Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2016

ஆணவம் கூடாது!-சிறுகதை


ஆகாயத்தில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்தது அந்த வண்டு.
அந்த வண்டின் அருகே வண்ணத்துப் பூச்சிப் பறந்து வந்தது.
""வண்டே! வண்டே! நீ எதற்கு வட்டமிட்ட படியே பறந்து கொண்டிருக்கிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று அக்கறையுடன் கேட்டது.
""வண்ணத்துப் பூச்சியே! நான் என்னுடைய மகிழ்ச்சிக்காக வட்டமடித்தபடியே பறந்து கொண்டிருக்கிறேன். நீ நினைப்பது போல் எனக்கொன்றும் ஆகவில்லை. வேண்டுமானால் நீயும் என்னோடு சேர்ந்து வட்டமடித்தபடி பறந்திடு இல்லை என்றால் இந்த இடத்தை விட்டு சென்று விடு. எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்காதே!'' என்றது வண்டு.
""வண்டே! உனக்கு நான் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வரவில்லை. உன்னை நலம் விசாரித்து நீ சுற்றுவதின் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வந்தேன். ஆனால், நான் வந்த இடத்தில் நீதான் என்னோடு வீணாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாய். என் பேச்சு உனக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். எனவே, நான் இந்த இடத்தை விட்டுச் சென்று விடுகிறேன்,'' என்றபடி அங்கிருந்து பறந்து சென்றது வண்ணத்துப் பூச்சி.
வீணாக நாம் வண்ணத்துப் பூச்சியின் மனதை புண்படுத்தி விட்டோமோ என்று துளியளவு கூட கவலைப்படவில்லை வண்டு. அது அமைதியுடன் இல்லாமல் விர்... விர்... என்று இரைந்தபடி அந்த இடத்தையே வட்டமடித்து பறந்து கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அந்தப் பக்கத்தில் ஓர் சிட்டுக் குருவி பறந்து வந்தது.
அது வண்டைக் கவனித்தது.
""வண்டே! நீ எதற்காக இப்படி வட்ட மடித்துக் கொண்டிருக்கிறாய். நீ வட்ட மடிப்பதைப் பார்க்கிறபோது உனக்கு என்னவோ நேர்ந்து விட்டது போன்றுத் தோன்றுகிறது. என்ன... நான் சொல்வது சரிதானே!'' என்று கேட்டது.
குருவியை கோபத்துடன் பார்த்த வண்டு, ""குருவியே! நான் எப்படிப் பறந்தால் உனக்கென்ன? நான் என்னுடைய மகிழ்ச்சிக்காக இப்படிப் பறந்து கொண்டிருக்கிறேன். நீ அந்த மகிழ்ச்சியினையே கெடுத்து விடுவாய் போன்று தெரிகிறதே! போ... போ... இங்கிருந்து போ...'' என்று குருவியை விரட்டியது வண்டு.
வண்டு தன் மீது தேவையில்லாமல் கோபப்படுகிறது என்று மனதில் நினைத்த குருவி அமைதியுடன் அந்த இடத்தை விட்டுச் சென்றது.
வண்டோ தொடர்ந்து வட்டமிட்டபடியே பறந்து கொண்டிருந்தது.
அந்நேரத்தில் வண்டின் அருகே புறா ஒன்று பறந்து வந்தது.
""வண்டே! எதனால் வட்டமிடுகிறாய்? உனக்கு என்னாயிற்று?'' என்று கேட்டது புறா.
வண்டோ புறாவைக் கோபத்துடன் பார்த்தது.
""புறாவே! நீ மட்டும் என்னை நலம் விசாரிக்காமல் விட்டு விடுவாயா என்ன? நான் எனது மகிழ்ச்சிக்காக இப்படி வட்டமடித்துக் கொண்டிருக்கிறேன். என்னை விசாரிக்க நீ யார்? மரியாதையாக இந்த இடத்தை விட்டுச் சென்று விடு,'' என்றது.
""வண்டே! நீ எதனால் என் மீது இந்த அளவுக்குக் கோபப்படுகிறாய்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே! சரி சரி... என் மீது கோபப்படும் உன்னிடம் நான் என்ன பேச முடியும்? அதனால் நான்தான் அமைதியாக சென்றிட வேண்டும்,'' என்று அமைதியுடன் சென்றது புறா.
வண்டோ மகிழ்ச்சியுடன் பறந்து கொண்டிருந்தது.
"என்னுடைய கோபத்தினால் என் அருகே வருகிறவர்களை எல்லாம் நான் விரட்டி விட்டேன். இனிமேலும் நான் என் அருகே வருகிறவர்களை எல்லாம் உடனடியாக விரட்டி விடுவேன்' என்று மனதுக்குள் கூறிய படியே பறந்து கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அந்த வண்டின் அருகே கழுகு வந்தது.
கழுகைப் பார்த்து வண்டு எரிச்சலடைந்தது. அதே நேரத்தில் கழுகு வண்டைப் பார்த்து, ""எதற்காக வட்ட மடிக்கிறாய்?'' என்று கேட்டது.
அதனைக் கேட்ட வண்டு ஆத்திரமடைந்தது.
""கழுகே! நீ பெரிய பறவை என்பதால் நீ கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்லிட வேண்டுமா? நான் எதற்காகவாவது பறந்து கொண்டிருப்பேன்... உனக்கென்ன? மரியாதையாக இந்த இடத்தை விட்டுச் சென்று விடு,'' என்றது.
திடீரென தன் மீது கோபப்பட்ட வண்டை தன் கூர்மையான அலகினால் கொத்தி விட்டு சென்றது கழுகு.
வண்டு வலியால் துடித்தது.
வீணாகப் பிறரை பகைத்துக் கொள்கிறவர்களுக்கு துன்பம்தான் ஏற்படும் என்பதை உணர்ந்தது வண்டு.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.