Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 14, 2016

சங்க கால பெண்களும்.. இந்தக் கால பெண்களும்..



சங்க கால பெண்களுக்கும், இந்தக் கால பெண்களுக்கும் என்ன வித்தியாசம் என்ற அடிப்படையில் மாணவிகள் நடத்திய விவாதம்.

“சங்க காலத்தில் தமிழ் சிறந்து விளங்கியது. இன்று தமிழ் நாட்டில் தமிழில் பேசினால் மரியாதை இல்லை”  - என்றார், மாணவி நித்யா!
இது உண்மையா?

“ஆமாம்... ஒருவர் செய்த உதவிக்கு நன்றி என்று தமிழில் கூறினால் நம்மை வேற்றுக்கிரகவாசிபோல பார்க்கிறார்கள்” என்றார் மாணவி சசிகலா.

இதோ..  இது தொடர்பாக மாணவிகளின் நீண்ட விவாதம்.

சபீனா : மொழியில் மட்டுமா? பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்   களில் இருந்தும் நாம் எங்கோ போய்விட்டோம்.

காயத்ரி: நவநாகரிகம் என்று ஆடைகளை குறைத்து கொண்டு இருக்கிறோம்.

சத்யா: இன்றைய வீரம் என்பது தன்னை காதலிக்காத பெண் மீது திராவகம் வீசுவதாகவே இருக்கிறது.

சண்முகப்பிரியா: இல்லறவாழ்விலாவது தூய்மை இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

சரண்யா: நட்பு என்பது சுயநல தேவைக்கானதாக மாறிவிட்டது.

பேராசிரியை சியாமள வள்ளி : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று திணைகளை வகுத்து வாழ்க்கை நடத்தியவன் தமிழன். வாழ்க்கையாலும், செயலாலும் நமக்கு பல பாடங்களை கற்றுத்தந்தார்கள். இதற்கான உதாரணங்களை நாம் சங்க இலக்கியங்களில் படித்து உணரலாம்.

வெண்ணிலா : தமிழர்கள் விருந்தோம்பலில் சிறந்து விளங்கினார்கள்.

சபீனா : வழிப்போக்கர்களுக்கு கூட நமது முன்னோர்கள் விருந்து கொடுத்து உபசரித்து இருக்கிறார்கள். இன்று, உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதாக இருந்தால் கூட நாங்கள் வரலாமா? என்று முன்அனுமதி பெற்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்படியே உறவினர்கள் வீட்டுக்கு நாம் சென்றாலும் சரி, மற்றவர்கள் நமது வீட்டுக்கு வந்தாலும் சரி, சமைத்துக்கொடுப்பது என்ற கலாசாரம் மாறி, கடைகளில் இருந்து வாங்கிக்கொடுக்கும் கலாசாரம் வந்து விட்டது.

காயத்ரி : பழந்தமிழர் இலக்கியங்களில் தங்கள் கையால் சமைத்து உறவினர்களுக்கு உணவளித்த பாங்கு பெரிதும் போற்றப்பட்டு உள்ளது.

வெண்ணிலா : தமிழர்களுக்கு தங்கள் மண் மீதான பற்று அதிகமாக இருந்தது. இதற்காகவே அவர்கள் தங்கள் வீரத்தை பறைசாற்றினார்கள். குடும்ப வாழ்க்கை இனிதாக இருந்தது. வீட்டில் மூத்தவர்கள் இளையவர்களுக்கு வழிகாட்டினார்கள்.

சரண்யா : சங்ககாலம் நட்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்புக் கதை எத்தனை சிறப்பு மிக்கது. ஒருவரை ஒருவர் பார்க்காமலே அவர்கள் கொண்டிருந்த நட்பு, கோப்பெருஞ்சோழன் மரண செய்தியை தாங்க முடியாமல் பிசிராந்தையார் உயிர் பிரிந்த சோகம்... கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் நட்பை பெற்ற கபிலர் அவரது மறைவுக்கு பின்னர் அவரது மகள்களை தம்மக்கள்போல வளர்த்த பாங்கு... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நித்யா : நட்பின் பெருமையை திரிகடுகம் நூல் நன்கு விளக்குகிறது. நண்பன் ஒருவன் விஷத்தை கொடுத்தால் கூட கேள்வி கேட்காமல் உண்ணும் நட்புகளும் இருந்திருக்கின்றன.

