் தூங்கிக் கொண்டிருக்கின்றனரே! நிச்சயமாக நாம் இவர்களது தலையணையை எடுத்து விட வேண்டும். அவைகளை நாம் தலைக் கொன்றும், காலுக்கொன்றுமாக வைத்தபடி நிம்மதியாக தூங்கலாம்' என்று மனதில் நினைத்தவாறு இருவரையும் நெருங்கினான்.
அந்நேரம் நல்ல தூக்கத்தில் இருவரும் புரண்டுப்படுத்திடவே அவன் அவர்களது தலையணையை எடுத்துக் கொண்டான். அந் நேரம் இரண்டு தலையணை முடிச்சுகளிலும், இடைவெளியில் பணம் தென்படவே, அந்த இரண்டு மூட்டையுடன் அங்கிருந்து கிளம்பினான்.
மறுநாள் காலை நேரத்தில் இருவரும் கண் விழித்தனர். தங்களது இரண்டு தலையணையும் இல்லாதிருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். பின்னர் அலறியபடித்தபடியே எழுந்தனர்.
""நண்பரே! தலையணையின் உள்ளே நாம் வைத்திருந்த பணமெல்லாம் போய்விட்டதே! என்ன செய்வது?'' என்று கவலையுடன் கூறினார் சண்முகம்.
""நண்பரே! நம் கருமித்தனத்தினால் நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. இதனை நினைத்தால் வெட்கக் கேடாயிருக்கிறது,'' என்றார் உதயா.
அதன் பின்னர் இருவரும் கருமித்தனத்தை கை விட்டனர். ஒழுங்காக வியாபாரத்தைக் கவனித்து வளமாக வாழ்ந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.