Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 15, 2016

கண்மணியை காணோம்!-சிறுகதை


அத்திபட்டு என்னும் ஊரில் ஒரு ஏழைச் சிறுவன் இருந்தான். அவன் பெயர் சுஜன். அப்பாவும், அம்மாவும் இறந்த பிறகு அவன் முற்றிலும் தனிமையானான்.
அவனுக்கு பள்ளியில் அகில் எனும் பெயருடைய நெருக்கமான நண்பன் ஒருவன் இருந்தான். அகில் அப்பா பணக்காரர். சுஜனை அன்புடன் தன் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
சுஜன் அங்கு தங்கி மகிழ்ச்சியாகப் படித்தான். இருவரும் மிகவும் நெருக்கமாக வளர்ந்தனர். என்றாலும், அவர்கள் குணத்தில் பெரிய வித்தியாசம் இருந்தது.
சுஜன் உற்சாகத்துடன் பாடுபட்டுப் படித்தான். அகிலுக்கு படிப்பில் நாட்டம் குறைவு. வீட்டில் உள்ள பணத்தைச் செலவு செய்து, உல்லாசமாக வாழ்ந்தான்.
இளமைப் பருவம் கடந்து சென்றது. சுஜன் நன்றாகப் படித்து அறிவும், திறமையும் கொண்ட இளைஞனாக மாறினான். அரசாங்கத் தேர்வு எழுதி முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். வேலை கிடைத்ததும் அகில் வீட்டாரிடம் விடை பெற்று பணியிடத்திற்குப் பயணமானான்.
அதற்கு முன்பு அகில் இடம், நன்றாகப் படிக்க வேண்டும் என்றும், தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றும் அவனிடம் அன்புடன் கேட்டுக்கொண்டான். ஆனால், அகில் அதை பொருட்படுத்தவில்லை.
அகில் நன்றாகப் படிக்காமல் தேர்வு எழுதியதால், தோல்வியடைந்தான். அப்படியிருக்கும் போது அவனுடைய அப்பாவும், அம்மாவும் இறந்தனர்.
அகில் தனியாக இருப்பதால், கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லாததால், தான் தோன்றித்தனமாக வளர்ந்தான். வீட்டுப் பணத்தை எடுத்து ஊதாரிதனமாக செலவிட்டான். பணமெல்லாம் தீர்ந்தவுடன் வீட்டையும், நிலத்தையும் விற்றான். கடைசியில் அவனுக்கு ஒன்றும் இல்லை. அகில் என்னும் பணக்காரன், பிச்சைக்காரனாகி தன் ஊரிலே பிச்சையெடுத்தான்.
ஊர்க்காரர்கள் அவனுக்கு உதவி செய்யவில்லை. அகில் குடும்பத்தின் உதவி பெற்று வாழ்ந்தவர்கள் கூட இப்போது அவனை உதறித் தள்ளினர். அப்படிப்பட்ட நிலையில் அவன் தன் உற்ற நண்பனைப் பற்றி நினைத்துப் பார்த்தான்.
உயர்ந்த பதவியில் நல்ல நிலையில் இருந்தான் சுஜன்.
"சுஜன் என்னைக் கைவிட மாட்டான். என் அப்பாவும், அம்மாவும் அவனுக்கு நீண்ட காலம் உதவி செய்திருக்கின்றனர். நானும் அவனும் குழந்தை பருவம் முழுக்க ஒன்றாகத்தானே வாழ்ந்தோம்!' என்று நினைத்தான்.
கடந்த காலத்தின் நல்ல நினைவுகளைச் சுமந்தபடி அகில், சுஜன் வசிக்கும் இடத்திற்குச் சென்றான். மிகவும் குளிராக இருந்தது. அவன் உடல் நடுங்கியது. பசியால் வயிறு குமைந்தது. அவன் வெகு தூரம் நடந்து வந்தான்.
"இந்தத் துன்பங்களுக்கெல்லாம் ஒரு முடிவு வரும். என் நண்பனைப் பார்த்தவுடன் இந்தக் குளிரும், பசியும் அகலும்' என்ற நம்பிக்கையுடன் அவன் நடந்து வந்தான்.
கடைசியில் அவன் சுஜன் மாளிகைக்கு வந்தான். வெளியே நின்ற காவல்காரனிடம் சுஜனைப் பார்க்க வேண்டும் என்றான்.
ஆனால், காவல்காரன் அவனை உள்ளே விடவில்லை. அவனிடம் தன் பெயரையும், விவரத்தையும் சொல்லிவிட்டு அகில் வெளியில் காத்திருந்தான்.
தன் நண்பன் ஓடி வந்து தன்னைக் கட்டிப் பிடித்து வரவேற்பான் என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. காவல்காரனிடம் திட்டு வாங்கியதுதான் மிச்சம்.
""தனக்கு உன்னைப் போன்ற பிச்சைக்காரர்கள் நண்பனாக இருக்க முடியாது என்று என் எஜமான் சொன்னார். உடனே இங்கிருந்து வெளியே போய் விடு!'' என்று காவல்காரன் விரட்டினான்.
அகில் மனம் நொந்து அழுதான்.
""இது பெரிய மோசடி. அவன் எனக்குக் கடமைப்பட்டவன். ஆனால், அவன் இப்போது என்னைக் கண்டுகொள்ளவில்லை!'' என்று வருந்தினான்.
