Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2016

வைகோ திடீர் விலகல்! தலைவர்களின் ரியாக்‌ஷன் என்ன


வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும், முதல்வராகும் வாய்ப்பு கிடைக்காததால் வைகோ,  போட்டியிலிருந்து விலகியிருக்கலாம் என்று திமுக உள்ளிட்ட கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக மதிமுகவை சேர்ந்த விநாயகா ரமேஷ் இன்று திடீரென வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அடுத்த நிமிடமே கோவில்பட்டில் தொகுதியில் போட்டியிடவில்லை என்று வைகோ திடீரென அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு கட்சியினரை மட்டுமல்லாமல், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களையும் அதிர வைத்துள்ளது.

வைகோவின் இந்த முடிவு குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், "வைகோ போட்டியிடவில்லை என்ற அறிவிப்பு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்து தேர்தலில் போட்டியிட வேண்டும். கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் வைகோ திமுக மீது புகார் கூறியிருக்கிறார். மக்கள் நலக்கூட்டணியில் ஒருபோதும் குழப்பம் ஏற்பட்டதில்லை. முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என வைகோ விரும்பியதில்லை" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், சாதி மோதல் ஏற்படாமல் தடுக்க வைகோ இத்தகைய முடிவை எடுத்துள்ளார் என்றும், போட்டியிட்டு பதவிக்கு வருவதை விட சமூக ஒற்றுமைதான் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.

தமாகாவை சேர்ந்த ஞானதேசிகன் கூறுகையில், "தேர்தலில் போட்டியிட வைகோ வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். சாதி மோதலை ஏற்படுத்த திமுக திட்டமிட்டுள்ளதாக வைகோ கூறியிருந்தார். வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், "கோவில்பட்டி திமுக வேட்பாளர் சாதி ரீதியாக பெரும்பான்மையானவர் அல்ல. முதல்வராகும் வாய்ப்பு கிடைக்காததால் வைகோ விலகியிருக்கலாம்" என்று குற்றம்சாட்டினார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், மக்கள் நலக்கூட்டணியின் குழப்பத்தின் உச்சக்கட்டம் வைகோ முடிவு என்றும், தேர்தல் விளையாட்டாக போய் விட்டதா என தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தேர்தல் தோல்வி பயம் இப்போதே வைகோவுக்கு வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் கூறுகையில், வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபண்ணா , அரசியலில் குழப்பமான முடிவை எடுக்கக் கூடியவர் வைகோ என்று குற்றம்சாட்டினார்.

பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலு , "ராணுவ ரகசியத்தை வெளிப்படுத்தியது போல் வைகோ முடிவை அறிவித்துள்ளார். வைகோவை போல் விஜயகாந்தும் தனது முடிவை அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.

மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் கூறுகையில், அதிமுகவுக்கு மாற்று என வைகோ கூறி வந்தது பொய் என நிரூபணமாகிவிட்டது என்றும், ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வைகோ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.