காயத்ரி : சங்ககால கல்வி முறை மிக சிறப்பானது. குருகுல கல்வியின் மூலம் ஆசிரியர்கள் மீதான மதிப்பு உயர்ந்திருந்தது. ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்கு அத்தனை வித்தைகளையும் கற்றுக்கொடுத்தனர். இதனால் கல்வி முழுமை பெற்றது.

சசிகலா : புறநானூற்றில் ஒரு பாடல், போருக்கு சென்ற மகன் இறந்து விட்டான் என்று ஒரு வீரன் தகவல் கூறுகிறான் தாயிடம். மகனின் மரணத்துக்கான காயம் மார்பில் பட்டதா? முதுகில் பட்டதா? என்று கேட்டாள் தாய். முதுகில் என்றான் வந்த வீரன். கண்ணீர் விட்டு அழுத தாய் கூறுகிறாள், என் மகனின் முதுகில் மட்டும் காயம்பட்டு அவன் இறந்திருந்தால் போரில் புறமுதுகிட்டு ஓடிய அவனை பெற்று, பாலூட்டிய எனது மார்பை திருகி எறிவேன் என்று கூறியபடி போர்க்களம் செல்கிறாள். அங்கே வீழ்ந்து கிடக்கும் மகனை புரட்டி பார்க்கிறாள். மகன் மார்பில் காயம்பட்டு வீரமரணம் எய்திக்கிடந்தான். அதைபார்த்து மகிழ்கிறாள் தாய் என்கிறது அந்த பாடல்.

நித்யா : போரில் ஒரு மகன் இறந்தாலும் அடுத்த மகனையும் அனுப்பி வைக்கும் வீரம் தமிழ் பெண்களுக்கு இருந்தது.

சரண்யா : போரின்போது கால்நடைகள், முதியவர்கள், குழந்தைகளை பாதுகாப்பாக வைக்கும் மரபும், தனக்கு சரிசமமான படை கொண்ட வீரர்களுடன் மட்டுமே போர் செய்யும் ஆரோக்கியமான மரபும் தமிழ் மன்னர்களிடம் இருந்தது.

செண்பகம் : சங்க காலத்தில் இல்லற வாழ்க்கை சிறப்பாக இருந்தது. வாழ்க்கையை அகம்-புறம் என்று பிரித்து அக வாழ்வுக்கும் முக்கியத்துவம் அளித்தார்கள். கணவன் பணி அல்லது போர் நிமித்தமாக வெளியூர் சென்றாலும் மனைவி அவரது வரவுக்காக காத்திருந்தார். கணவரும் கற்பு நெறியுடன் வந்து தனது மனைவியிடம் சேர்ந்தார். இந்த காலத்தில் தங்கள் தேவைக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது சகஜமாகிவிட்டது.

சசிகலா : எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும் இந்த கால வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது. பெண்களை படிக்க வைக்கிறார்கள். வேலைக்கு அனுப்புகிறார்கள். அடிமைத்தனம் இல்லை. சாதிய பாகுபாடுகள் குறைந்து உள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

காயத்ரி : அறுசுவை உணவு தமிழர் பண்பாடு. சுவையே இல்லாத எது, எதையோ சாப்பிடுவது இன்றைய நாகரிகம்.

பேராசிரியை சியாமள வள்ளி : தமிழர்கள் வாழ்வியலில் பனை மற்றும் தென்னங்கள்ளும் இடம் பெற்றிருந்தது. கள்ளும், புலாலும் விருந்துகளில் முக்கிய இடம் பிடித்தன. கள் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று, மது தமிழர்கள் வாழ்க்கையை கெடுக்கிறது. குடிப்பழக்கம் இல்லாத இளைஞனை கண்டுபிடிப்பது இயலாத காரியமாகி விட்டது. இளம்பெண்களும் குடிக்கும் கலாசார சீரழிவு ஏற்பட்டு உள்ளது. இதை எல்லாம் மாற்றி தமிழர் கலாசாரம், பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்று இந்த சித்திரை நாளில் சபதமேற்போம்.

 (கலந்துரையாடலில் பங்குபெற்றவர்கள் ஈரோடு மாவட்டம் அறச்சலூர் நவரசம் மகளிர் கல்லூரி மாணவிகள்). 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.