புலம்பிக்கொண்டே அகில் நடந்தான். பக்கத்தில் உள்ள நதியின் பாலத்தில் ஏறிக் கீழே பார்த்தான். நதியில் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தான்.
சட்டென்று, பின்னால் யாரோ அழைப்பது போலக் கேட்டது. அகில் திரும்பிப் பார்த்தான். அங்கே ஒரு அழகான பெண் நின்று கொண்டிருந்தாள்.
""ஐயா, நீங்கள் எதற்கு நதியில் குதிக்க முற்படுகிறீர்கள்? வாழ்க்கை அவ்வளவு மோசம் இல்லையே?'' என்றாள் அவள்.
""என் வாழ்க்கை மிகவும் மோசம். எனக்கு யாருமில்லை. நான் யாருக்கும் தேவைப்படாதவன். என் நண்பனை நான் மிகவும் நம்பினேன். அவனுக்கும், நான் தேவைப்படவில்லை. பிறகு நான் எதற்கு உயிர் வாழ வேண்டும்?'' என்றான்.
ஒரே மூச்சில் அகில் தன் கஷ்ட நிலையை விவரித்தான்.
""நானும் தனியாகத்தான் இருக்கிறேன். என் பெயர் கண்மணி. எனக்கும் அப்பா, அம்மா இல்லை. துன்பத்தில் உழல்பவர்களுக்கு கடவுள் உதவி செய்வார். என்னுடன் என் வீட்டுக்கு வாருங்கள்!'' என்று அழைத்தாள்.
நிம்மதியுடன் அவள் வீட்டுக்குச் சென்றான். வீட்டுக்குச் சென்றதும், தன்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் அவளிடம் சொன்னான்.
""நீங்கள் இங்கேயே தங்குங்கள். உங்கள் படிப்பை நிறைவு செய்யுங்கள். இரண்டு வருடங்கள் கடந்தால் மீண்டும் அரசாங்கத் தேர்வு வரும். அதை எழுதி வெற்றி பெற்று வேலை தேடுங்கள். உங்களைக் கைவிட்ட நண்பனைப் பழிவாங்குங்கள். நீங்கள் நதியில் குதித்து உயிர் விடுவதை விட இதுதானே நல்லது!'' என்றாள்.
அவள் சொன்ன அன்பான வார்த்தைகளைக் கேட்டு, அவன் மனம் மாறியது.
அகில் படிப்பைத் தொடர்ந்தான். தான் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு அதிகரித்தது. அவன் நன்றாகப் படித்து தேர்வு எழுதினான். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். அத்துடன், அவனுக்கு உயர்ந்த வேலையும் கிடைத்தது.
வேலை கிடைத்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்வதற்கு கண்மணியை தேடி வந்தான் அகில். ஆனால், அவள் வீட்டில் யாருமில்லை. அண்டை அயல்வாசிகளிடம் கேட்டான். அவள் எங்கு போனாள் என்ற விவரம் அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. பட்டணத்திற்குச் சென்று எங்கெங்கோ தேடி அலைந்தான். அவளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
""அவள் என்னைத் திருத்துவதற்காக வந்த தேவதையாகத்தான் இருக்க வேண்டும். அவள் கடமை முடிந்ததும் மறைந்து போய் விட்டாள் போலிருக்கிறது!'' என்று எண்ணிச் சமாதான மடைந்தான்.
பிறகு வேலையில் சேர்ந்தான். ஆனால், அவனால் கண்மணியை மறக்க முடியவில்லை.
மீண்டும் ஒருமுறை சுஜனைப் பார்க்க வேண்டும் என்று வந்தான் அகில். இந்த முறை அவன் விலையுயர்ந்த பட்டாடைகளும், பதவிச் சின்னங்களும், வைர ஆபரணங்களும் அணிந்து வந்தான்.
சுஜன் வீட்டு முன்னால் இருந்த காவல்காரர்கள், அகிலைப் பார்த்ததும் வணங்கினர்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு காவல்காரன் தன்னை உள்ளே விடாமல் துரத்திய சம்பவத்தை சுஜன் நினைத்துப் பார்த்தான்.
அகிலை வரவேற்க, சுஜனும், கண்மணியும் வந்துக் கொண்டிருந்தனர்.
கண்மணியை பார்த்ததும், அகில் திகைத்து நின்றான்.
""அன்று உன்னைத் திருத்துவதற்காகத்தான் நான் கண்மணியை அனுப்பினேன். நான் உனக்கு ஆதரவு தந்திருந்தால், நீ அப்படியே தங்கிக் கொண்டு, முன்னேறாமல் பழையபடி உன் வாழ்க்கையை பற்றி நினைத்துப் பார்க்காமலே இருப்பாய். அதனால்தான் என் ஒன்று விட்ட தங்கை கண்மணியை அனுப்பினேன். இப்போது கண்மணி உன்னைத்தான் விரும்புகிறாள். உங்கள் திருமணம் நடக்கட்டும்!'' என்றான் சுஜன்.
தன் நண்பனின் அன்பை கண்டு மகிழ்ந்தான். என்றோ தானும், அவனது பெற்றோரும் செய்த உதவி, இன்று தனக்கு நன்மையாக மாறியதை எண்ணி மகிழ்ந்தான் அகில்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.